

விஜயகாந்தின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார் என்ற காரணத்தால் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்தப் படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
சிறுவயதிலேயே அம்மாவை இழந்த நாயகன் சகா (சண்முகப்பாண்டியன்), அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து நிற்கிறார். அத்தை மகளை (நேகா) காதலிக்கிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் தேவயானி. மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற கணவர் ரஞ்சித்திடம் இருந்து எந்தத் தகவலும் இல்லாததால் கண்ணீர் வடிக்கிறார். நண்பன் ‘நண்டு’ ஜெகனுடன் மலேசியாவுக்கு செல் கிறார் சகா. அங்கு மற்றொரு கதாநாயகி சுப்ரா ஐயப்பா நடத்தும் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக் குச் சேருகிறார். மலேசியக் காவல்துறையே பாராட்டும் அளவுக்கு சகா என்ன அதிரடி செய்தார், மலே சியாவில் தொலைந்த ரஞ்சித்தை மீட்டாரா, 2 கதா நாயகிகளில் யாரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதுபோன்ற அவிழ்க்க முடியாத (?) முடிச்சுகளை யும் திருப்பங்களையும் கொண்டது இந்தப் படத்தின் கதை.
புதிய களங்கள், புதிய கதாபாத்திரங்கள், புதிய காட்சிப்படுத்தல் என முன்னேறிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கற்காலக் கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். முதல் படத்திலேயே சண்முகப்பாண்டியனை அதிரடி நாயகனாகக் காட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்து இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்திருப்பதாக வைத்துக்கொண் டாலும் திரைக்கதை, காட்சியமைப்புகள் கால் நூற்றாண்டுக்கு முன்பே காலாவதியானவை.
வேலை வெட்டி இல்லாமல் கிராமத்தில் நண்டு ஜெகனுடன் சண்முகப்பாண்டியன் அடிக்கும் லூட்டிகள் எரிச்சலூட்டும் வகை. 40 நிமிடங்களுக்கொரு சண்டை, 20 நிமிடத்துக்கொரு பாடல், பத்து நிமிடத்துக்கொரு சென்டிமென்ட், ஐந்து நிமிடத்துக்கொரு காதல் காட்சி என்று மொத்த திரைக்கதையும் அப்பா விஜயகாந்த் நேசித்த மசாலா கலவையாக இருப்பது தவறல்ல. ஆனால் அவற்றுக்கு இடையே நிகழும் சம்பவங்கள் எதிலும் புதுமையோ, அழுத்தமோ இல்லாததால் படம் முழுவதும், பரபரப்பின்றி நகர்கிறது.
முதல் பாதியில் பவர்ஸ்டார் வரும் சில காட்சிகள் கலகலப்பு. இரண்டாம் பாதியில் மலேசிய போலீஸ் அதிகாரிகளே பாராட்டும் அளவுக்குப் பெரும் குற்றவாளிகளை சண்முகப்பாண்டியன் சட்சட்டென்று பிடித்துவிடுவது கலக்கத்தை உண்டுபண்ணுகிறது. ஒரு காட்சியில் தோன்றும் விஜயகாந்த், ‘‘வெளிநாட்டுக்காரர்கள் நம்ம நாட்டைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளாக வருகிறார்கள். அந்நிய நாடுகளுக்கு அதே மாதிரி நாமும் போகும் அளவுக்கு நம்ம வாழ்க்கைத் தரம் உயரணும். அதற்கான வேலைவாய்ப்பை இங்கயே நாம உருவாக்கணும்’’ என்று கருத்து சொல்கிறார். படத்தின் மையக் கருத்து அதுதான். ஆனால் இதற்குத் திரைக்கதை அமைத்த வகையில் முழுமையாகச் சறுக்கியிருக்கிறார் இயக்குநர்.
அறிமுகநாயகன் சண்முகப்பாண்டியனின் கதாபாத் திரத்தை ஆக்ஷன் களத்தில் தூக்கிப் பிடிப்பதிலேயே இயக் குநர் முழு கவனத்தையும் குவித் தது சறுக்கலுக்கு காரணம். மலேசியாவின் பிரம்மாண்டம், அதிரடியான சண்டைக் காட்சி கள் ஆகியவற்றில் கவனம் ஈர்க்கின்றனர். இதற்கு பூபதியின் ஒளிப்பதிவு முக்கியக் காரணம்.
கார்த்திக் ராஜாவின் இசையில் 2 பாடல்கள் இனிமை ரகம். மற்ற பாடல்கள், பின்னணி இசையில் கார்த்திக் ராஜா கவனத்தை ஈர்க்கவில்லை.
சண்டைக் காட்சிகளில் விஜயகாந்தை நினைவூட்டும் சண்முகப்பாண்டியன் அதிரடி செய்வதிலும் நடனமாடுவதிலும் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். நடிப்பு, காதல் காட்சிகள் என்று வரும்போது பரிதாபகரமான விக்கெட்.
நேகா, சுப்ரா ஐயப்பா என அழகான 2 கதாநாயகிகள். ஆனால் அவர்கள் பேசும் வசனங்களுக்கும் உதட்டு அசைவுக்கும் சுத்தமாக ஒட்டவில்லை.
படத்தின் நாயகன் பெயர் ‘சகா’. அதனால் படத்தின் பெயர் ‘சகாப்தம்’. அவ்வளவே!