

அது 1978-ம் ஆண்டு. ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ என்ற திரைப்படத்தை மதுரையில் பார்த்தேன். கமல், ஸ்ரீதேவி நடிப்பில், சினிமாத் தனங்கள் எதுவும் இல்லாமல், மிகவும் இயல்பாக எடுக்கப்பட்டிருந்த கதை. படத்தில் இடம்பெற்ற அனைத்துக் கதாபாத்திரங்களும் எந்தவித ஜோடனையும் இல்லாமல், யதார்த்தமாக இருந்தன.
படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ‘யார் இந்த ஆர். சி. சக்தி?’ என்று என் மனம் கேள்வி கேட்டுப் பாராட்டிக்கொண்டே இருந்தது. அதற்கு முன்பே கமல் ஹாசனை வைத்து ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தை அவர் இயக்கியிருக்கிறார் என்பதைப் பின்னர் நான் தெரிந்துகொண்டேன்.
ரஜினியைத் தூக்கி நிறுத்தியவர்
ரஜினிகாந்த் சற்று உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகிப் படவுலகமே அதுபற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திரைக்கு வந்த படம் ‘தர்மயுத்தம்’. ஒப்பந்தம் செய்யப்பட்ட பல படங்களிலிருந்து ரஜினியைத் தூக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்குக் கை கொடுத்த படம் ‘தர்ம யுத்தம்’. “பின்னணி இசை அமைப்பதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்து விளம்பரம் செய்துவிட்டார் தயாரிப்பாளர்.
அவசர அவசரமாகப் படத்தொகுப்புச் செய்து பின்னணி இசைக்குப் படத்தை அனுப்ப வேண்டிய நெருக்கடி நிலை. என்ன செய்கிறோம் என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்குப் படத்தொகுப்பின்போது எதையெதையோ வெட்டினோம், எதையெதையோ ஒட்டினோம். நாங்கள் செய்வது சரிதானா என்பதை உணரும் நிலையில்கூட நாங்கள் இல்லை. ஆனால் ‘தர்மயுத்தம்’ வெற்றி பெற்றுவிட்டது” என்று ஒருமுறை ஆர்.சி. சக்தி என்னிடம் கூறினார்.
உண்மைகள்
1983-ல் ஆர்.சி. சக்தி இயக்கிய படம் ‘உண்மைகள்’. யாரும் தொடுவதற்கே அஞ்சக்கூடிய கதை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டது. படம் முழுவதிலும் வாழ்ந்திருந்தார் சக்தி. அவரால் மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்த உரையாடல்கள் இப்போதும் என் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவரின் கடுமையான வசனங்களுக்காக என் மனதுக்குள் நான் கை தட்டினேன். சமூகத்தின் போலித்தனங்களையும், அவலங்களையும் மிகவும் கடுமையாகச் சாடியிருந்தார் சக்தி.
சிறை
ஆர்.சி. சக்தி எனக்கு நேரடியாக அறிமுகமானது ‘சிறை’ படம் தயாரிப்பில் இருந்தபோதுதான். அனுராதா ரமணனின் கதை. ராஜேஷ், லட்சுமி நடித்தார்கள். வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடக்கும். நான் பல நாட்கள் அங்கு சென்று ஆர்.சி. சக்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். காக்கி பேண்ட், காக்கிச் சட்டை அணிந்து ஒரு தொழிலாளியாகவே தன்னை நினைத்துக்கொண்டு, படத்தை இயக்கும் சக்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பாசத்துடன் அவரை ‘அண்ணா’ என்று அழைப்பேன்.
மிகவும் ஈடுபாட்டுணர்வுடன் படத்தை இயக்குவார் சக்தி. லட்சுமி கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சியொன்று படமாக்கப்பட்டபோது, தன்னை மறந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஆர். சி. சக்தி. அதுதான் அந்த உயர்ந்த கலைஞனின் தனித்துவக் குணம்!
விஜயகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்த ‘சந்தோஷக் கனவுகள்’ படம் தயாரிப்பில் இருந்தபோது, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ். திருமால், சக்தி கேட்ட குறைந்தபட்ச தேவைகளைக்கூடச் செய்து கொடுக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளலாமா என்று கூடப் பல நேரங்களில் நினைத்திருக்கிறேன் என்று சொன்ன சக்தியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
1986-ல் ரகுவரன் - அமலாவை வைத்து ‘கூட்டுப் புழுக்கள்’ என்றொரு அருமையான படத்தை இயக்கினார் சக்தி. நாவலாக வந்து புகழ்பெற்ற கதை. இன்றும் பலரின் மனதிலும் அப்படம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. வில்லன் நடிப்பிலும் தனித்துவம் காட்டிய ரகுவரனின் மென்மையான நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படம்.
அந்தப் படத்தில் நடிக்கும்போது சக்தி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் விதத்தைப் பற்றிப் பெருமையாக என்னிடம் ரகுவரன் கூறியிருக்கிறார். “நான் வேதனையை மனதுக்குள் வைத்து நடித்துக்கொண்டிருப்பேன். காட்சி படமாக்கப்பட்ட பிறகு, பார்த்தால் ‘கட்’ கூடச் சொல்லாமல் ஓரத்தில் உட்கார்ந்து சக்தி சார் அழுதுகொண்டிருப்பார். சக்தி சார் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்” என்று ரகுவரன் கூறிய வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.
க்ரைம் கதை வேண்டாம்
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு க்ரைம் கதையை ஒருமுறை அவரிடம் நான் கூறினேன். “இதை நீங்கள் இயக்குகிறீர்களா அண்ணே?” என்று வேண்டுமென்றே நான் கேட்டேன். “பல பெண்கள் கொலை செய்யப்படும் கதை இது. நான் பெண்களை வாழ வைப்பதற்காகப் படம் எடுப்பவன். என்னைப் போய் இதைச் செய்யச் சொல்றீங்களே ராஜசேகர்” என்றார் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே.
எழுத்தாளர் சவீதா எழுதிய ‘இவளா என் மனைவி!’ என்ற நாவலை விஜயகாந்த் கதாநாயகனாக, நடிக்க சக்தி இயக்குவதாக இருந்தது. அதற்கு இயக்குநராக சக்தியை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளரிடம் கூறியதே நான்தான். அதற்காகப் பாடல்கள்கூடப் பதிவு செய்யப்பட்டன. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடரவில்லை.
எனினும், அதே கதையை ஆர்.சி. சக்தி தொலைக்காட்சித் தொடராக இயக்கி, அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இரண்டு மணிநேர சினிமாவோ, 24 வாரத் தொடரோ எந்த ஊடகமும் சக்திக்கு வசப்பட்டிருந்தது.
1970-ல் ‘அன்னை வேளாங்கண்ணி’ படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர்களாகத் தங்கப்பன் மாஸ்டரிடம் பணிபுரிந்தபோது, கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட கமல் ஹாசனை, கடலுக்குள் குதித்துத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு வந்து, காப்பாற்றியதை நெகிழ்ச்சியுடன் ஒரு முறை கூறினார் சக்தி.
எளிமையின் மொத்த உருவம்
‘சிறை’ திரைக்கு வந்த முதல் நாளன்று ஆனந்த் திரையரங்குக்கு நான் படத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. கால்பகுதிகூட ஆட்கள் இல்லை. நான் மிகவும் வருத்தப்பட்டேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு, சக்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். “அண்ணே! படம் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களின் உரையாடல்கள் துணிச்சலான முயற்சி. குறிப்பாகப் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் லட்சுமி தாலியைக் கழற்றிக் கழிவறைக்குள் போடும் காட்சியில் கைத்தட்டல்.
எனினும் பெரிய அளவில் கூட்டம் இல்லை அதுதான் எனக்குக் கவலை. இந்தக் கவலையைத் திரையரங்கு வந்த பலரது முகத்திலும் பார்த்தேன். அசலான கலைக்காக ஏங்கும் இந்தக் கவலையை ஓர் அலையாக உங்கள் ‘சிறை’ திரைப்படம் உருவாக்கும். வரும் நாட்களில் வரப்போகும் சிறந்த படைப்புகளுக்கு அது அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கும்” என்று நான் கடிதம் எழுதியிருந்தேன். நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் அதே திரையரங்கில் ‘சிறை’ மக்கள் கூட்டத்துடன் 100 நாட்கள் ஓடியது வரலாறு!
ஆர்.சி. சக்தி தன் படைப்பாளு மையாலும் அரிய குணங்களாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆழமாகத் தடம் பதித்த பெயர். எளிமையின் மொத்த உருவம் அவர். அவரது தடம் புதிய தலைமுறையால் தொட்டுத் தொடரப்பட வேண்டும்.
மொழிபெயர்ப்பாளரான சுரா, திரைப்பட மக்கள் தொடர்பாளர்.
தொடர்புக்கு: writersura@gmail.com