

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்கும் முதல் படம் யான். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இளமை துள்ளும் படங்களுக்கு இயக்குநர்கள் அவரைத் தேடுவதில் ஆச்சரியமில்லை.
ஆனால், அவருக்கென்று சில மெட்டுகள் இருக்கின்றன. அந்த மெட்டுகளே திரும்பத் திரும்ப ஒலிக்கும். இசைச் சேர்ப்பின் காரணமாகவும், மெலடியாக இருப்பதன் காரணமாகவும்தான் பல நேரம் அவருடைய பாடல்கள் ஹிட்டாகின்றன.
இந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஐந்து. அதில் மெட்டுகள், ஏற்கெனவே அவரது இசையில் கேட்டது போலவே இருக்கின்றன.
தமிழ் சினிமா பாடல்களில் அத்தியாவசியமாகிவிட்ட கானா பாலா, இதோ ஹாரிஸ் இசையிலும் பாடிவிட்டார். "ஆத்தங்கர ஓரத்தில்" பாட்டின் கிராமத்து மெட்டு பெரிதாகக் கவராதபோதும், கானா பாலாவின் குரலால் தப்பித்துவிடுகிறது. "லட்சம் கலோரி" பாடல் சுறுசுறுப்பில்லாத, வழக்கமான பாடலாக வந்து போகிறது. ஹாரிஸின் அடையாளக் குரல்களில் ஒன்றான பாம்பே ஜெய "நீ வந்து போனது" என்ற பாடலைப் பாடியிருக்கிறார், எழுதியவர் தாமரை. ஆனால், பழைய பாடல்களைப் போல இந்த முறை மேஜிக் நடக்கவில்லை. இடையிடையே சத்தமாக வந்துபோகும் அர்த்தம் புரியாத வேற்றுமொழிச் சொற்கள் இந்தப் பாடலிலும் ஒலிக்கின்றன.
ஹாரிஸின் வழக்கமான பாடல்களில் இருந்து சற்றே மாறுபட்டுள்ள "ஹே லம்பா லம்பா" பாடலைப் பாடியிருப்பது மாடர்ன் குரலுக்கு அறியப்பட்ட தேவன் ஏகாம்பரம். இசையும் புதிதாக இருக்கிறது.
ஹாரிஸின் வழக்கமான வேக மெலடியாக இல்லாமல் மென்மெலடியாக வந்திருக்கிறது "நெஞ்சே நெஞ்சே". மூன்று நிமிடங்களே ஒலித்தாலும் எளிமையாக வசீகரிக்கிறது. சமீபகாலமாக அடிக்கடி கேட்க முடியாத உன்னிகிருஷ்ணின் குரல் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது.