

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெளிவந்த ‘சூது கவ்வும்’ படம் தற்போது இந்தியாவின் பல மொழிகளுக்கும் தன் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
‘கடம் கேங்’ என்ற தலைப்பில் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டுவரும் இந்தப் படத்தைச் சந்தோஷ் என்பவர் இயக்குகிறார். விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர் நடிக்கிறார்.
இன்று பிரபல நடிகராகிவிட்ட பாபி சிம்ஹா ‘சூது கவ்வும்’ படத்தில் நடிகை நயன்தாராவின் மிகப் பெரிய ரசிகனாகத் துணைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார். பொதுமகளிடம் நிதி திரட்டி நயன்தாராவுக்கு தனது கிராமத்தில் சிலை திறந்து, அதற்காக மக்களிடம் தர்ம அடிவாங்கிக் கொண்டு, கெட்டும் சென்னைப் பட்டினத்துக்கு அவர் வந்து சேருவது மிகவும் ரசிக்கப்பட்டது.
தெலுங்குப் பதிப்பில் இந்தக் காட்சியில் அனுஷ்காவுக்கு சிலை வைக்க முடிவு செய்திருக்கிறாராம் டாக்டர் ராஜசேகர். இதற்காக அனுஷ்காவிடமிருந்து முறைப்படி அனுமதி கேட்டிருக்கிறார்கள். அனுஷ்கா தனது குடும்ப ஜோதிடரிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகச் கூறியிருப்பதால் அந்தக் காட்சியைப் படம்பிடிக்காமல் அப்படியே வைத்திருப்பதாகத் தகவல்.