காதலை வாழ்த்தும் இயற்கை

காதலை வாழ்த்தும் இயற்கை
Updated on
1 min read

இயற்கையின் பல்வேறு அம்சங்களுடன் ஒப்பிட்டுத் தன் காதலியைத் திரை நாயகன் வர்ணித்துப் பாடுவதாக எழுதுவது திரைப்பாடல் ஆசிரியர்கள் கையாளும் உத்திகளில் ஒன்று. தன் காதலிக்கு இயற்கையை முகமன் கூற அழைக்கும் அப்படிப்பட்ட தமிழ்- இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் இந்திப் பாட்டு.

பாடல் வெளிவந்து கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் சென்னை உட்பட பல இடங்களில் வட இந்திய திருமணங்களின் `பாராத்’ என்னும் ஜானவாச ஊர்வலத்தில் தவறாமல் பேண்ட் வாத்தியக்காரர்கள் பாடும் இனிமையான பாடலாக இது விளங்குகிறது.

திரைப்படம். சூரஜ் (சூரியன்) 1966. பாடல் ஆசிரியர். ஹஸ்ரத் ஜெய்பூரி பாடியவர். முகமது ரஃபி.

இசை. சங்கர் ஜெய்கிஷன். நடிப்பு; ராஜேந்திர குமார், வைஜெயந்திமாலா.

பாடல்.

பஹாரோன் ஃபூல் பர்சாவோ
மேரா மெஹ்பூப் ஆயா ஹை
ஹவாவோ ராகினி காவோ
மேரா மெஹ்பூப் ஆயா ஹை
வோ லாலி ஃபூல் கி மெஹந்தி
லகா இன் கோரே ஹாத்தோன் மே

பொருள்:

வசந்தமே பூக்களைச் சொரியுங்கள்
என் காதலி வந்திருக்கிறாள்
தென்றலே ராகங்களைப் பாடுங்கள்
என் காதலி வந்திருக்கிறாள்
ஓ செந்தூரப் பூவே இவள்
சிவந்த கரங்களில் மருதாணி இடு
இறங்கி வந்த கருமேகமே இவள்
அழகிய கண்களுக்கு மை இடு
நட்சத்திரமே (இவள்) நெற்றியின் திலகமாகு
என் காதலி வந்திருக்கிறாள்
காட்சிகள் யாவும் கவின் மிகு
போர்வையாக மாறுங்கள் (ஏனெனில்)
நாணம் அதிகமுள்ள நங்கை இவள் (அதனால்)
வெட்கப்பட்டு விலகிச் செல்லாமல் இருக்கட்டும்
உள்ளமே கொஞ்சம் ஒத்திகை பார்த்துக்கொள்
என் காதலி வந்திருக்கிறாள்
எழிலாக்கியிருக்கிறது இளம் பருவம்
இந்த (என்) காதலின் தீவிரத்தை
இவை (யாவும்) அறிந்திருந்தன வரும் என்று
ஒரு நாள் (அந்த) காதலின் பருவ காலம்
வசந்தமே வண்ணங்களை வாரி இறை
என் காதலி வந்திருக்கிறாள்
வசந்தமே பூக்களைச் சொரியுங்கள்.

எழிலான இந்த வரிகளுக்கு இணையான வர்ணனையாகக் காதலியை வரவேற்கும் தமிழ் பாடல் இனி.

திரைப்படம்: பேசும் தெய்வம் (1967) பாடல் ஆசிரியர்: வாலி. இசை: கே.வி. மகாதேவன். பாடியவர் டி.எம்.சௌந்தர்ராஜன். நடிப்பு: சிவாஜி கணேசன், பத்மினி

தொகையறா:

ஆழியிலே பிறவாத அலை மகளோ
ஏழிசை பயிலாத கலை மகளோ
மூழி நடம் புரியாத மலை மகளோ
உலகத் தாய் பெற்றெடுத்த தலை மகளோ

பாடல்:

அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடி எடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்ல சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ
இளநீரைச் சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில்
வார்த்தை ஏது சொல்ல
தத்தி வரும் தளிர் நடையில்
பிறந்ததுதான் தாளமோ
தாவி வரும் கை அசைவில்
விளைந்ததுதான் பாவமோ
தெய்வ மகள் வாய் மலர்ந்து
மொழிந்ததுதான் ராகமோ
இத்தனையும் சேர்ந்ததுதான்
இயல் இசை நாடகமோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in