திரை விமர்சனம்: வஜ்ரம்

திரை விமர்சனம்: வஜ்ரம்
Updated on
1 min read

பொய்யான குற்றச் சாட்டுடன் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் படுகிறார்கள் நான்கு சிறுவர் கள். நால்வருமே நண்பர்கள். சிறுவர்களைக் கொடுமைப் படுத்தும் இரண்டு சிறைக் காவலர் களை, இந்த நால்வரும் நையப் புடைக்கிறார்கள். இவர்களது திறன் அறிந்த மாவட்டக் காவல் அதிகாரி, இந்தச் சிறுவர்களைத் தப்பிக்க வைக்கிறார். அதற்குக் கைமாறாக மாநிலக் கல்வி அமைச்சரைக் கடத்தச் சொல்கிறார். ஆனால் அமைச்சருக்குப் பதிலாக அவரது மகளைக் கடத்திவிடுகிறார்கள். காவல் அதிகாரி ஏன் அமைச் சரைக் கடத்தச் சொன்னார்? அமைச்சரைக் கடத்தாமல் அவர்கள் திட்டத்தை மாற்றியது ஏன்? சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த பின்னணி என்ன ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது வஜ்ரம்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் காட்சிகளோடு ஆமை வேகத்தில் தொடங்கும் படம், அமைச்சரைக் கடத்தியபிறகு முயல் வேகத்தில் ஓட்டமெடுக்கிறது. அமைச்சர் மகளைக் கடத்தி வந்ததற்கான காரணம் ஃப்ளாஷ் பேக்காக விரியும்போது திரைக்கதை பரபர வென நகர்கிறது. அதிகாரத்தைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் அமைச்சர், அவரது அடியாட்கள், இவர்களோடு கைகோக்கும் போலீஸ் ஆகிய காட்சிகள் வழக்கமான வார்ப்பிலேயே உள்ளன. எனினும், மாவட்டக் காவல் அதிகாரியைக் காட்டியிருக் கும் விதமும், மலைவாழ் மக்களுக்காகப் பள்ளிக்கூடம் நடத்துபவரின் போராட்டமும் வலு வாகவும் உணர்ச்சிகரமாகவும் சித்திரிக்கப்பட்டிருப்பது படத்துக்குப் பெரும் பலம். கடத்தல், தப்பித்தல் உள்ளிட்ட பல காட்சிகள் எந்தத் தர்க்கமும் இல்லாமல் மனம்போன போக்கில் நகர்கின்றன.

முக்கிய வில்லனாக ஜெயப்பிர காஷின் நடிப்பும் அவரது மனைவியாக வரும் சானாவின் நடிப்பும் பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது கோபத்தைத் தூண்டும் விதமாக இருக் கிறது. தம்பி ராமையா அசத்தியிருக் கிறார். தன் பள்ளிக்கு அமைச்சர் ஒருமுறை வந்துவிட்டால் பள்ளி மேம்பட்டுவிடும் என்ற அவரது நம்பிக்கை, அமைச்சரைச் சந்தித்தபிறகு நொறுங்கும்போது ராமைய்யாவின் நடிப்பு உலுக்கு கிறது.

ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகிய நால் வரும் நடிப்பில் மேலும் தேறி யிருக்கிறார்கள். அமைச்சரின் மகளாக வரும் பாவனி ரெட்டியிடம் வராமல் நடிப்பு அடம் பிடிக்கிறது.

சிறுவர்களுக்கான சண்டைக் காட்சிகள் மிகையாகிவிடக்கூடாது என்ற கவனத்துடன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் சுப்ரீம் சுந்தர், ஆக் ஷன் பிரகாஷ் இருவரும் பாராட்டுகுரியவர்கள். மலைப்பகுதி, வனப்பகுதி ஆகியவற்றை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கும் குமரேச னின் ஒளிப்பதிவும், இரைச்சல் இல்லாத ஃபைசலின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்த்திருக்கின்றன.

உயர்ந்த லட்சியத்தை அடைய எந்த வழிமுறையை வேண்டு மானாலும் கடைப்பிடிக்கலாம் என்னும் அபாயகரமான செய்தி யைப் படம் முன்வைப்பதுதான் நெருடுகிறது. சிறுவர்களை வன்முறை மீது நம்பிக்கை வைப்பவர்களாகச் சித்தரிப்பது ஆபத்தான போக்கல்லவா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in