Last Updated : 10 Feb, 2015 10:43 AM

 

Published : 10 Feb 2015 10:43 AM
Last Updated : 10 Feb 2015 10:43 AM

வெட்டிவேரு வாசம் 22: தீர்ப்பை மாத்தி எழுது!

ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எழுதும் ஆர்வம் பிறந்துவிட்டது. பசி, ருசி என்று எதுகை மோனை யுடன் சின்னச் சின்ன கவிதைகளைக் கிறுக்குவேன். நான் படித்த பள்ளிக்கு நேர் எதிரில் ராமகிருஷ்ணா மடம். அதில் ஓர் இலவச நூலகம். பள்ளிக்கூடம் விட்டதும், நூலகத்துக்கு ஓடுவேன். அங்குதான் சிறுவர் பத்திரிகைகள் மூலம் வாண்டு மாமா, லெமன் ஆர்.வி., என்று பல எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். இருட்டும் வரைக்கும் ஆர்வமாகப் படிப்பேன்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது, நாமே கையெழுத்துப் பத்திரிகை நடத் தினால் என்ன என்று ஆர்வம் கிளர்ந்தது. பழைய நோட்டுகளில் எழுதாமல் விட்ட பக்கங்களைக் கிழித்து, நோட் புக்காகத் தைத்து மீண்டும் பயன்படுத்துவதே வழக்கம்.

பத்திரிகைக்காக புதிய நோட் புக் வாங்கும் வசதியெல்லாம் கிடையாது. நெருக்கமான நண்பன் ரமேஷ், சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். என் மீது பேரன்பு. 40 பக்கம் நோட் வாங்கித் தந்தான். ‘சிறுவர் மலர்ச் சோலை’ என்ற கையெழுத்து மாத இதழ் பிறந்தது.

கோடு போடாத நோட். ஒவ்வொரு தாளுக்குக் கீழும் கோடு போட்ட தாளை வைத்துக்கொண்டு, முத்துமுத்தாக கதைகள், கவிதைகள் எழுதுவேன். பாதி பக்கத்திலேயே கதை முடிந்துவிட்டால், மிச்சம் இருக்கும் இடத்தை துணுக்குகள் எழுதி நிரப்புவேன். துணுக்குகளுக்கான மேட்டரை, ராமகிருஷ்ணா நூலகத்தில் இருந்து திரட்டி வருவேன்.

முதல் மர்மத் தொடர் அதில்தான் முயற்சித்தேன். சுவாரஸ்யமான இடத் தில் ‘தொடரும்’ என்று போட்டுவிட்டு, மேலே கதையை எப்படி எடுத்துப்போவது என்று பிற்பாடு யோசித்ததும் உண்டு.

நோட் புத்தகத்துக்காக மாதாமாதம் ரமேஷையே தொந்தரவு செய்யச் சங்கடமாக இருந்தது. சிறுவர் மலர்ச் சோலைக்கு என்று ஒரு வைப்பு நிதி சேர்ந்துவிட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்!

தீபாவளி நெருங்கியது. ‘கல்கி’, ‘கலைமகள்’ இதழ்கள் போல ஒரு தீபாவளி மலர் வெளியிட்டால் என்ன? தீபாவளி மலர் என்றால் பெரிதாக இருக்க வேண்டுமே! ஒரு குயர் நோட்டாவது வாங்க வேண்டும். அதற்கான பணம்?

டிக்கெட் போட்டு விற்று, ஒரு நாடகம் போட்டு பணம் சேர்த்தால் என்ன என்று ஐடியா உதித்தது.

டிக்கெட் விலை 10 பைசா. குறைந்த பட்சம் 20 ரூபாயாவது சேர்க்க வேண் டும். ஆனால், எத்தனை பேரிடம் விற்க முடியும்? எங்கள் இரண்டு குடும்பத்தின ரைத் தாண்டி யார் வருவார்கள்? டிக்கெட்டை வாங்க, ஓர் அதிர்ஷ்டப் போட்டி அறிவித்தால் என்ன?

300 டிக்கெட்கள் விற்பது, முதல் பரிசு 5 ரூபாய், இரண்டாவது பரிசு 3 ரூபாய், மூன்றாவது பரிசு 2 ரூபாய் என்று 10 ரூபாயைப் பரிசாக அளிப்பது என்று தீர்மானித்தோம்.

நாடகம் போட, ரமேஷின் அம்மா தங்கள் வீட்டு ஹாலை இரண்டு மணி நேரம் ஒழித்துத் தர பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். நாடகத்தை எழுதி, ஒத்திகைகள் பார்த்துத் தயாரானோம்.

ஒரு நோட்டில் எண் எழுதி, அதற்கு நேரே டிக்கெட் வாங்குபவரின் பெயரை எழுதினோம். நண்பர்கள், தெரிந்தவர்கள், தெருவில் வசித்தவர்கள் என்று தேடி அலைந்தும், டிக்கெட்டை விற்பதற்குள் மூச்சு முட்டிப்போனது.

வகுப்புத் தோழன் லோகுவுக்கு சிறுவர் மலர்ச் சோலையிலோ, நாடகத்திலோ ஆர்வமே இல்லை. ஆனால், என் மீது ஒரு பிரியம். அவன் சேமிப்பு முழுவதை யும் கொண்டுவந்து, 25 டிக்கெட்கள் வாங் கினான். நம்பவே முடியவில்லை.

எப்படியோ 200 சொச்சம் டிக்கெட்கள் விற்று, 27 ரூபாய் சேர்ந்ததாக நினைவு.

ரமேஷ் வீட்டில் பெட்ஷீட்டைத் திரையாகத் தொங்கவிட்டு, நாடகம் நடந்தேறியது. 18 பேர் பார்த்தார்கள். கலைந்தார்கள்.

அடுத்து, அறிவித்தபடி பரிசுக்கான குலுக்கல். சீட்டுகளை எழுதி குலுக்கிப் போட்டோம். குட்டித் தங்கை ஒரு சீட்டு எடுத்தாள். வந்த எண்ணைப் பார்த் ததும், நெஞ்சு பதைத்தது. முதல் பரிசு 5 ரூபாய், போங்கு கிருஷ்ணனுக்கு விழுந்திருந்தது. அவன் வாங்கியது ஒரே ஒரு டிக்கெட்.

அதையும் இரண்டு தவணைகளில் எங்களை அலையவிட்டு, ஐந்து, ஐந்து பைசாக்களாகக் கொடுத் தவன். இரண்டாம் பரிசும், மூன்றாம் பரிசும் வேறு யார் யாருக்கோ போனது. மொத்தமாக 25 டிக்கெட்கள் வாங்கி ஆதரித்த லோகுவுக்கு ஒரு பரிசுகூடக் கிடையாதா?

நானும், ரமேஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

“இன்னொரு சீட்டு எடு...” என்றேன் தங்கையிடம். அந்த ஆறுதல் பரிசும் வேறு யாருக்கோதான் போயிற்று.

தங்கையை அனுப்பிவிட்டு, யோசித்தோம். அதிர்ஷ்டம் ஜெயிக்காவிட்டாலும், தர்மம் ஜெயிக்கட்டும் என்று, லோகுவுக்கு முதல் பரிசு 5 ரூ பாய், போங்கு கிருஷ்ணனுக்கு ஆறுதல் பரிசு ஒரு ரூபாய் என்று குலுக்கல் முடிவுகளை மாற்றி எழுதினோம்.

இன்றைக்கு லோகு அதே பள்ளிக் கூடத்தில் பணிபுரி கிறான்.

‘கோ’ திரைப் படத்தில் ஒரு காட்சி.

‘சிறகுகள்’ இளைஞர் குழு முதன்முறையாக தேர்தலில் போட்டி யிடும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள். ‘சிறகுகள்’ சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் கள் ஒவ்வொருவராக வெற்றி பெறும் செய்திகள் அறிவிக்கப்படும்.

எதிர்க்கட்சி அரசியல்வாதி ஆளவந்தான் (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்), ‘சிறகுகள்’ கிரணிடம் மோதித் தோற்றுப்போவார். அவரிடம் தேர்தல் முடிவுகளைப் பற்றி தொலைக்காட்சி நிருபர் கருத்து கேட்பார்.

“ஜெயிச்சவங்க யாரு..? எல்லாம் கம்ப்யூட்டர் படிச்ச பசங்க. ஓட்டு மெஷின்ல எந்த பட்டனைத் தட்டினாலும், அவங்களுக்கு ஓட்டு விழற மாதிரி மாத்தியிருப்பானுங்க. இது விஞ்ஞான சதி!” என்று அவர் பொருமுவார்.

இந்தக் காட்சியை எழுதும்போது, பள்ளிக்கூடத்தில் நானும் ரமேஷும் சதி செய்து மாற்றிய குலுக்கல் முடிவுகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x