Last Updated : 04 Apr, 2014 07:46 AM

Published : 04 Apr 2014 07:46 AM
Last Updated : 04 Apr 2014 07:46 AM

திரையும் இசையும்: மொழி பிரிக்காத உணர்வு 6 - கண்ணாடி முன் நில்லாதே

‘சஷ்மே பத்தூர்’ என்ற (உன் கெட்ட பார்வையை விலக்கு) பர்சியச் சொல்லுக்குக் கண் போடுதல் , அல்லது கண் வைப்பது என்று பொருள். வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சரளமாக முன்பு இருந்த இந்த இலக்கியச் சொல்லுக்கு பதிலாக நஜர்டால் னா என்ற கொச்சையான பிரயோகம் தற்போது அதிகம் உள்ளது. இந்தச் சொல்லை ஜீவனாகக் கொண்டு, முகமது ரஃபியின் சிறந்த பல பாடல்களை எழுதிய இந்தித் திரைப்பட ஆசிரியர் ஹஸ்ரத் ஜெயப்பூரியின் மிக பிரபலமான பாடல் இது. சங்கர் ஜெய்கிஷன் இசை அமைத்த இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் சஸ்ரால் (மாமியார்) என்ற குடும்பப் படம்.

தென்னக சினிமாவின் முன்னோடியான எல்.வி. பிரசாத் தயாரித்த படம். ராஜேந்திர குமார் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு ஒன்று உண்டு.எம்.ஜி.ஆர். படங்களின் ஆஸ்தான கதாநாயகி மற்றும் கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழக ரசிகர்கள் போற்றும் சரோஜாதேவி நடித்த ஒரு சில இந்திப் படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தின் வெள்ளிவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத்துக்கு படத்தின் நாயகி சரோஜாதேவி பாராட்டும் விதமாக மாலை அணிவித்தது அன்று பரபரப்புச் செய்தி.

தனக்கே உரிய மிதமான உடல் சேட்டைகளுடன் ராஜேந்திர குமார் பாடும் இப்பாடலுக்கு முகமது ரஃபி வெளிப் படுத்திய அதே குறும்பு கலந்த தவிப்பு, பின்னாளில் தமிழில் வந்த ‘கண் படுமே பிறர் கண் படுமே’ என்ற ஜெமினி கனேசனுக்கான பி.பி. ஸ்ரீனிவாஸின் பாடலில் பாடும் பாடலிலும் வெளிப்படுவது ரசிக்கத் தக்கது.

முதலில் இந்திப் பாடலின் சில வரிகள்:

தேரி பியாரி பியாரி சூரத் கோ, கிஸீ க்கா நஜர் நா லகே, சஷ்மே பத்தூர்
முக்டே கோ சுப்பா லோ ஆச்சல் மே கஹீன் மேரே நஜர் ந லகே சஷ்மே பத்தூர்
யூ நா அக்கேலா ஃபிரா கரோ சப்கி நஜர் ஸே டரா கரோ
ஃபூல் சே ஜ்யாதா நாஜுக் ஹோ தும் சால் சம்மல் கே சலா கரோ

முழுப் பாடலின் பொருள்:

உன் அழகைப் பார்த்து யாராவது கண் போட்டு விடமால் இருக்க வேண்டுமே.
முகத்தை முந்தானையில் மூடிக்கொள்.
(இல்லையென்றால்) என் கண்ணே பட்டுவிடும்.
இப்படித் தனியாக நடந்து சென்று எல்லோரது பார்வையாலும் திகைப்படையாதே.
மலரை விட மென்மையான நீ மெல்ல அடி எடுத்து நட.
கூந்தலை நீ கன்னத்தில் விடுவதால் பருவத்தின் கண் பட்டு விடப்போகிறது.
நீ வீசும் ஒரு பார்வையால் என் பயணமே நின்றுவிடுகிறது.
உன் அழகைப் பார்த்து நிலவுகூடத் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறது.
கண்ணாடியில் உன் முகத்தை பார்க்காதே உன்னுடைய கண்ணே பட்டுவிடும்.
உணர்வு மாறாமல் இன்னும்

கவித்துமான வரிகளில் இதற்கு இணையான கண்ணதாசனின் பாட்டு:

கண் படுமே பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா
புண் படுமே புண் படுமே புன்னகை செய்யலாமா பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா
ஆடவர் எதிரே செல்லாதே அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போன்ற கூந்தலைக் கொண்டு கன்னி உன் முகத்தை மூடு
தமிழ் காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே மேகத்துக்குள் ஓடு
கண்ணாடி முன்னால் நில்லாதே உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம்
இந்த மானிடர் உலகில் வாழ்கிறவரைக்கும்
தனியே வருவது பாவம்.
கண் படுமே பிறர் கண் படுமே

சாவித்திரி இரு மாறுபட்ட வேடங்களில் நடித்த ‘காத்திருந்த கண்கள்’ என்ற இப் படத்தின் இசை அமைப்பாளர் விஸ்வநாதன் -ராமமூர்த்தி. பாடல்கள் கண்ணதாசன்.

இந்திப் பாடலை எழுதிவர், சயீத் இக்பால் என்ற ஹஸ்ரத் ஜெயப்பூரி. அவர் காதலித்து மணந்த இந்து மனைவி சாந்தா ஜெயப்பூரிக்காக இப்பாடலை எழுதியதால் இப்பாடலில் இயற்கையான சொல் உவமைகள் வெளிப்பட்டன. அதற்குப் பொருத்தமாகவும் திரைப்படத்தின் காட்சிகளுக்கு ஏற்பவும் பாத்திரங்களின் மன உணர்வைக் கவித்துமான வரிகளில் சிறப்பாக எடுத்துக்காட்டும்படி கண்ணதாசனின் வரிகள் அமைந்திருப்பது தமிழ்ப் பாட்டின் கூடுதல் சிறப்பு.

படங்கள் உதவி: ஞானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x