

“இந்தப் படம் என் மனசுக்கு நெருங்கிய படம். அதனால ரொம்ப ஆசையாய் நடித்திருக்கிறேன். ஸ்ரீகிருஷ்ணா, ரம்யா நம்பீசன், மகேஷ் முத்துசாமி என ஒரு அருமையான குழுவில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷம்” எனச் சிரிக்கிறார் அருள்நிதி.
‘மெளனகுரு’வில் அசாதாரணமாகக் கவர்ந்த நடிகன். இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் இருக்கிறார். கல்யாணம், அரசியல் ரெண்டைத் தவிர நீங்க என்ன வேணா கேளுங்க என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார்.
‘நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்’ படத்தில் நகைச்சுவைதான் பிரதானமா?
சமகால நகைச்சுவை படம் என்று சொல்லலாம். திரைக்கதையில் நடக்கும் சம்பவங்கள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். ஆனால் படத்தில் நாங்க ரொம்ப சீரியஸா இருப்போம். நான், சிங்கம்புலி, பக்ஸ் ஆகிய எங்க கூட்டணி சேர்ந்து பண்ற விஷயங்கள் ரகளையா இருக்கும். ‘காதல் கனிரசம்’ன்னு தொடங்குற பாடலைக் கறுப்பு வெள்ளையில் படம்பிடிச்சிருக்கோம்.
பாடலிலும் காமெடி இருக்கும். படத்துல கருத்து எதுவும் கிடையாது. முழுக்க காமெடிதான் என்று நினைத்தால் அதுவும் தப்பு. எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பும் யோசனை செய்ய வேண்டும் என்று படம் முடிஞ்சதும் இயக்குநர் அவருடைய குரலில் பேசியிருப்பார். ஆக நல்ல கருத்தையும் இப்படத்தில் சொல்லி இருக்கிறோம். இதுக்குமேல என்ன வேணும் சொல்லுங்க.
பேய்ப் படங்கள் வெற்றிபெற்று வருகிறது என்றவுடன் உடனே ‘டிமாண்டி காலனி’ன்னு ஒரு பேய்ப் படத்துல நடிக்கிற மாதிரி தெரியுதே..
இதுவரை வந்த பேய்ப் படங்களின் எந்தவொரு சாயலும் இந்த காலனியில இருக்காது. எல்லாருமே இதையேதானே சொல்றாங்கன்னு நினைக்கலாம். படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்க. ‘டிமாண்டி காலனி’ வழக்கமில்லாத பேய்ப் படம். த்ரில்லர் வகையில அல்லு பறக்கப்போற படம்.
இப்போவெல்லாம் வாரத்துக்கு ஐந்து படங்கள் வெளியாகுது. அதனால சரியான நேரம் பார்த்து வெளியிட வேண்டியதிருக்கு. ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ வெளியான உடனே ‘டிமாண்டி காலனி’ வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்.
உங்களுக்கான கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
இதுவரைக்கும் ஏழு படங்கள் பண்ணியிருக்கேன். ‘வம்சம்’, ‘உதயன்’, ‘மெளனகுரு’, ‘தகராறு’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘டிமாண்டி காலனி’ இப்படி எல்லாப் படக் கதைகளும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் இருக்கும். என்கிட்ட கதை சொல்ல வர்ற இயக்குநர்கள் கிட்ட முழுக்கதையும் கேட்டுவிட்டு, திரைக்கதை எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கான்னு பார்ப்பேன்.
என்னுடைய வேடம் நன்றாக இருக்கிறதா என்பதைப் பார்த்து நான் படங்கள் ஒப்புக்கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை திரைக்கதைதான் முக்கியம். இப்போகூட ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் சிங்கம்புலி அண்ணனுக்குத் தான் நல்ல ரோல். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. எப்போதுமே திரைக்கதைதான் ஹீரோ. அந்தத் திரைக்கதையில் நான் ஒரு வேடத்தில் இருக்கணும். அவ்வளவுதான்.
அந்த ஹீரோ மாதிரி ஆகணும், இந்த ஹீரோ மாதிரி ஆகணும்னு நான் சினிமாவுக்கு வரல. 10 படங்கள் நடிச்சு முடிச்ச பிறகு, இவன் வித்தியாசமான படங்களா பண்றான் அப்படிங்கிற பேர் கிடைச்சா போதும். ஆக் ஷன், காமெடி, த்ரில்லர் இந்த மாதிரியான படங்கள் மட்டும்தான் பண்ணனும்னு எனக்குக் கிடையாது. கதை நல்லாயிருக்கா அதுல ஆக் ஷன், காமெடி எதுவானாலும் பண்ணுவேன்.
தொடர்ச்சியாக 2 நகைச்சுவைப் படங்கள் பண்ணியிருக்கிறீர்கள். காமெடி பண்ணுவது கஷ்டமாக இல்லயா?
என்னோடு பேசிப் பழகியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நான் எவ்வளவு ஜாலியான ஆள் என்று அவர்கள் சொல்லுவார்கள். இயல்பாகவே ஏதாவது பேசினால் உடனுக்குடன் கவுண்டர் கொடுத்துவிடுவேன்.
ரொம்ப நெருக்கமான நண்பர்கள் என்றால் அடிக்கும் காமெடி லூட்டிகளுக்கு அளவே கிடையாது. அதனால் காமெடி படங்கள் பண்ணுவது எனக்கு எப்பவுமே கஷ்டமாக இருக்காது.