

அம்மாவுடன் மும்பையில் வசிக்கும் அக்ஷரா ஹாசன், அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தில் அறிமுகமானார். இயக்குநர் ஆவதுதான் லட்சியம் என்று உதவி இயக்குநராக வேலை செய்தவர் திடீரென நடிக்க வந்தார். ஆனால் ஷமிதாப் படத்துக்குப் பிறகு அவர் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
போனி கபூர் தயாரிப்பில் தேவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இந்திப் படத்தில், அவருடைய வளர்ப்பு மகளாக நடிக்க இருக்கிறார் என்று வெளியான செய்தியை அக்ஷரா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் தன் அக்கா அக்கா ஸ்ருதி ஹாசன் வழியில் நடிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டாராம். வணிகப் படங்களின் கதாநாயகியாக உயர, நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்ளும்படி அக்கா கொடுத்த அறிவுரைகளை ஏற்று முதலில் அவற்றைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருக்கிறாராம். அதற்கு அடையாளமாகக் கனிகா என்ற டிசைனர் வடிவமைத்த ஆடைகளை அணிந்து முதல் முறையாக ஆடை அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்று ரேம்ப் வாக் செய்திருக்கிறார்.
தற்போது உணவு, உடற்பயிற்சி, சிகை அலங்காரம் அழகு ஆகியவற்றுக்குத் தனித் தனி நிபுணர்களை அக்ஷராவுக்காக ஒப்பந்தம் செய்து கொடுத்திருக்கிறாராம் அவருடைய அம்மா. அடுத்த படத்தை ஒப்புக்கொள்ளும் முன் கவர்ச்சிகரமான தோற்றத்துக்கு மாறிவிட வேண்டும் என்பது மட்டும்தான் அக்ஷராவின் தற்போதைய அதிரடி இலக்கு என்கின்றன பாலிவுட் வட்டாரங்கள்.