டென்மார்கில் பயணிக்கும் தாறுமாறான த்ரில்லர்

டென்மார்கில் பயணிக்கும் தாறுமாறான த்ரில்லர்
Updated on
2 min read

டென்மார்க் நகரமெங்கும் போராட்டம், தொலைக்காட்சி சேனல்கள் எல்லாவற்றிலும் ஓர் அனல் பறக்கும் விவாதம். டென்மார்க் அரசாங்கம் அமெரிக்க அரசுடன் இணைந்து பனிக்கட்டிகளை உடைத்து கச்சா எண்ணெய் எடுக்க டீல் பேசுகிறது. ஒரு புறம் இந்த டீல் தரக்கூடிய வர்த்தக ஆதாயம், மறுபுறம் இதன் விளைவுகள் விவாதிக்கப்படுகிறது. டென்மார்க் அரசாங்கம் யூ.எஸ் உடன் டீலுக்குக் கையொப்பம் இடுகிறது. அவ்வளவுதான் முதற்காட்சி முடிகிறது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு –

அமைச்சரை தொலைக்காட்சிப் பேட்டியில் தேளைப் போல் தன் கேள்விகளால் கொட்டியெடுக்கிறார் நிருபர் மியா மோஸ்கார்ட்.

தாடி வைத்த நடுத்தர வயதினர் ஒருவர் டென்மார்க்கிற்கு வருகிறார், வீட்டில் அமைதியாக தன் தந்தைக்கு உணவு ஊட்டுகிறார். அடுத்த நாள் மியாவின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு ‘நீங்க பேசினது தான் சரி. இது நடக்கக் கூடாது. நான் உங்களுக்கு இதைப்பற்றிய தகவல்களை சொல்கிறேன்’. மியா நீங்க யார்? ஷ்!! நிசப்தம் அழைப்பு துண்டிக்கப்படுகிறது.

படம் தொடங்கிய பதினைந்து நிமிடங்களில் இவ்வளவு பரபரப்பு . எங்கே, கடிகாரத்தைப் பார்க்க விட்டால் தானே! முதற் காட்சியிலிருக்கும் சூடு, வேகம் கடைசி வரை தணியாமல் பயணிப்பது படத்தின் ஹைலைட்.

மார்கெட்டில் காய்கறி வாங்கச் செல்லும் நாயகன் தொலைக்காட்சியில் அரசியலை நையாண்டி செய்யும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கிறான். சிறிது நேரம் கழித்து அந்நிகழ்ச்சியை நடத்திய பெண் நிருபருக்கு ஒரு போன் கால். ‘மிஸ் நதாஷா ராஜ்குமார்.. உங்க வாழ்க்கையை மாற்றி அமைக்கப் போகிற சென்சேஷனல் நியூஸ், வேணுமா?’. அப்படியே முடியப் படாத கட்டிடத்தின் மாடியிலிருந்து கண்ணாடி துடைத்துக் கொண்டே பேசும் கமல்ஹாசனும், அனுஜா ஐயரும் ஞாபகம் வருவார்களே. ஒரு வரியில் கூறினால் கிட்டத்தட்ட இப்படம் ’உன்னைப் போல் ஒருவன்’ சாயலில் அமையப்பட்ட படம் போலத் தான் தோன்றும். ஆனால் இந்த கதை வேற மாதிரி.

கதாநாயகன் பனிக்கட்டிகளை உடைத்து எண்ணெக் கிணறு உருவாக்குவதால் மக்களுக்கு ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டையும், உலகம் வெப்பமயமாகும் அபாயத்தையும் தடுப்பதற்காக போராடுகிறான். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் நாயகன் தனிப்பட்ட முறையில் பாதிப்பு அடைந்தது போலவோ, அவன் குடும்பம் இதனால் சிதைவடைந்தது போன்ற தாக்கங்களையோ திரைக்கதை கையாளவில்லை. இது நடக்கக்கூடாது, நடந்தால் சர்வ நாசம் தான் என்பது நாயகனின் எண்ணம். இவ்வளவு தான் படத்தின் பின்னணி. இதுவரை பார்த்த படங்களிலிருந்து, இப்படம் வேறுபடுவது இந்த அம்சத்தில் தான். நாயகனின் நடவடிக்கைகளுக்கு பின்னணியோ காரணமோ பெரிதாக கூறப்படவில்லை. திரைக்கதை அதற்கு நேரம் ஒதுக்கவும் இல்லை.

படத்தில் PARALLEL SCREENPLAY மிகச்சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. ஒரு புறம் நாயகனின் லட்சியம், மற்றொரு புறம் அரசாங்கத்தின் முடிவு, நிருபராக வரும் பெண்ணுக்கு அமையப்பட்ட தனிப்பட்ட கமிட்மென்ட், போலீஸ் விசாரணை, மக்களின் எதிர்ப்பு, மீடியாவின் விதிகள் இப்படி பல திசைகளில் பிரயாணம் செய்கிறது திரைக்கதை.

தப்பித்து ஓட நினைக்கும் மியாவை பின்னே இருந்து ஒரு கார் துரத்துவது போன்ற அனுபவம். பயந்து வேகமாக காரை எடுக்கிறாள் மியா, திடீர் என்று தன்னைத் தான் தொடர்கிறார்களோ என்ற ஐயதில் வண்டியில் வேகமாக ரிவர்ஸ் கியர் எடுக்கிறார். எதிரே உள்ள காரினுள்ள விளக்குகளின் ஒளி கண்ணை சிலிர்க்க செய்கிறது. முன்னுள்ள கார் தரும் ஒலி மியாவின் கார் மீது விழ, அவள் தனது முன்பிம்பத்தை பார்க்கிறாள். பின்னே ஜெர்கின் அணிந்த ஒரு ஆள். அப்படியே தூக்கிவாரிப் போடுகிறது அவளுக்கு. இக்காட்சியில் மிரட்சியையும் ஐயத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் நாயகி. இவர் எக்ஸ்ப்ரெஷன்களில் பிரித்து மேய்கிறார்.

எதைக் கூற வேண்டும் என முடிவெடுத்து, அதைத் தெளிவாக விறுவிறுப்பாக கூறியுள்ளார் இயக்குநர் Annette K. Olesen. முதற்காட்சியிலிருந்து கன்னத்தில் வைத்த கைகள் படம் முடியும் வரை விலகவில்லை. பிலிம் பெஃஸ்டிவல்களில் போடப்படும் டிராமா ஜானர் படங்களுக்கிடையே க்ரைம் த்ரில்லர் பிரிவில் அமைந்த இப்படத்தை வித்தியாசம் என விவரிப்பது மிகையாகாது.

ஷூட்டர் – சூப்பர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in