குண்டாக இருப்பதும் அழகுதான்!- நடிகை நிகிஷா பட்டேல்

குண்டாக இருப்பதும் அழகுதான்!- நடிகை நிகிஷா பட்டேல்

Published on

தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகக் கவனிக்க வைத்தார். தற்போது ‘நாரதன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவருடன் பேசியதிலிருந்து...

‘நாரதன்’ படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

நினைவாற்றலை இழந்த நோயாளிப் பெண்ணாக நடித்திருக்கிறேன். ஒரு பெண் தன் இளம் வயதிலே சாலை விபத்தொன்றைச் சந்திக்கிறாள். அதனால் நினைவாற்றலை இழக்கிறாள். இதுவரை கிடைத்த கதாபாத்திரங்களில் இது வித்தியாசமான ஒன்று. க்ளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது போன்ற வாய்ப்புகளில் நடிக்கக் கற்றுக்கொள்ள முடியும்.

இந்தப் படத்திலும் நீங்கள் இரண்டாவது கதாநாயகியா?

இல்லை. நான்தான் கதாநாயகி. லட்சுமி ஸ்ருதி படத்தில் சிறு வேடத்தில்தான் நடித்திருக்கிறார். இரண்டு நாயகிகள் படத்தில் நடிக்க நான் விரும்புவதில்லை. ஆனால் ‘என்னமோ ஏதோ’ படத்தின் இரண்டு கதாநாயகிகளுக்குச் சமமான முக்கியத்துவம் இருந்ததால் ஒப்புக்கொண்டேன்.

தமிழ்ப் படங்களில் நடிக்க நீங்கள் ஆர்வம் காட்டுவதில்லையா?

இன்றைய தலைமுறை இயக்குநர்கள் முன்புபோல் மும்பை நடிகைகளையோ மாடல்களையோ விரும்புவதில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்களைப் போலத் தோற்றம் அளிக்கும் தென்னிந்தியப் பெண்களைத்தான் நாயகிகளாக்க விரும்புகிறார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழ்த் திரையுலகில் நுழைவதே மிகக் கடினம் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு இங்கே தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருவது என்னை எல்லோருக்கும் பிடித்திருப்பதால்தானே?

வெற்றிப் படங்களில் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தப் படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் போல நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போதெல்லாம் பெரிய படங்களிலும் நாயகியாகத் தேர்வாக வேண்டும் என்றால் நல்ல கதாபாத்திரங்களில் குறிப்பிட்ட நடிகர்களுடன் நடித்திருக்க வேண்டும். அல்லது சிறந்த கூட்டணி உள்ள படத்தில் நடித்திருக்க வேண்டும். தெலுங்கு திரையுலகில் ஒரே இரவில் பிரபலமான நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது.

நாயகியாக நீடிக்க வேண்டும் என்றால் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பார்கள். நீங்கள் மிகவும் குண்டாக இருக்கிறீர்களே?

இன்றைய நாயகிகள் உடல் எடையில் மிகவும் கவனம் காட்டுகிறார்கள். காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, த்ரிஷா என அனைவருமே ஒல்லியான உடலைத் தக்க வைத்துக்கொள்ள சிரத்தை எடுக்கிறார்கள். ஆனால் மற்ற நடிகைகளைப் பின்பற்ற எனக்கு விருப்பமில்லை. நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் இருக்க விருப்பப்படுகிறேன்.

ஆனால், இயக்குநர்கள் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கச் சொன்னால் குறைக்கவும் நான் தயார்தான். இந்தியில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவைப் பாருங்கள் எவ்வளவு குண்டாக இருக்கிறார். அவர் வெற்றிகரமான கதாநாயகியாக ஜொலிக்கவில்லையா?

தொடர்ந்து உங்களைக் கவர்ச்சியாகச் சித்தரிக்க அனுமதிக்கிறீர்களே?

என்னுடைய முதல் படத்திலிருந்தே நான் ஒரு கிளாமர் நடிகை இல்லை. எனக்குக் கிளாமராக நடிக்க ஆசையும் இல்லை. நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் மட்டுமே நடிக்க விருப்பப்படுகிறேன். ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக வேண்டுமானால் அது பரவாயில்லை. நான் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடிக்க ஆற்றல் உள்ள பெண்தான்.

பார்ட்டி கலாச்சாரத்தை ஆதரிப்பவரா நீங்கள்?

பார்ட்டிகளுக்குச் செல்வதில் தவறில்லை. எல்லா நடிகைகளுமே அதிகபட்ச சந்தோஷத்துடன் வாழவே ஆசைப்படுகிறார்கள். அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனக்கு பார்ட்டிகளுக்குச் செல்லும் பழக்கம் இருக்கிறது.

பார்ட்டிக்குச் சென்றால் நூறு சதவீத மனச் சோர்வு நீங்கும். காலை முதல் மாலை வரை படப்பிடிப்பில் இருக்கிறோம், சிறிது நேரம் வெளியே சென்று மனச் சோர்வைக் குறைக்கலாம் இல்லையா.

த்ரிஷா உங்களது தோழியாமே? தன் திருமண முறிவு குறித்து உங்களிடம் எதுவும் பகிர்ந்துகொண்டாரா?

த்ரிஷா எனக்கு நெருக்கமான தோழிதான். என்னை இது செய்யக் கூடாது, அது செய்யக் கூடாது என்று அவர் கூறியதே இல்லை. நான் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நட்புடன் அறிவுரைகள் கூறுவார். அவருடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி நான் பேசவது நாகரிகம் அல்ல. அவருடைய வாழ்க்கையை அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எதை அவர் செய்ய எதிர்பார்க்கிறாரோ, அதை அவர் செய்துகொள்வார். நாம் யாருமே அதைப் பேச வேண்டிய அவசியமில்லை.​​

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in