பாலிவுட் வாசம்: வெடித்துக் குமுறிய முரட்டுக்காளை நாயகி

பாலிவுட் வாசம்: வெடித்துக் குமுறிய முரட்டுக்காளை நாயகி
Updated on
1 min read

புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், உல்லாசப் பறவைகள் என்று கவனிக்க வைத்து, ‘முரட்டுக்காளை’யில் தமிழ் ரசிகர்களை மொத்தமாய் ஈர்த்துக்கொண்டவர் ரதி. பிறகு கே. பாலச்சந்தர் இயக்கிய ‘ஏக் துஜே கேலியே’ படத்தில் ஸ்வப்னாவாக நடித்து இந்திய ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தார். திருமணத்துக்குப் பிறகும் மூன்றாண்டுகள் நடித்து இந்திப் பட முன்னணி நாயகியாக விளங்கியவர் பிறகு பத்தாண்டுக் காலம் திரையுலகிலிருந்து விலகி யிருந்தார். 2001-லிருந்து மீண்டும் பாலிவுட்டில் முகம் காட்டத் தொடங்கினார். அதேநேரம் நாடக நடிப்பையும் நேசித்துவந்தார்.

இப்போது தன் கணவர் அனில் விர்வானி தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக அவர் மீது குடும்ப வன்முறை புகார் அளித்துக் காவல் துறையிடம் உதவி கோரியிருக்கிறார். தனது முப்பது ஆண்டு காலத் திருமண வாழ்க்கையைப் பற்றி ரதி தெரிவித்திருக்கும் கருத்துகள் பாலிவுட்டில் அதிர்வலைகளை உருவாக்கிருக்கின்றன. “நான் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை இப்போது எதிர்நோக்கியிருக்கிறேன்.

முப்பது ஆண்டுகளாக நான் செய்யாமல் விட்டுவிட்ட எனக்குப் பிடித்த விஷயங்களை இப்போது செய்யப்போகிறேன். என் திருமண வாழ்க்கையில் நான் சந்தித்த அவமானங்கள் என் சுயமரியாதையைத் தொடர்ந்து பாதித்துக்கொண்டிருந்தன. நான் என்னுடைய துறையில் நிறைய சாதித்திருக்கிறேன். ஆனால், திருமணத்துக்காக நிறைய சமரசங்கள் செய்துகொண்டேன். என்னை இந்த உலகம் அதிகமாக நேசிக்கிறது.

நான் ஏன் என்னை நேசிக்கக் கூடாது? நான் இந்தக் கொடுமைகளை முப்பது ஆண்டுகளாகச் சகித்துக்கொண்டிருந்தேன் என்று யோசிக்கும்போது என்னைப் பற்றிப் பெருமையாகதான் உணர்கிறேன்” என்று தன் திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றிக் குமுறலோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார் ரதி.

தற்போது ‘சிங் இஸ் பிளிங்க்’ படத்தில் அக்‌ஷய் குமாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். “சிங் இஸ் கிங்’ படத்திலேயே எனக்கு அக்‌ஷய் குமாரின் நடிப்பு பிடித்திருந்தது. ஆனால், ‘சிங் இஸ் பிளிங்க்’ படம் முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தைக் கொண்டது” என்கிறார் ரதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in