காற்றில் கலந்த இசை 4- இயற்கை மொழியின் ரகசியங்கள்!

காற்றில் கலந்த இசை 4- இயற்கை மொழியின் ரகசியங்கள்!
Updated on
2 min read

விரிந்த வானத்தின் கீழ் இரவில் உறங்கிக் கிடக்கும் கிராமத்தை இசையால் வரைந்துகாட்ட முடியுமா? காலைப் பனி மலர்ந்து கிடக்கும் பூக்களைக் கடந்துசெல்லும்போது கால்கள் உணரும் சிலிர்ப்பை இசைக் குறிப்புகளால் உணர்த்த முடியுமா? இசை வழியாகவே இயற்கையின் ரகசிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு இவை சாத்தியம். அப்படியான மாபெரும் கலைஞர்களில் ஒருவரான இளையராஜாவின் இசையில் 1979-ல் வெளியான திரைப்படம் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’.

தமிழில் வெளியான திரைப்படங்களில் மிக வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது புகழ்பெற்ற கதாசிரியரான ஆர். செல்வராஜ் இயக்கியிருக்கும் இப்படம். விவரிக்க இயலாத சாபம் ஒன்றால் பீடிக்கப்பட்ட கிராமத்தில் நடக்கும் கதை. கிராமத்தின் மக்கள்தொகை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீடிக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும் கூடினாலும் துயர சம்பவங்கள் நிச்சயம் எனும் நம்பிக்கை நிலவும் கிராமத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை அது. சுதாகர், சரிதா, சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் படம்.

வைக்கோல் போரின் வாசம் கமழும் கிராமத்தின் கற்சுவர் சந்துகளின் வழியே புகுந்துசெல்லும் இசையை இனிக்க இனிக்கத் தந்திருப்பார் இளையராஜா. கிராமிய இசை என்று வகைப்படுத்தப்பட்டாலும் நாட்டுப்புற நிலப் பரப்புகளை மேற்கத்திய இசைக் கருவிகளின் துணை கொண்டு அற்புதமாகச் சித்தரித்துக் காட்டியிருப்பார்.

காலை நேரத்துச் சாலை

சூரியன் சோம்பல் முறித்து எழும் நேரத்தில் மலைக் கிராமத்தின் தெருக்களில், வயல்வெளிகளின் வழியில் சைக்கிளில் செல்லும் நாயகி (சரிதா) பாடும் ‘சோலைக்குயிலே… காலைக்கதிரே’ பாடல் இயற்கை அழகை நுட்பமாகச் சித்தரிக்கும் படைப்பு. உயர்ந்த மரங்களின் கிளைகளினூடே தவழ்ந்துவரும் குயில்களின் பாடல்களுக்கு மறுமொழி சொல்லும் எஸ்.பி.ஷைலஜாவின் குரலில் சிலிர்க்கவைக்கும் பாடல் அது.

நெற்கதிர் களைச் சுமந்தபடி சாலையில் விரைந்தோடும் கிராமத்துப் பெண்களின் கவனத்தைக் கலைத்துவிடாமல் சைக்கிளை மிதித்தபடி பாடிக்கொண்டே செல்வார் சரிதா. பயணங்களில் சாலையின் இருபுறமும் மாறிக்கொண்டே வரும் காட்சிகள் இளையராஜாவின் இசையில் புத்துணர்ச்சியுடன் மலரும்.

பாடலின் நிரவல் இசையில் ஒலிக்கும் கிட்டார் இசை சில்லிடும் குளிர்காற்றின் தீண்டலை உணர்த்தும் என்றால், காற்றின் தாளத்துக்கு அசைந்தாடும் வயல்வெளிகளுக்கு வயலின் இசைக்கோவைகள் பின்னணி இசைக்கும். இசை மூலம் தூரத்தை அளப்பது என்பது இசையறிவையும் தாண்டி இயற்கை மீதான ஆழ்ந்த ஞானத்தைக் கோருவது. இளையராஜாவின் பல பாடல்களில் இதை நம்மால் உணர முடியும். இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக வரும் நிரவல் இசையில் வயலின் கீற்று வானம் வரை சென்று பின்னர், மெல்லத் தரையிறங்கி வயல்வெளியில் படரும். மேகங்களை ஊடுருவிச் செல்லும் இசைக்கோவையை அத்தனை அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள்.

காத்திருத்தலின் சுகம்

வெளியூர் சென்றிருக்கும் நாயகன் கிராமத்துக்குத் திரும்புவதற்குள் அந்தி சாய்ந்துவிடுகிறது. கிராமத்தின் எல்லைக் கதவு சாத்தப்பட்டிருக்கிறது. அந்த இரவைத் தனிமையிலேயே கழிக்க நேரும் நாயகன், காதலின் ஏக்கத்துடன் பாடத் தொடங்குகிறான். மதில் சுவரைத் தாண்டித் தவழ்ந்துசெல்லும் காற்று, நாயகனின் பாடலைச் சுமந்துசென்று நாயகியிடம் சேர்ப்பிக்கிறது. ‘ஒனக்கெனத்தானே இந்நேரமா… நானும் காத்திருந்தேன்’ எனும் அந்தப் பாடலை இளையராஜாவும் சரளா வித்யாதர் பாடியிருப்பார்கள்.

இரவுகளில் கிராமத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒலிக்கும் பாடல் நீண்ட தொலைவைக் கடந்து வந்து நம்மைச் சேரும்போது அதன் ஒலி ஒரே அளவில் இருக்காது. காற்றின் அலைகளில் ஏறி இறங்கிப் பயணித்து வரும் பாடல் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் முணுமுணுப்பாகவும் ஒலிக்கும். இந்தப் பாடலை அதே மாதிரியான ஒலியமைப்பில் பதிவு செய்திருப்பார் இளையராஜா.

நிரவல் இசையில் புல்லாங்குழலுடன் உரையாடல் நிகழ்த்தும் எலெக்ட்ரிக் கிட்டாரை, கிராமிய இசைக் கருவியைப் போலவே கையாண்டிருப்பார் இளையராஜா. துணையற்ற இரவே இப்பாடலைப் பாடுவதுபோல் இருக்கும். இடையில், கிராமத்துச் சாலைகளை இரவில் கடந்துசெல்லும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்யும் விவசாயிகள் களைப்பைப் போக்க பாடிச் செல்லும் பாடலும் ஒலிக்கும்.

கூடல் பாடல்

இரவில் ஆளரவமற்ற தனிமை தரும் உற்சாகத்தில் நாயகனும் நாயகியும் பாடும் ‘சாமக் கோழி கூவுதம்மா’ பாடல் கிளர்ச்சியூட்டும் தமிழ்த் திரைப்பாடல்களில் ஒன்றுதான். எனினும் இதிலும் அற்புதமான இசைக்கோவைகளால் பாடலைச் செதுக்கியிருப்பார் இளையராஜா.

அவர் பாடும் ‘ஒரு மஞ்சக் குருவி… என் நெஞ்சத் தழுவி’ பாடல் படத்தில் இடம் பெறவில்லை. பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துத் தமிழகத்தையே உலுக்கியெடுத்த ‘ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றதுதான்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in