

காதலைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் சொல்லித் தீருவதில்லை. ஆன்மாவின் துடிப்பு, இரு உயிர்கள் ஒன்றாகும் சங்கமம் என்றெல்லாம் சொல்லப்படும் இந்த உணர்வு, ஒரு விதத்தில் அடுத்தவர் மீது கொள்ளும் அதீத ஆதிக்க மனப்பான்மையே என்ற பார்வையும் உண்டு. காதலர்கள் தாம் விரும்புகிறபடியே மற்றவர் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தையே ‘உன் விருப்பப்படியே நான் இருப்பேன்‘ என்ற காதல் மொழிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.
அதீதமான எதிர்பார்ப்பையும் ஒருவருக்காக மற்றவர் மாறும் விழைவையும் சுவையாக, ஆனால் மாறுபட்ட முறைகளில் கூறும் தமிழ் - இந்திப் பாடல்களைப் பார்ப்போம். உனக்கு விருப்பமானவற்றையே நான் பேசுவேன். நீ பகலை இரவு என்று சொன்னால் நானும் அப்படியே சொல்வேன் என்கிறான் இந்திக் காதலன். நான் பேச நினைப்பதை நீ பேச வேண்டும் என்று கோருகிறாள் தமிழ்க் காதலி. இரு பாடல்களையும் பாருங்கள்:
இந்திப் பாட்டு.
திரைப்படம்: சஃபர் (பயணம்)
பாடலாசிரியர்: இந்திவர்
பாடியவர்: முகேஷ்
இசையமைப்பு: கல்யாண் ஆனந்த்ஜி
பாடல்:
ஜோ தும்கோ பசந்த் ஹோ
வோ ஹீ பாத் கஹேகா
தும் தின் கா அகர் ராத் கஹேகா
தோ ராத் கஹேகா
...
...
பொருள்:
உனக்கு என்ன விருப்பமோ
அதையே என் உரையாகக் கொள்வேன்
நீ பகலை இரவென்று கூறினால்
புகலுவேன் நானும் அது இரவென்றே
என்னுடன் நீ இருந்திராவிட்டால்
இறந்திருப்பேன் என்றோ நான்
நிறைவேறிவிட்டது வாழ்க்கையின்
நீண்ட லட்சியம் உன் மூலம்
வாழ்வை உனது வசீகரம் என
வாயார நான் சொல்லுவேன் (உனக்கு என்ன விருப்பமோ)
விரும்புவேன் (உன் சொல்) நிறைவேற்றுவேன்
விரிவாகப் பாராட்டுவேன் - உன்னை மட்டும்
கண்களில் ஒளி இருக்கும்வரை
காணுவேன் உன்னை மட்டுமே
என்னுடைய பேச்சுகள் மூலம்
எடுத்துரைப்பேன் உன் எழில் யாவும்
உனக்கு என்ன விருப்பமோ
அதையே என் உரையாகக் கொள்வேன்
நீ பகலை இரவென்று கூறினால்
புகலுவேன் நானும் அது இரவென்றே.
இதே கருத்தை இன்னொரு பார்வையில் எடுத்துக்காட்டும் தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.
திரைப்படம்: பாலும் பழமும்.
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்திரராஜன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல்:
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் யாவும் நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து பசி ஆற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்
சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நம்மையன்றி வேறேதும் இல்லை
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.