

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் 1993-ல் வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் படமான ஜுராஸிக் பார்க்கை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தீம் பார்க்கில் டைனோசர்கள் போட்ட ஆட்டத்தால் உலகமெங்கும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் மிகப் பெரிய வெற்றியால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க, த லாஸ்ட் வேர்ல்டு என்னும் பெயரில் 1997-ல் வெளியாகி அதுவும் மாபெரும் வெற்றிபெற்றது.
இதையடுத்து 2001-ம் ஆண்டில் இப்படத்தின் மூன்றாம் பாகமான ஜுராஸிக் பார்க் III வெளியானது. இப்படத்தை இயக்கியவர் ஜோ ஜான்ஸ்டன். இதுவும் பட்ஜெட்டைவிட நான்கு மடங்கு வசூலைத் தந்தது. இந்த வரிசையில் நான்காம் படமாக வரும் ஜூன் 12 அன்று வெளியாக உள்ளது ஜுராஸிக் வேர்ல்டு. இப்படத்தை இயக்கியிருப்பவர் கோலின் ட்ரெவொர்ரா. க்ரிஸ் ப்ராட், ப்ரிஸ் டால்லாஸ் ஹவார்டு, பி.டி.வோங் உள்ளிட்டோருடன் இந்திய நடிகர் இர்ஃபான் கானும் இணைந்து அசத்தியிருக்கிறார் இப்படத்தில்.
ஜுராஸிக் வேர்ல்ட் என்பது மத்திய அமெரிக்காவில் பசிபிக் கடலின் அருகே உள்ள டைனோசர் தீம் பார்க். இதை மஸ்ரனி குளோபல் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் நடத்திவருகிறது. இந்த பார்க்கில் க்ரிஸ் ப்ராட் டைனோசர் வரிசையைச் சேர்ந்த வெலாசிராப்டர் என்னும் ஊனுண்ணிகள் நான்கின் நடத்தை குறித்து ஆய்வு செய்து வருகிறார். கிட்டத்தட்ட செல்ல நாய்க்குட்டிகளைப்போல நான்கையும் அவர் வளர்க்கிறார். க்ரிஸ் ப்ராட்டின் தோள்களில் குழந்தைகளைப் போல வெலாசிராப்டர்கள் தொற்றிக்கொள்ளும் காட்சி பார்வையாளர்களை வசீகரிக்கக்கூடியது.
பார்வையாளர்களைக் கவர்வதற்காக தீம் பார்க்கை நடத்தும் நிறுவனம் மரபணுவியலாளர்களிடம் மரபணு டைனோசர் ஒன்றை உருவாக்கச் சொல்கிறார்கள். அப்படி உருவாக்கப்பட்டதுதான் இண்டோமைனஸ் ரெக்ஸ் என்ற பெயர் கொண்ட டைனோசர். இந்த டைனோசர் தீம் பார்க்கிலிருந்து தப்பித்துவிட பார்க்கில் ஏக களேபரம் ஏற்பட்டுவிடுகிறது. இந்த டைனோசரின் வெறியாட்டம் பார்வையாளர்களைப் பதைபதைக்க வைக்கும் விதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. இதைத் தேடிப் போகிறார்கள் க்ரிஸ் ப்ராட்டும், பார்க்கின் பாதுகாப்புக் குழுவினரும். டைனோசர் பிடிபட்டதா என்பதைப் படம் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
2004-ம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டு 2005-ல் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் பல்வேறு காரணங்களால் பத்து வருடங்கள் காலதாமதமாகியிருக்கிறது. ஆகவே, உலக திரைப்பட ரசிகர்கள் இப்படத்தைக் காண பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இப்படம் இதுவரை வெளியான அனைத்து ஜுராஸிக் வரிசைப் படங்களையும்விட அட்டகாசமாக அமைந்திருக்கும் என்ற முணுமுணுப்புகள் ஆவலைக் கூட்டுகின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குப் படம் ஈடு கொடுக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.