

கேரளா கஃபே
நிருபமா ஒரு குடும்பத் தலைவி. 36 வயதான அவள் வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறாள். அவளுடைய கணவன் ராஜீவ் நாராயணன் வானொலி அறிவிப்பாளன். இவர்களுக்குப் பள்ளி செல்லும் ஒரே மகள். அயர்லாந்து நாட்டிற்குச் சென்று குடும்பத்துடன் செட்டிலாகி விட வேண்டும் என்பது ராஜீவின் கனவு. அவனுக்கும் மகளுக்கும் விசா கிடைத்துவிடுகிறது. நிருபமாவுக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் விசா கிடைக்கவில்லை.
கணவனும், மகளும் மட்டும் அயர்லாந்துக்குக் கிளம்பிச் சென்றுவிட மனச்சோர்வுடன் அலுவலகத்துக்குப் போய் வந்துகொண்டிருக்கிறாள் நிருபமா.
இந்தச் சூழ்நிலையில் தன் பள்ளித் தோழியான சூசன் டேவிட்டைச் சந்திக்கிறாள். அவள் ஒரு தொழிலதிபர். பள்ளிக்காலத்தில் துறு துறு காத்தாடியாகச் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த நிருபமா இவள்தனா என்று வியந்துபோகிறாள் சூசன்.
தனக்கான நம்பிக்கை நட்சத்திரம் என்று நினைத்த நிருபமாவா இது என்று மனதில் நினைப்பதை அவளிடம் கேட்கவும் செய்கிறாள். திருமண வாழ்க்கை அவளைக் கோழையாகவும், தன்னம்பிக்கையற்றவளாகவும் மாற்றி விட்டிருப்பதை எண்ணி வருந்தும் அவள் நிருபமாவை மாற்ற முயற்சிக்கிறாள்.
இதற்கிடையில் தன் வீட்டின் மொட்டை மாடியில் தான் இதுவரை இயற்கை உரங்களைப் போட்டு வளர்த்த காய்கறித் தோட்டத்தை அழிக்க நினைக்கிறாள் நிருபமா. தான் இனிமேல் அதைக் கவனிக்க முடியாது என்பதே காரணம். அங்கிருந்த காய்கறிகளைப் பறித்து அவள் தனக்குத் தெரிந்த ஒரு வேலைக்காரப் பெண்ணிடம் தருகிறாள். அந்தப் பெண் அவற்றைக் கொண்டு போய்த் தான் வேலை செய்யும் வீட்டில் கொடுக்க, அந்த வீட்டின் உரிமையாளர் காய்கறியின் சுவையைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்துவிடுகிறார்.
அந்தக் காய்கறிகளைப் பயிரிட்டு உருவாக்கிய நிருபமாவைச் சந்திக்கிறார். நிருபமாவின் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போகிறது. அவளது யோசனைகளும் புத்திசாலித்தனமும் விளைநிலம் இல்லாத இயற்கை விவசாயியாக எப்படி மாற்றுகிறது என்பது திரைக்கதையின் சுவாரஸ்யமான பகுதி.
மாநில அரசின் இயற்கை வேளாண்மை அமைப்பின் தலைவராக அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அளவுக்கு உயரும் அவளைப் பார்த்துக் கேரள மாநிலமே ஆச்சரியப்படுகிறது. ஒரு குடும்பப் பெண்ணிற்குள் இப்படியொரு புரட்சிகரச் சிந்தனையா என்று எல்லோரும் அவளைப் பற்றி வியப்புடன் பேசிக்கொள்கின்றனர்.
பத்திரிகைகள் அவளைப் பாராட்டிக் கட்டுரைகள் எழுதுகின்றன. இந்தச் செய்தி அயர்லாந்தில் இருக்கும் கணவனுக்கும் எட்டுகிறது. சாதாரணமாக நினைத்துப் பல நேரங்களில் மட்டம் தட்டிப் பேசிய தன் மனைவியை அயர்லாந்திலிருந்து திரும்பிய கணவன் இப்போது எப்படிப் பார்க்கிறான் என்பதுதான் மீதிக் கதை.
நடிகர் திலீப் உடனான குடும்ப வாழ்க்கையிலிருந்து விலசிய பிறகு, மஞ்சு வாரியார் நடித்த மலையாளத் திரைப்படம்தான் இந்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?'. அதனால் ஆரம்பத்திலிருந்தே படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவியது. அதை நூறு சதவிகிதம் நிறைவேற்றித் தந்திருக்கிறார் படத்தின் இயக்குநரான ரோஷன் ஆன்ட்ரூஸ். நிருபமாவின் கணவனாக குஞ்சாக்கோ போபன். நிருபமாவின் தோழி சூசனாக கனிகா.
திருமணத்துக்குப் பிறகு கணவன், குடும்பம் குழந்தைகள் என்ற உலகத்தைத் தாண்டிப் பெண்களுக்கு இன்னுமொரு உலகம் இருக்கிறது. தளராத முயற்சியும் ஊக்குவிப்பும் இருந்தால் தன்னம்பிக்கை என்ற விதையைப் விருசமாக்கிக் காட்டும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள் என்ற செய்தியை சினிமாத்தனம் இல்லாமல் சித்தரித்துப் பாராட்டுக்களை அள்ளிக்கொண்டார் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ்.
இந்தப் படத்தை அவரே தமிழிலும் இயக்குகிறார். நடிகர் சூர்யா மறுஆக்கம் செய்து தயாரிக்க, மஞ்சு வாரியார் ஏற்ற கதாபாத்திரத்தை ஜோதிகா ஏற்று நடித்து முடித்திருக்கிறார். ‘36 வயதினிலே' என்ற தலைப்புடன் விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படம், பாலிவுட்டைப் போலக் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் புதிய போக்கைத் தமிழ்த் திரையில் உருவாக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடர்புக்கு: writersura@gmail.com