

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நாகார்ஜூனா, பிரபு, சிவராஜ்குமார், விக்ரம் பிரபு, மஞ்சு வாரியார் என்று தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங் கள் பலருடன் ஒரே நேரத்தில் இணைந்து பணியாற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறார் விளம்பரப் பட இயக்குநர் ஸ்ரீகுமார்.
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத் துக்காக அவர்களை வைத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த விளம்பரப் படத்தை 3 நாட்கள் மும்பை யில் படமாக்கியுள்ளார் ஸ்ரீகுமார். அந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
படப்பிடிப்பின்போது அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருந்தது அமிதாப் பச்சன்தான். “நான் பெரிதும் மதிக்கக்கூடிய சிவாஜிகணேசனுடன் நடிக்க முடியாத குறையை அவரது மகன், பேரனோடு நடித்து தீர்த்துவிட்டேன்” என்று கூறிய அவரது எளிமை ரசிக்கும்படியாக இருந்தது. மேலும் ‘‘ரஜினிகிட்ட போய் சொல்லுப்பா. அவரைவிட நான் ஸ்டைலா வேட்டி கட்டுவேன்னு’’என்று பிரபுவிடம் அவர் கலாட்டா செய்துகொண்டிருந்ததையும் என்னால் மறக்க முடியாது.
மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் 14 ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ விளம்பரத்துக்காக அமிதாப் பச்சனுடன் அவர் நடித்தார். அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, “மஞ்சு, நீ மீண்டும் சினிமாவில் கலக்கப்போற” என்று மஞ்சுவிடம் அமிதாப் பச்சன் கூறினாராம். அதே மாதிரி அந்த விளம்பரப் படத்தைத் தொடர்ந்து ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தில் மஞ்சு வாரியார் நடிக்க அப்படம் பெரிய ஹிட் ஆனது.
இந்த விளம்பரப் படத்தில் ஐஸ்வர்யா, காஞ்சிபுரம் புடவை கட்டி அசத்துவார். அவர் மிக அழகாக தமிழ் பேசுகிறார். முதல் முறையாக இப்போதுதான் அமிதாப்புடன் அவர் விளம்பரப் படத்தில் நடிப்பதாக கூறினார். மேலும் அமிதாப் சார் வேட்டி கட்டி நடிப்பதும் இப்போதுதான். இதில் வேட்டி கட்ட அவருக்கு விக்ரம் பிரபுதான் கற்றுக்கொடுத்தார்.
கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, பிரபு சார் மூன்று பேரும் சேர்ந்து இந்த படப் பிடிப்பின்போது ஆடிய ஆட்டம் செம மாஸ். மும்பையில் 4 மாடி கட்டிடத்தில் செட் போட்டு இந்தப் படப்பிடிப்பை நடத்தியதால் தப்பித்தோம். சமதளமான இடமாக இருந்தால், படப்பிடிப்புத் தளத்தையே அவர்கள் விளையாட்டு மைதானமாக மாற்றியிருப்பார்கள்.
இவ்வாறு ஸ்ரீகுமார் கூறினார்.
இந்த விளம்பரப் படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்ததைப் பற்றிக் கூறும் நடிகர் பிரபு, “அப்பா மீது பெரிய மரியாதை வைத்திருப்பவர் அமிதாப் பச்சன். என் சின்ன வயதில் பல நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் சந்திக்கும்போது இதை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் சேர்ந்து நான், நாகார்ஜூனா, மஞ்சு வாரியார், சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் என்று ஒரு பெரிய பட்டாளம் சேர்ந்தபோது அது சிறப்பான ஒரு அனுபவமாக மாறிவிட்டது. இந்த விளம்பர படத்தில் என்னுடன் விக்ரம் பிரபு சேர்ந்து நடித்திருக்கார். ‘விக்ரம் பிரபு நடிக்கும் காட்சி என்றால் மட்டும், மானிட்டர் முன் நின்று மகன் எப்படி நடிக்கிறார் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களே’ என்று மஞ்சு வாரியார் என்னை கிண்டல் செய்துகொண்டே இருப்பார். ஐஸ்வர்யா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட எல்லோருமே இதில் தமிழ் பேசி நடித்தார்கள். அமிதாப் ஒவ்வொரு வார்த்தையையும் பேசிவிட்டு என்னிடம் ‘சரியா பேசினேனா’ என்று தமிழிலேயே கேட்பார்” என்றார்.