

‘உலக நாயகன்' என்று இன்றைக்கு எல்லோராலும் அறியப்படுகிற கமல்ஹாசன் அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு காதில் பூ வைத்தவாறு, ‘அம்மாவும் நீயே அப்பா வும் நீயே’ என்று பாடி சிறுபையனாக அறிமுகமான ‘களத்தூர் கண் ணம்மா’ படத்தில்தான் நானும் உதவி இயக்குநராக காலடி எடுத்து வைத்தேன்.
எடிட்டிங் அறையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பணியாற்றி எடிட்டிங் குறித்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண் டாலும், முதன்முதலாகப் படப்பிடிப்பு தளத்துக்கு போனபோது என்னை அறியாமலேயே ஒருவித பயம் தொற் றிக்கொள்ளவே செய்தது.
பிறந்த வீட்டில் 20 ஆண்டுகளாக ஓடி ஆடித் திரிந்த ஓர் இளம்பெண், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது அங்கே பார்க்கும் பலரும் புதிய நபர்களாகத் தென்படுவார்கள். அப்படித்தான் எடிட்டிங் துறையில் இருந்து உதவி இயக்குநர் பொறுப்பேற்று, படப்பிடிப்பு தளத்துக்குப் போனபோது பிறந்த வீட்டில் இருந்து, புகுந்த வீட்டுக்குள் நுழைவதைப் போன்ற ஓர் உணர்வுதான் எனக்கும் இருந்தது.
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை இயக்குவதற்கு டி. பிரகாஷ் ராவ் அவர்கள் ஒப்பந்தமாகி இருந்தார். எல்லோ ராலும் அறியப்பட்ட இயக்குநர் மேதை எல்.வி.பிரசாத் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர், டி.பிரகாஷ் ராவ். எம்.ஜி.ஆர் நடித்த ‘படகோட்டி’ படத்தை இயக்கியவர்.
சிறந்த இயக்குநரான அவரிடம் வேலை கற்றவர்தான் மரியாதைக்குரிய இயக்குநர் ஸ்ரீதர். படப்பிடிப்புக்குத் தயாராக வேண்டிய அனைத்து வேலை களையும் முறையே திட்டமிடுவதில் கெட்டிக்காரர். அதே போல, படப் பிடிப்புக்கான விஷயங்கள் முழுமையாக தயாரான பிறகுதான் டி.பிரகாஷ் ராவ் செட்டுக்குள்ளேயே நுழைவார். அப்படி ஒரு ஃபர்பெக்ட் மனிதர். ஒரு உதவி இயக்குநராக அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. நானும் அவரிடம் நிறைய வேலைகளைக் கற்றுக்கொண்டேன்.
ஏவி.எமில் எந்த ஒரு படம் எடுக்கத் தொடங்கும் முன்பும் அந்த படத்துக்கான முழு திரைக்கதையும் தயாராக இருக்க வேண்டும். முதலில் கதையைப் படித்து இறுதி செய்தபிறகு பூஜை போடலாம் என்பதில் உறுதியாக இருப்பார், செட்டியார். அந்த நாட்களில் சிறப்பாக திரைக்கதை எழுது வதில் அபாரமான கெட்டிக்காரர் ஜாவர் சீதாராமன். இவர்தான், ‘அந்த நாள்’, ‘செல்லப்பிள்ளை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘ராமு’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட ஏவி.எமின் பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்.
நல்ல எழுத்தாளர், நிறையப் புத்தகங்கள் வாசிப்பவர். நல்ல நடிகரும் கூட. அவர் திரைக்கதை, வசனம் எழுதி வரிசைப்படுத்தி இருப்பதை படிக்கும் போது அதில் அவ்வளவு நேர்த்தி தெரியும். அந்த ஸ்கிரிப்ட்டை திறமை யோடு இயக்கினாலே படம் வெற்றிதான். இன்றைய இளைஞர்களுக்கு இதை அறிவுரையாக சொல்லாமல் அனுப வமாக சொல்கிறேன். முழு ஸ்கிரிப்ட்டும் தயாரான பிறகு படப்பிடிப்புக்குப் போனால், பெரிதாக குழப்பம் இருக் காது. விரைந்து படமாக்கவும் முடியும். கட்டடம் கட்டுவதற்கு முன் கட்டட பிளானை சரியாகப் போடுவது மாதிரிதான் இதுவும்.
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஸ்கிரிப்ட் தயாரானது. செட்டியார், அவருடைய பிள்ளைகள், இயக்குநர், உதவி இயக்குநர் எல்லோரும் சுற்றிலும் இருக்க, நடுவில் ஜாவர் சீதாராமன் அமர்ந்து கதை படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில் டி.கே.சண்முகம், நவாப் ராஜ மாணிக்கம் ஆகியோர் தங்களது நாடகக் கம்பெனிகளில் நாடகம் அரங்கேற்றுவதற்கு முன், இப்படித்தான் நாடகக் குழுவினரைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு கதையையும், காட்சி களையும் விளக்குவார்கள்.
அதே மாதிரியான சூழலில் அமர்ந்து கதை கேட்போம். ஜாவர் சார் கதை சொல்ல சொல்ல… செட்டியார் தலை யாட்டிக்கொண்டே இருப்பார். தலை ஆட்டுவதை நிறுத்தினால் ஏதோ பிரச்சினை என்று எங்களுக்குப் புரிந்து விடும். ‘மீண்டும் இரண்டு சீன் முன்னாடி படிங்க, ஜாவர் ’ என்பார். படித்ததும், ‘கதைப்படி பம்பாயில் இருப்பவன், அடுத்து உடனே சென்னையில் இருப்பது போல் இருக்கிறது. இது ஜெர்க்காக இருக்கிறதே. இதுக்கு ஒரு லீட் தேவைப்படுகிறது’ என்பார். அப்படி கதை முழுமையாக தயாராகும்போது கதையில் இப்படிப்பட்ட விஷயங்கள் முறையாக சரி செய்யப்படும்.
இறுதி யான திரைக்கதை வடிவம் தயாரானதும் முழுவதும் டைப் செய்து, பைண்ட் செய்யப்பட்டு உதவி இயக்குநர் முதல் எடிட்டிங் அறை வரைக்கும் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரதி இருக்கும். அந்தப் படம் முடியும் வரை எந்த நேரத்திலும் எந்த காட்சி பற்றி விளக்கவும் தயாராக இருக்க வேண்டும். அப்போது நாங்கள் தயாராகவே இருப்போம். சீன் நம்பரைச் சொன்னால் ஸ்கிரிப்ட்டை பார்க் காமலேயே காட்சியைக் கூறுவோம். அந்த அளவுக்கு மனப்பாடம் செய்து வைத்திருப்போம்.
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நான் நான்காவது உதவி இயக்குநர். முதன்முதலில் செட்டுக்கு போனதும் கிளாப் அடிக்கிற வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. எடிட்டிங் அறையில் அமர்ந்து கிளாப் போர்டு இணைக்கும் வேலைகளை செய்தாலும் முதன் முதலில் படப்பிடிப்பு தளத்தில் கிளாப் அடிக்கும்போது கைகள் நடுக்கத்தோடு ஒருவித பதற்றம் ஒட்டிக்கொள்ளவே செய்தது. ஓர் அறைக்குள் அமர்ந்து டேபிளில் வேலை பார்ப்பது வேறு. அதே மாதிரி வேலையை படப்பிடிப்பு தளத்தில் எல்லோர் முன்னாலும் நின்று பார்ப்பது வேறு என்பதை உணர்ந்தேன்.
படத்தின் ஒரு வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஒரு ஷாட் எடுத்ததும், நான் கிளாப் அடிக்காமல் யோசித்தவாறே உட்கார்ந்திருந்தேன். உடனே, பிரகாஷ் ராவ், ‘முத்துராமன்... என்னாச்சு?’ என்று கேட்டார்.
நான் சுதாரித்துக்கொண்டு ‘‘சார், வரிசையாக குளோஸ்-அப் ஷாட்டாக எடுக்குறீங்க. அதை எடிட் செய்யும்போது ஜம்ப்பாக இருக்குமே’’ என்று எடிட்டிங் அறையில் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து அவரிடம் கேட்டேன். ‘‘நீங்க கேட்பது சரிதான். இடையே இன்டர் கட் காட்சியாக கிராமத்து காட்சி ஒன்று போடப்போகிறேன். அதற்காகத்தான் இந்த குளோஸ்-அப் காட்சியைத் தொடர்ந்து எடுக்குறேன். அதைப் போட்டால் ஜம்ப் வராது’’ என்று ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
உதவி இயக்குநர்களுக்கு ‘வேலை யில் முழு ஈடுபாடு’ என்ற கருவி தான் பெரிய பக்கபலமாக இருக்கும். எந்த சந்தேகம் என்றாலும் உடனே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். சினிமாவின் 23 துறைகளுக்கும் தனித் தனிப் பிரிவு, தனித் தனி பொறுப்பாளர் என்று இருந்தாலும் ஒட்டுமொத்த துறையையும் சேர்த்து பார்க்கும்போது அந்தப் படத்தின் இயக்குநர்தான் தலைவர். அவரைத்தான் ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’ என்று சொல்வோம். இயக்குநர் பணிபுரிவதைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி கற்றுக்கொண்ட பல விஷயங் கள் பின்னாளில் நான் இயக்குநராவதற்கு ஏணியாக இருந்தன.
- இன்னும் படம் பார்ப்போம்…