

உலகப் போரில் தன் கணவனை இழந்து அநாதையான கர்ப்பிணிப் பெண் காட்யா, வெட்ட வெளிப் பொட்டல் சாலையில் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் காட்சியோடுதான் தி தீஃப் (The Thief) படம் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் ரஷ்யாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், பொருளாதார ரீதியாக ரஷ்யா மிகவும் பலவீனமாகிவிட்டது. மக்களின் அன்றாடப் பாடே கஷ்டமாகிப் போனது. காட்யாவும் தன் மகன் சன்யாவுடன் பிழைப்புக்காகப் பெரும் பாடுபடுகிறாள்.
சன்யாவுக்கு ஐந்து வயதாகும் போது வேலை தேடி நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்து ரயிலில் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தில் ஒரு ராணுவ வீரனைச் (டொய்லன்) சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே அவன்மீது காட்யாவுக்கு ஈடுபாடு தோன்றுகிறது. மீதமிருக்கும் காலத்தில் தனக்கும், தன் மகன் சன்யாவுக்குமான பாதுகாவலனாக அவனை நினைக்கிறாள். ரயில் பயணத்திலேயே அவள் முழுமையாகத் தன்னை அவனுக்குக் கொடுத்துவிடுகிறாள்.
நகரத்தில் கணவன், மனைவியாகத்தான் இறங்குகிறார் கள். காட்யாவுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும். டொய்லனின் கைகளைப் பிடித்தபடி அவள் அவன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். அங்குள்ள ஒரு குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்குகிறார்கள். அறையில் திரும்பவும் உறவுகொள்கிறார்கள். திரும்பத் திரும்ப நிகழும் உடலுறவு அவளுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனையைத் தருகிறது. ஆனால் தன் மகனுக்கும் தனக்கும் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை அவள் இழக்க விரும்பவில்லை. ராணுவ வீரனாக இருப்பதால் இருக்கும் ஒரே ஓர் அறையில் மகனை வெளியே காத்திருக்கும்படி கொஞ்சிக் கேட்டுவிட்டு டொய்லனுக்குத் தன் உடலைக் கொடுக்கிறாள். சமூக நிலையில் இன்னும் பலவீனமாக வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் ஆழமான சங்கடங்களை இந்தக் காட்சிகள் அசலாகச் சித்திரிக்கின்றன.
தனக்கும் தன் அம்மாவுக்குமான உறவைப் பங்குபோட்டுக்கொள்ள வந்திருக்கும் இந்தப் புதிய மனிதன் மீது சன்யாவுக்கு முதலில் எரிச்சலும் கோபமும் வருகிறது. பிறகு அம்மா சொல்லச் சொல்ல அவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறான். அவனுக்கு டொய்லனின் முரட்டுத்தனமும், அவன் மார்பில் பச்சை குத்தியிருக்கும் ஸ்டாலின் படமும் பிடித்துப்போகிறது.
ஒரு நாள் டொய்லன் அந்தக் குடியிருப்பில் உள்ள அனைவரையும், சர்க்கஸ் பார்க்க டிக்கெட் வாங்கிக் கூட்டிச் செல்கிறான். ஆனால் சர்க்கஸ் இடையிலேயே டொய்லன் வெளியேறிவிடுகிறான். காட்யா அவனைப் பின்தொடர்கிறாள். அவன் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து அவர்களுடைய பொருட்களை யெல்லாம் மூட்டைகட்டுகிறான். காட்யாவுக்கு விஷயம் புரிகிறது; டொய்லன், ராணுவ வீரன் வேடம் அணிந்த ஒரு திருடன். ஏமாற்றத்தாலும் அவநம்பிக்கையாலும் அவள் உடைந்து அழுகிறாள். ஆனால் வேறு வழியில்லாமல் அவனுடன் செல்கிறாள். பிறகு இது தொடர்கதை ஆகிறது. ஒவ்வொரு குடியிருப்பாக மாறிக் கொள்ளையடிக்கிறான். காட்யாவும், சன்யாவும் உடன் இருப்பது, குடும்பஸ்தன் போன்ற தோற்றத்தைத் தருவது அவனுக்கு அனுகூலமாக இருக்கிறது. கடைசியாக டொய்லன் ராணுவ வீரர்களிடம் அகப்பட்டுவிடுகிறான். காட்யா கலங்கிப் போகிறாள். அவன் மீதான அன்பு அவளை முடக்கிவிடுகிறது. நோய்வாய்ப்படுகிறாள். அப்போது டொய்லனின் கருவும் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்தது. டொய்லனைக் கொண்டுசெல்லும் பனி படர்ந்த சிறைச்சாலை வாயிலில் அவன் முகங்காணக் கடும் குளிரைத் தன் நோய்கொண்ட உடம்பால் தாங்கிக்கொண்டு தன் பிரியத்துக்குரிய மகனுடன் கால் கடுக்கக் காத்துக் கிடக்கிறாள். பின்னால் அவள் கரு கலைந்து இறக்க நேரிடும் காட்சி சான்யாவின் பார்வையில் விரியும்போது அது பார்வையாளர்களைக் கலங்கவைத்துவிடுகிறது.
டொய்லன் சிறையில் இருந்து திரும்பினானா, ஐந்து வயதுக் குழந்தையான சன்யாவுக்கு என்ன ஆனது என்பதுடன் படத்தின் காட்சிகள் முடிவடைகின்றன.
ரஷ்யாவின் முன்னணி இயக்குநர் பவல் சுக்ரெ இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. படத்தின் உள்ளடக்கம், விமர்சனங்களைச் சந்தித்தாலும் காட்சிகளின் இயல்புக்கு ஏற்ப ரஷ்ய நிலக் காட்சிகளைத் தத்ரூபமாகப் படமாக்கிய விதம், இயக்குநருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இரண்டால் உலகப் போருக்குப் பிறகான ரஷ்யாவின் சமூக நிலையைப் பல நிலைகளில் விவரிக்கும் இந்தப் படம் சாமான்ய மக்களின் வாழ்க்கையில் போரால் ஏற்படும் மறைமுகமான விளைவு களையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது.