Last Updated : 24 Apr, 2015 12:44 PM

 

Published : 24 Apr 2015 12:44 PM
Last Updated : 24 Apr 2015 12:44 PM

சினிமா தொழில்நுட்பம் - 17: பொம்மைகளைக் கொண்டு மில்லியன்களை அள்ளலாம்!

ஹாலிவுட்டிலிருந்து வெளியான எத்தனையோ படங்கள் ரசிகர்களை மிரட்டியிருக்கின்றன. ஆனால் டைனோசர்களை உயிருடன் எழுப்பிக்காட்டிய ‘ஜுராசிக் பார்க்’ முந்தைய த்ரில்லர் படங்கள் காட்டிய பயத்தையெல்லாம் முறியடித்து ரசிகர்களைக் கதிகலங்க வைத்தது.

உலகம் முழுவதும் 1,050 பில்லியன் டாலர்களை வாரிக் குவித்த இந்தத் திரைப்படத்தில் பல வகையான டைனோசர்கள் நடமாடின. அவை அனைத்தும் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் (CG) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

ஜுராசிக் பார்க் மட்டுமல்ல, உலகம் முழுவதுள்ள ஹாலிவுட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘ஹல்க்’(Hulk), ஜுமான்ஜி (Jumanji), ஏலியன் வெர்ஸஸ் பிரிடேட்டர் (Aliens Vs Predators) உள்ளிட்ட பல படங்களில் மிரளவைத்த விநோதக் கதாபாத்திரங்கள் அனிமேட்ரானிக்ஸ் (Animatronics) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை.

அனிமேட்ரானிக்ஸை புரிந்துகொள்வது மிக எளிது. இன்று கம்ப்யூட்டர் அனிமேஷன் முறையில் பல ஜாலங்களை நாம் படைக்கிறோம். நாம் பார்க்கும் விளம்பரங்கள், திரைப்படங்கள் எல்லாவற்றிலும் அனிமேஷன் உத்தி பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன வாழ்க்கையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதேபோல மனிதனால் செய்ய முடியாத பல வேலைகளை ரோபோட் இயந்திரங்கள் கொண்டு நம்மால் செய்ய முடியும். இந்த மூன்று தொழில்நுட்பங்களும் இணைந்து உருவான தொழில்நுட்பம்தான் அனிமேட்ரானிக்ஸ்.

அனிமேட்ரானிஸ், கதாபாத்திரத்தை உருவாக்கும் படிநிலைகளைத் தெரிந்துகொள்ளும் முன், அதைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். மனிதச் சாயலுடன் உருவாக்கப்படும் ரோபோக்களுக்கும் (humanoid robots) அனிமேட்ரானிக்ஸ் பொம்மைகளுக்கும் (கதாபாத்திரங்கள்) அதிக வேறுபாடுகள் இல்லை.

ரோபோக்களோடு ஒப்பிடும்போது அனிமேட்ரானிக்ஸ் பொம்மைகள், கதைக்கும் காட்சிக்கும் தேவைப்படும் முக்கிய அசைவுகளை மட்டும் செய்யும்படி அவற்றின் ஹைட்ராலிக் மெக்கானிஸத்தை (internal hydraulic system) உருவாக்கிவிடுவார்கள்.

நம்மிடம் 3டி அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இருக்கும்போது இந்த அனிமேட்ரானிக்ஸ் பொம்மைகள் எதற்கு என்ற கேள்வி எழலாம். கிராஃபிக்ஸில் உருவாக்கும் உருவத்தைவிட அனிமேட்ரானிஸ் உருவம், ரசிகர்களை அசல் என்று நம்பவைத்துவிடும். 99 சதவிகிதம் அசலான தோற்றம் கிடைத்துவிடுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

அதேபோல அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்படும் ஒரு கதாபாத்திர உருவம், கம்ப்யூட்டரில் உருவாகிறது. படப்பிடிப்பின்போது அந்த உருவம் தன் அருகில் நிற்பதுபோன்றும் தன்னைத் தாக்க வருவதுபோன்றும் தன்னுடன் பேசுவதுபோன்றும் உடன் நடிக்கும் நடிகர் கற்பனை செய்துகொண்டு தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க வேண்டும். ஆனால் அனிமேட்ரானிஸ் பொம்மை என்றால் அந்தப் பிரச்சினையே இல்லை.

நடிகரின் கண் முன்னால் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்த டைனோசர் அதன் காலத்தில் எத்தனை பிரமாண்ட உருவத்தில் இருந்ததோ அதேபோன்ற அளவில் அச்சு அசலாக எழுந்து நிற்கும். கண்களை உருட்டி ஒளிந்திருக்கும் நடிகரைக் கவனிக்கும், கைகளை நீட்டித் தாக்கும், வாலைச் சுழற்றும். வாயைத் திறந்து காது செவிடாகிற மாதிரி கத்தும். இதனால் நடிகரும் தன் கண் முன்னால் நிற்கும் அனிமேட்ரானிக்ஸ் உருவத்தைப் பார்த்து அதன் அசைவுகளுக்கு ஏற்ப உணர்ச்சிகளை முடிந்தவரை நிஜமானதுபோல் வெளிப்படுத்தி நடிக்க வாய்ப்பு உருவாகிறது.

அனிமேட்ரானிக்ஸ் கதாபாத்திரங்களுடன் நடித்த ஹாலிவுட் நடிகர்கள் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஜூராசிக் பார்க் படத்தில் நடித்த ஜெஃப் கோல்ட் ப்ளம் (Jeff Goldblum) “அது நடந்து வரும்போதும் தன் கோரமான மூக்கை நீட்டி மஞ்சள் கண்களை உருட்டும்போதும் அது இயக்கப்படும் பொம்மை என்பதை மறந்து, மிரண்டுபோய் நடித்தேன் என்பதே உண்மை” என்று டீ-ரெக்ஸ் வகை அனிமேட்ரானிக்ஸ் டைனோசர் பொம்மையுடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

ஜுராசிக் பார்க் படத்தில் அனிமேட்ரானிக்ஸ் டைனோசர்களைப் பயன்படுத்திய அதேநேரம், 3டி அனிமேஷன் முறையில் வரைந்து உருவாக்கப்பட்ட டைனோசர்களும் கலக்கப்பட்டன. எந்தக் காட்சியில் அனிமேட்ரானிக்ஸ் டைனோசர் நடித்தது…

எந்தக் காட்சியில் 3டி அனிமேஷன் மூலம் உயிர்பெற்ற டைனோசர் நடித்தது என்பதைக் கண்டறிய முடியாத வண்ணம் டைனோசர்களின் உருவம், அவற்றின் தோல், கண்கள், அசைவுகள் போன்றவை கச்சிதமாக அந்தப் படத்தில் பொருந்தியிருந்தன. அதற்குக் காரணம் 3டியில் வரைந்து உருவாக்கப்பட்ட டைனோசரின் தோற்றத்தில் இருந்த அனைத்து முக்கிய அம்சங்களையும் அப்படியே அனிமேட்ரானிக்ஸ் டைனோசருக்குப் பயன்படுத்தினார் அந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட் சூப்ரவைசர்களில் ஒருவரான டெனிஸ் முரென் (Dennis Muren).

3டி அனிமேஷன் முறையில் டைனோசர்களை உருவாக்க இவர் தந்த அளவுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சிறிதும் பெரிதுமாக மிரட்டும் அனிமேட்ரானிஸ் டைனோசர்களை உருவாக்கிக் கொடுத்தவர் ஸ்டேன் வின்ஸ்டன் (Stan Winston). இந்த இருவரோடு டிசைன்களை வடிவமைத்த பில் டிப்பெட் (Phil Tippett), மைக்கேல் லாண்ட்ரி (Michael Lantieri) உள்ளிட்ட நான்கு கலைஞர்கள் இந்தப் படத்தின் சிறந்த விஷுவல் எஃபெக்டுக்கான ஆஸ்கர் விருதை அள்ளினார்கள்.

அடுத்த பகுதியில் அனிமேட்ரானிஸ் தொழில்நுட்பம் கதாபாத்திரங்களுக்கு எவ்வாறு உயிர் கொடுக்கிறது அதில் எத்தனை திறமைகள் இணைகின்றன என்பதைப் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x