Last Updated : 24 Feb, 2015 09:57 AM

 

Published : 24 Feb 2015 09:57 AM
Last Updated : 24 Feb 2015 09:57 AM

வெட்டிவேரு வாசம் 24- தொகுர்னே தொலுகு எகிறிடும்..!

பள்ளிக்கூட வயதில் கோலி விளை யாடுவேன். ‘அடி அடிச்சி ஜாண்’ விளையாட்டில், எதிரியின் கோலியை நம் கோலியால் அடிக்க வேண்டும். எதிரியின் கோலி அடிபட்டு உருளும். நம் கோலியை உருட்டி எதிரி கோலியில் இருந்து ஒரு ஜாண் நீளத்தில் நிறுத்த வேண்டும்.

நம் விரல்களால் ஜாண் அளந்து இரு கோலிகளையும் தொட்டுக் காட்டிவிட்டால் நாம் வென்றவர்கள். தொடாவிட்டால் தோற்றவர்கள். ஒரு ஆட்டத்துக்கு ஒரு கோலி பந்தயம்.

வெற்றி - தோல்வி மாறி மாறி வரும். வீடு திரும்பும்போது கொண்டு வந்ததை விட அதிக கோலிகள் இருந்தால் பணக் காரன். சந்தோஷம். இருப்பு குறைந்து விட்டாலோ ஏழை! சோகம்!

தினமும் 20 கோலிகளோடு வருவேன். திரும்பிப் போகும்போது பாதிதான் மிச்சம் இருக்கும். எதிரியின் கோலி யைக் குறிவைத்து அடிப்பதில் பிரச்னை இருந்ததே இல்லை.

ஜாண் வைத்துக் காட்டும்போதுதான் தகராறே. என் விரல்களுக்கு நீளம் பற்றாது. இரு கோலிகளையும் விரல்கள் தொடாது. ஒரு கோலி இழப்பாகும்.

தினமும் இப்படிப் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தான் வாசு அறிமுகமானான்.

வாசுவின் அப்பா சைக்கிள் ரிக் ஷா ஓட்டுபவர். பெல்ஸ் சாலையில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தடிதான் வீடு. அங்கேயே சமையல், குளியல், தூக்கம் எல்லாமே!

வாசுவுக்கு செழிப்பான உடல். கை, கால்கள் உருட்டுக்கட்டைகள். வேலி முருங்கை போல் நீளமான விரல்கள். நான் விளையாடுவதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். நான் தோற்கும்போதெல்லாம் சோகமாவான்.

ஒரு நாள் ஜாண் வைத்துக் காட்ட முடியாமல் நான் திணறியபோது வாசு களத்தில் குதித்தான். “நீ ஒத்து கண்ணு… ஒத்தேன் சொல்றேன்…” என்று குந்தி அமர்ந்து ஜாண் வைத்தான். அவனது கட்டை விரலும், சுண்டு விரலும் பாம்பு கள் போல் நீண்டு, இரு கோலிகளையும் தொட்டன. பிரமிப்பில் உறைந்தேன்.

“பெல்லக்காப் பையனை டபாய்ச்சி அவனாண்டருந்து எல்லாத்தையும் லவுட்டப் பாக் கறீங்களா.. பட்டா.. நடக் காது மாமூ. வெட்றா மாலை…” என்று எதி ரணிப் பையனிடம் பந்த யக் கோலியைக் கவர்ந்து கையில் திணித்து, “நெஜாரு ஜோபில உட்டுக்கோ...” என்றான்.

“ஐய… இன்னா போங் காட்டமாக்கீது?” என்று ஒருவன் எதிர்த்தான்.

“இன்னாடா அவாஸ் உடறே? ஒனக் கின்னா… ஜாண் வெச்சிக் காட்ணும். அவ்ளவ்தான? வெரலு என்தா இருந்தா என்னா, அவன்தா இருந்தா என்னா? த பார்… என்னாண்ட தொகுர்ர வேலைல்லாம் வெச்சினே... தொலுகு எகிறிடும்” என்று வாசு மிரட்டினான். அவனுடைய உடல்மொழியும், வாய் மொழியும் பையன்களின் வாயை அடைத்தது.

கோலியை அடிப்பது நான், ஜாண் வைத்துக் காட்டுவது வாசு என்று புதுக்கூட்டணி உருவாகியது. அதுவுமில்லாமல் வாசு எனது இசட் செக்யூரிட்டியாகவும் விளங்கினான்.

தினம் ‘ஜோபி’ கலகலத்தது. ஜெயித்த கோலிகளை பாதி விலைக்கு விற்று, சோனா ஹோட்டலில் சமூசா, டீ. ஞாயிறுகளில் ஆளுக்குக் கால் பிளேட் பிரியாணி.

“ஏம்ப்பா… சால்னா ஊத்னா கொறஞ்சா போய்டுவே? துண்டு ஏதாவது கீதா பாரு...” என்று சப்ளையரை மிரட்டி கறித் துண்டுகளோடு குருமா பரிமாற வைப்பான்.

அவன்தான் எனக்கு காற்றாடி நூலுக்கு மாஞ்சா போடக் கற்றுக் கொடுத்தான். வஜ்ரம், வாட்லோடு (பாட்டில் ஓடு - கண்ணாடித் துகள்கள்) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினான்.

காற்றாடி விடுவதிலும் தகராறு வரும். வாசுதான், “உட்டாலங்கடி கிரிகிரி, ஆயா வூட்டு வடகறி, ஒம் மூஞ்சில எம் பீச்சக்கைய வக்கோ, நெஞ்சில கீற மஞ்சா சோத்தை எடுத்துடுவேன்… வகுந் துடுவேன்” என்றெல் லாம் சொல்லாயுதங் களை ஏவி என் னைப் பாதுகாப்பான். அவனால் காற்றாடி டீல்களில் ஜெயித்திருக் கிறேன்.

என் பேச்சு அகராதி யில் ‘உதாரு, சப்பை, லொட்ர, இசு, புட்டுக்கிச்சி, வூடு கட்றது, நாஷ்டா, குஜிலி, பலானது’ எனப் பல கலைச் சொற்கள் சேர்ந்தன.

எங்களது ‘செல்வா-முருகேசன்’ நாவல்களில் முருகேசன் வாசுவின் சென்னைத் தமிழால் செல்வாவைப் பதறவைப்பான்.

வாழ்க்கைப் பாதை மாறி, பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் வாசுவைப் பார்த்தேன். காலில் எலும்பு முறிவுக்கான மாவுக் கட்டுடன் ரிக் ஷா ஓட்டிக் கொண்டிருந்தான்.

“கண்ணு வா... வா. நல்லாக்கீறியா? ஆட்டோக்கார பேமானி இட்ச்ட்டாம்பா...” என்றான்.

“என்னா வாசு ரிக் ஷா ஓட்றே?”

“நீ பட்ச்சே… நல்லாக்கீறே. என் சகவாசம் சரியில்ல. பீடி, சல் பேட்டா, சொண்டிச்சோறு, மங்காத் தான்னு நாஸ்தியாய்ட்டேன். அந்தக் கஸ்மாலம்லாம் இப்ப இன்னாத் துக்கு? இதாம்பா… நான் மெர்ச லாயி கட்டிக்கினவ...” என்று மனைவியை ஆலமரத்தடி வீட்டில் அறிமுகப்படுத்தினான்.

“சொல்லினே இருப்பேன்ல. மொக்கு மாவு, மொக்கு மாவுன்னு. அது ஒண்ணியும் இல்லப்பா… நீ கொஞ்சம் நெறமாக்கீறியா? (மொக்கு மாவு என்றால் கோலப்பொடி) இவன்தாம்மே அது…”

“பேசினேருக்கியே… அத்த இட்னு போய் டீ வாங்கிக் குடு” என்று உபசரித்தாள் வாசுவின் மனைவி.

எவ்வளவு வற்புறுத்தியும் நான் கொடுத்த ஆயிரங்களை வாங்க மறுத்துவிட்டான். டீக்குக் கூட என்னைக் காசு கொடுக்கவிடவில்லை. ஏனோ உள்ளம் தேம்பியது.

‘ஐ’ திரைப்படத்தில் கதாநாயகன் லிங்கேசன் சென்னை வழக்குமொழி பேசுபவன். அவனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுப்பாள், நாயகி தியா.

‘மாடல் அழகியாக இருப்பவள் தன் காதலை அவனுடைய சென்னை வழக்கு மொழியில் வெளிப்படுத்தினால் வித்தியாசமாக இருக்குமே..?' என்று இயக்குநர் ஷங்கர் கேட்டார்.

விக்ரமும், எமி ஜாக்சனும் சென்னைத் தமிழில் ‘போட்டு - வாங்கி’ காதலைத் தெரியப்படுத்திய அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு.

‘அயன்’ படத்தில் சூர்யாவும் ‘அனேகன்’ படத்தில் தனுஷும் சென்னைத் தமிழில் பிளந்து கட்டினார்கள். அந்த சென்னைத் தமிழுக்கு மூலகாரணம் மறக்க முடியாத அந்த ரிக்ஷா வாசுதான்.

- வாசம் வீசும்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x