

சிறந்த நடிகர், வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆகிய முகங்களைத் தாண்டி, அனிருத்துடன் தனுஷ் அமைக்கும் ’கொலவெறி’ மெட்டுக்களின் கூட்டணி தொடர்வதில் கொண்டாடித் தீர்க்கிறார்கள் இருவரது ரசிகர்களும். வணிக சினிமாவுக்கு வெளியே உலக சினிமாவுக்கான படங்களை வெற்றிமாறனுடன் இணைந்து தயாரிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். அதற்குப் பரிசாக இவர்களது ‘காக்கா முட்டை’ திரைப்படம் கவனத்தைப் பெற்றுவருகிறது.
பாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட பிறகு தனுஷின் ஸ்டைலும் ஆடைகளைத் தேர்ந்துகொள்வதில் கடைப்பிடிக்கும் ஆர்வமும் அதிகமாகிவிட்டன. ஒரு விருது விழாவுக்கு டை அணிந்து கோட் சூட்டில் வருவார்.
அடுத்த விழாவுக்கு டை தேவைப்படாமல் டி சர்ட் மீது ’ஜீரோ கட்’ கோட் அணிந்து வருவார். சிறப்புக் காட்சிகள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஃப்யூஷன் பாணி டி சர்ட்கள் அணிந்து வருவார்.
தனது படங்களின் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு ப்ளைன் காட்டன் சட்டையும் வேட்டியும் அணிந்து வந்து ஆச்சரியப்படுத்துவார்.
கறுப்பு மற்றும் வெள்ளை வண்ணச் சட்டைகள் அணிவதில் அதிக ஆர்வம் காட்டும் தனுஷ் மறந்தும் பென்சில் பிட் ஜீன்களை அணியமாட்டார். ஆக மொத்தத்தில் தனுஷ் தற்போது ஆடைகளின் மன்னன்.