

ஐரோப்பிய திரைப்படவிழா புதன்கிழமை மாலை சென்னையில் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 11-ம் தேதி வரை நடக்கிறது.
திரைப்படவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இந்தோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் தலைவர் சிவன் கண்ணன், பொதுச்செயலாளர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர் ராம், நடிகை ஐஷிகா சர்மா, ஹங்கேரி நாட்டுத் தூதர் ஜானஸ் டெரன்யி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
‘வாய்ஸ் ஆஃப் யூத்’ என்ற கருவை மையமாக வைத்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை எடுத்துச்சொல்லும் படங்களாகத் தேர்வு செய்யப்பட்ட 19 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.
இந்த விழாவில் ஹங்கேரி நாட்டின் ‘ப்ரஸ் ஏர்’, பிரான்ஸ் படமான ‘லவ் லைக் பாய்சன்’, கனடாவின் ‘கில்லிங் போனோ’, பல்கேரியாவின் ‘ஸ்நேகர்ஸ்’, அயர்லாந்து படமான ‘பிரைட் விஷன்’, ஜெர்மனி படமான ‘லெஷன் ஆஃப் தி ட்ரீம்’ உள்ளிட்ட 19 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
பல்வேறு நாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைக் குவித்த இந்தத் திரைப்படங்கள் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெர்மன் தூதரக கலாச்சார மையத்திலும், கல்லூரிச்சாலையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் ஹால் ஆகிய இடங்களிலும் தினமும் மாலையில் திரையிடப்பட உள்ளன.