

‘அட்டெம்ட்’ கார்த்திக் (விஜய் ஆண்டனி), ‘மெரிட்’ மெல்லினாவை (சுஷ்மா) லேண்ட்மார்க் கடையில் சந்திக்கிறார். இருவருமே வழக்கறிஞர்கள். இருவருக்கும் ஆரம்பத்தில் இது தெரியாமல் ஒரே அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துவிடுகிறார்கள். வீட்டு உரிமையாளர் யோசனைப்படி, இருவரும் ஷேரிங் அடிப்படையில் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிக்கொள்ளச் சம்மதிக்கிறார்கள். ஆனால், இருவருமே வழக்கறிஞர்கள் என்று அப்போதுதான் தெரியவருகிறது. ஒரே இடத்தில் ஒரே தொழிலை இருவர் எப்படிச் செய்ய முடியும்? இடம் யாருக்கு என்கிற பிரச்சினை எழுகிறது. யாருக்கு முதலில் கேஸ் கிடைக்கிறதோ அவருக்கே இந்த இடம் சொந்தம் என்று முடிவு செய்கிறார்கள். நிலத் தகராறில் சென்னைக்கு வரும் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கருக்கு வழக்கறிஞர்களாக வாதாட முடிவு செய்கிறார்கள்.
கார்த்திக், மெல்லினாவுக்குள் காதல் இருக்கும். ஆனால், அதைக் காட்டிக்கொள்ளாமல் மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு நடுவில் மெல்லினாவைக் கொல்லச் சிலர் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மர்ம நபர்களின் பிடியில் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள்? அந்த வழக்கு என்ன ஆனது? லேண்ட்மார்க்கில் ‘காதலுக்கு மரியாதை’ சிடியில் தந்த காதல் அடையாளம் என்னவாக மாறியது?
முந்தைய படங்களில் தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங் களைத் தேர்வுசெய்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் சறுக்கி யிருக்கிறார். ரொமான்டிக் காமெடி கலந்த திரைக்கதைக்கு விஜய் ஆண்டனியின் முகமும், பாவனையும் பொருந்துவேனா என்று அடம்பிடிக்கிறது. அவர் காமெடி செய்ய முயற்சித்தாலும் எடுபடவில்லை. பாடல் காட்சிகளில் தடுமாறுகிறார். வசனங்கள் பேசுவதில் மட்டும் முன்னேறியிருக்கிறார்.
அறிமுக நாயகி சுஷ்மா ராஜ் விஜய் ஆண்டனியுடன் பேசும்போது கோபப்படுவது, எம்.எஸ் பாஸ்கர் அண்ட் கோவிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது, காதலில் உருகுவது என சுமார் நடிப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.
நண்டு ஜெகன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், பசுபதி, ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் எனப் பலர் இருந்தும் சிரிப்புக்குப் பஞ்சம். புதுமையோ அழுத்தமோ இல்லாத வசனங்களும் காட்சிகளும் பாடல்களும் அலுப்பை மட்டுமே தருகின்றன.
படம் முழுக்க சீரியஸாய் வரும் ஒரே கேரக்டர் இன்ஸ்பெக்டர் ஷரத். ஆனால், இந்தப் பகுதியும் த்ரில்லருக்கான தன்மையில் அமையாமல் பொறுமையைச் சோதிக்கிறது.
பசுபதி மகனும், எம்.எஸ். பாஸ்கர் மகளும் காணாமல் போய் ஒரு வாரம் ஆனாலும் அவர்கள் ஊரில் யாருமே தேட மாட்டார்களா?
கடைசியில் செட் பிராபர்டி போல எல்லோரையும் ஒரே இடத்தில் வரவழைத்து ‘சுபம்’ போட்டு முடிக்க வேண்டிய இடத்தில்தான் சிரிப்பு தொடங்குகிறது.
ஓமின் ஒளிப்பதிவு ஓ.கே ரகம். தீன தேவராஜின் இசையில் ‘வாடி குட்டி லேடி’, ‘பல கோடிப் பெண்களிலே’ பாடல்கள் வசீகரிக்கின்றன.
நாயகனும், நாயகியும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். அதனால்தான் இந்தியா பாகிஸ்தான் என்னும் தலைப்பு. இந்தக் காரணம் ஏற்படுத்தும் சலிப்பைப் படமும் ஏற்படுத்துகிறது.