

கடந்த ஆண்டு ‘குயின்’ படம் மூலம் பாலிவுட்டை கலக்கிய கங்கனா ரனாவத், இந்த ஆண்டு ‘கட்டி பட்டி’ படத்துடன் களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறார்.
நிகில் அத்வானி இயக்கும் இந்தப்படத்தில் கங்கனா கலைக் கல்லூரியின் மாணவியாக நடித்திருக்கிறார். கங்கனாவின் ஜோடியாக இம்ரான் கான். இருவரும் முதல்முறையாக இணைந்து நடிப்பதால் பாலிவுட் வட்டாரத்தில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் டிவிட்டரில் ‘கட்டி பட்டி’ படத்தில் கங்கனாவின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்வரவேற்பை பெற்றிருக்கிறது.
“இதுவோர் தனித்துவமான காதல் கதை. பாலிவுட்டின் வழக்கமான காதல் படங்களில் இருந்து ‘கட்டி பட்டி’ முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையாக இருக்கும். நவீன காதலின் எல்லா அம்சங்களையும் வித்தயாசமான முறையில் இந்தப்படம் பேசும்” என்கிறார் கங்கனா.
‘காதல் நசைச்சுவை’ வகையைச் சேர்ந்த இந்தப்படம் இளைஞர்கள் உறவுகளை நவீனமாக அணுகும் விதத்தைப் பற்றி விளக்குகிறது. “நகர வாழ்க்கையில் தம்பதிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை படத்தில் அலசியிருக்கிறார்கள்” என்கிறார் கங்கனா.
இந்தப் படத்தில் கங்கனாவின் ‘பாயல்’ கதாபாத்திரம் இந்திய பெண்களின் நவீன சிந்தனைப்போக்கிற்கு உதாரணமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. “திருமணம் என்னும் அரதப்பழசான நிறுவனத்தை நவீனப் பெண்கள் எப்படி அணுகிறார்கள் என்பதுதான் ‘கட்டி பட்டி’. இன்றைய இந்திய பெண்கள் தன்னம்பிக்கை, முற்போக்கு போன்ற விஷயங்களில் முன்னேறி கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக இந்தப்படம் இருக்கும்” என்கிறார் இயக்குநர் நிகில் அத்வானி.‘கட்டி பட்டி’ செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களின் தனித் துவத்தைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கங்கனா, ‘கட்டி பட்டி’யின் ‘பாயல்’ கதாபாத்திரத்திலும் அசத்துவார் என்று நம்பலாம்.