

அபாரமான ஒளிப்பதிவு, அசத்தும் இசை, அதிரடி சண்டைக் காட்சிகள் என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர ஆச்சரியப்படுத்திய படம் ‘மௌனகுரு’
அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ் உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்கியவர் சாந்தகுமார். சிக்கலான அடுக்குகள் கொண்ட ஒரு க்ரைம் கதையை நம் கண்ணெதிரே சம்பவங்கள் நடப்பதுபோல யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டிய இந்த அறிமுக இயக்குநர் பாராட்டு மழையில் நனைந்தார்.சென்னை சர்வதேசப் படவிழாவின் போட்டிப் பிரிவில் சிறந்த படமாகவும் வெற்றிபெற்றது. ஆனால், ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா போலவே தனது அடுத்த படத்தை இயக்காமல் இருந்து வந்தார்.
இதற்கிடையில் இவரது ‘மௌன குரு’ படத்தின் கதை உரிமையை வாங்கிய ஏ.ஆர். முருகதாஸ் அதைக் கதாநாயகிக்கான கதையாக மாற்றி ‘அகிரா’ என்ற தலைப்பில் இந்தியில் படமாக்கி வருகிறார். அருள்நிதி ஏற்ற கதாபாத்திரத்தைச் சோனாக்ஷி சின்ஹா ஏற்று நடிக்க ஜான்விஜய் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் யதார்த்தப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார்.
தனது கதை இந்தியில் படமாவதில் சாந்தகுமார் மகிழ்ந்தாலும் தமிழில் தனது அடுத்தப் படத்தை இயக்க நடிகர்கள் பலரிடம் கால்ஷீட்டுக்காக அலைந்த கசப்பான பக்கங்களைப் பற்றிப் பேச மறுக்கிறாராம். இவரது இரண்டாவது படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் புதிய படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய அறிவிப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் அதில் கார்த்தி நாயகனாக நடிக்கலாம் என்றும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.