

வால் டிஸ்னியின் வெற்றிகரமான லைவ் - ஆக்ஷன் படங்களில் ஒன்று 1961-ல் வெளியான ‘த பேரண்ட் ட்ராப்’. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் மௌரீன் ஒஹராவும் பிரிட்டிஷ் நடிகை ஹைலே மில்ஸும் (இரட்டைக் குழந்தையாக நடித்திருப்பார், அப்போது அவருக்கு வயது 15.) இப்படத்தில் நடித்திருப்பார்கள்.
பிரிந்து கிடக்கும் பெற்றோரைச் சேர்க்கும் இரட்டைக் குழந்தைகள் பற்றிய இந்தப் படத்தில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளுக்குப் பஞ்சமேயில்லை. இந்தப் படம் இந்தியாவில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
பிரபல நடிகரும், திரைக்கதையாசிரியருமான ஜாவர் சீதாராமன் இந்த ஹாலிவுட் படத்தைத் தழுவி, தமிழுக்குத் தகுந்தாற்போன்ற காட்சிகளைச் சேர்த்து ஒரு தமிழ்ப் படமாக்கினார். இந்தப் படத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஏவி.மெய்யப்பன் தயாரித்தார்.
1965-ல் வெளியான இந்தப் படத்தின் தலைப்பு ‘குழந்தையும் தெய்வமும்’. அப்போது வெற்றிகரமான இரட்டை இயக்குநர்களாக இருந்த கிருஷ்ணன்-பஞ்சு இந்தப் படத்தை இயக்கினார்கள். ஜேம்ஸ் பாண்ட் வகை வேடங்களில் நடித்துவந்த ஜெய்சங்கரும், பல மொழிப் படங்களில் நடித்துவந்த நடிகை ஜமுனாவும் பிரிந்திருக்கும் பெற்றோராக நடித்தனர். துடுக்குத்தனமும், வெகுளித்தனமும் நிறைந்த இரட்டைக் குழந்தையாகக் குட்டி பத்மினி நடித்திருந்தார்.
இதில் நடித்ததற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார் குட்டி பத்மினி. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவரை அள்ளி அணைத்து முத்தமிட்டு விருதைக் கொடுத்தார். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். நூறு நாட்களுக்கும் மேல் ஓடியது. தென்னிந்திய சினிமாவிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பல இடங்களில் வாரிக் குவித்தது.
இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமான பிரதான அம்சங்களில் ஒன்று எம்.எஸ். விஸ்வநாதனின் மயக்கும் மெல்லிசை. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன.‘கோழி ஒரு கூட்டிலே’, ‘பழமுதிர் சோலையிலே’, ‘அன்புள்ள மன்னவனே’ ‘குழந்தையும் தெய்வமும்’, ‘நான் நன்றி சொல்வேன்’, ‘என்ன வேகம் சொல்லு பாமா’ ஆகிய பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன.
இதே படம் 1966-ல் தெலுங்கிலும் 1967-ல் இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
இந்தி உள்ளிட்ட இப்படத்தின் மறுஆக்கங்களில் உத்திரவாத வெற்றிகளைத் தேடிக் கொடுத்த அந்நாளின் புகழ்பெற்ற இரட்டை இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணன்-பஞ்சு. கிருஷ்ணன் கோயம்புத்தூரில் ஒரு லேபரட்டேரியனாகவும், பஞ்சாபகேசன் என்ற பஞ்சு திரைக்கதை உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் தங்கள் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்.
தொகுப்பு: ரோஹின்