

உலகின் ஒப்பற்ற, ஒட்டுமொத்த திரைக் கலைஞன் சார்லி சாப்ளின். நடிப்பு மட்டுமின்றிக் கதை, வசனம், இசை, நடனம், படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு என அத்தனை துறைகளின் வித்தகன் சாப்ளின். பேசும் படம் வந்தபின் மவுனப்படங்கள் எடுத்தவர் அவர். அவரது தாக்கம் இல்லாத உலக நடிகர் இல்லை எனச் சொல்லலாம்.
இந்தியில் சார்லி சாப்ளினின் கதாபாத்திரம், உடல் மொழி, கதை அம்சம் எனப் பலவற்றையும் நகல் எடுத்து வெற்றி கண்டவர் ராஜ்கபூர். நம் கமலுக்கும் சாப்ளினின் தாக்கங்கள் நிறைய உண்டு. அபூர்வ சகோதரர்கள் படத்தில் ‘உன்னை நினைச்சேன்’ பாடல் வெளிப்படையாக சாப்ளின் பாணியில் எடுக்கப்பட்டது.
சாப்ளின் தன் சொந்தக் கதையைப் பல படங்களில் பல தளங்களில் அற்புதமாகக் கோத்திருப்பார். மிகுந்த வறுமையான பின்புலத்திலிருந்து நடிக்க வந்தவர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். தந்தை தெரியாது. தாய் மனநலம் குன்றி மருத்துவமனையில் வாழ்கிறாள். ஒன்பது வயதில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்.
அவரின் மேடைப் பண்புகளும் அசாத்திய நகைச்சுவைத் திறனும் அவரை அமெரிக்கா கூட்டிச்சென்று நகைச்சுவை நடிகர் ஆக்குகின்றன. . அவரது மேடை நாடகங்கள் மவுனப் படங்களுக்கு வித்திடுகின்றன. தனது பத்தொன்பதாவது வயதில் உலகப்புகழ் அடைகிறார்.
அவரது அத்தனை கதைகளிலும் நாயகன் கதாபாத்திரம் பரம ஏழை, அப்பாவி, கோமாளி, கருணை மிகுந்தவன், அடக்குதலுக்கு அஞ்சாதவன், பொதுவுடைமை சிந்தனை கொண்டவன், தூய அன்பில் கரைந்து கொள்பவன் என சமூக உதிரியான மனிதர்களின் பொதுத்தன்மை கொண்டது.
அவரது தி கிட், கோல்ட் ரஷ், மாடர்ன் டைம்ஸ், சர்க்கஸ், சிட்டி லைட்ஸ் ஆகிய படங்கள் சமூகச் செய்திகள் நிறைந்தன. இருந்தும் தி கிரேட் டிக்டேட்டரை இப்பகுதிக்குத் தேர்வு செய்யக் காரணம் அதன் அரசியல் நையாண்டித் தன்மை. அது மட்டுமல்ல, இன்றைய பன்னாட்டு அரசியல் சூழ்நிலைக்கு அவர் கூறும் செய்தி பொருந்திப் போவதால்.
இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன் வெளிவந்த படம் இது. ஜெர்மானிய அதிபர் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரி வேடத்திலும், ஒரு சாமானிய நாவிதனாகவும் படத்தில் இரு வேடங்கள் சாப்ளினுக்கு. முழுக்க முழுக்க ஹிட்லரின் நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்தையும் நகலெடுத்து, ஹென்கல் எனும் சர்வாதிகாரியாக அற்புதமாக நடித்திருப்பார்.
பெரும்பாலும் மவுனப் படங்களில் மட்டுமே பார்த்த சாப்ளினின் வசனம் கூடிய நடிப்புக்கும் அபார வரவேற்பு கிடைத்தது. கடைசிக் காட்சியில் அவர் ஆற்றும் நெடும் உரை சத்தான வசனத்துக்காகவும், ஒரு நீண்ட காட்சியின் வசனத்தைப் பிசிறில்லாமல் இடைவிடாது பேசி நடித்ததற்காகவும் உலக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.
கதைப்படி முதல் உலகப் போரின் வீரன் ஒருவன் தன் படைத்தளபதியைக் காத்து, தான் காயமுற்று, நினைவு தப்பி மறதி நோயில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அங்கிருந்து தப்பி, பழைய வாழ்க்கையை மறந்து முடி திருத்துபவராய் வாழ்க்கையை மேற்கொள்கிறான். அருகில் வாழும் பணிப்பெண்ணுடன் அழகான காதல் கொள்கிறான். இது நாவிதன் வேடத்தில் முதல் சாப்ளின்.
அந்நாட்டு சர்வாதிகாரி யூதர்களை அழித்துப் பெரு நாசம் விளைவித்து வருகிறான். அதிபரின் அறிவுரையாளர்கள் தரும் தீய ஆலோசனைகளை மேற்கொண்டு கிளர்ச்சியாளர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் சிறை பிடித்து சித்ரவதை செய்கிறான். உலகம் முழுதும் தன் கட்டுக்குள் என்கிற முட்டாள்தனமான கனவில் பாதகம் செய்யும் கதாபாத்திரத்தில் மற்றொரு சாப்ளின்.
அண்டை நாட்டுப் படையெடுப்பில் அடுத்த நாட்டுத் தலையீட்டைச் சமாளிக்க அந்த அதிபரை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறான். (அது இத்தாலியின் முசோலினியை நகலெடுத்த பாத்திரம்). இரு பெரும் சர்வாதிகாரிகளை நையாண்டி செய்யும் துணிவு சாப்ளினைத் தவிர யாருக்கு வரும்?
முடிவில் ராணுவத்துக்குப் பயந்து தப்பியோடும் நாவிதனை, உருவ ஒற்றுமையால், அதிபர் என நம்பி மேடை ஏற்றுகிறார்கள். நிஜ அதிபரை எல்லைப் படையினர் வாத்து சுடுகையில் தவறுதலாகக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
அதிபர் உரையை நிகழ்த்தும் சாமானியன் உரையுடன் படம் முடிகிறது.
“எனக்கு யாரையும் ஆள விருப்பமில்லை. எல்லா இன மக்களுக்கும் உதவத்தான் நினைக்கிறேன். மற்றவர்களை மகிழ்விப்பதுதான் மனிதத்தனம். துன்புறுத்துவதில் அல்ல. இந்தப் பூமியில் எல்லாருக்குமான உணவு இருக்கிறது. சுதந்திரமாகவும் அழகாகவும் வாழலாம். ஆனால் நாம் எங்கோ வழி தவறிவிட்டோம்.
பேராசை நம் ஆன்மாக்களை நச்சுப்படுத்திவிட்டது. உலகில் ரத்தக்களறி ஏற்படுத்திவிட்டது. இயந்திரங்கள் நம் தேவைகளை அதிகரித்துவிட்டன. நம் அறிவு கருணையை இழக்கச் செய்துவிட்டது. நாம் சிந்திக்கும் அளவு உணர மறுக்கிறோம். அதிக இயந்திரங்களைவிட அதிக மனித நேயம் நமக்குத் தேவை. மனித நேயம் கிடைக்காவிட்டால் உலகில் வன்முறைதான் மிஞ்சும்.
அறிவியல் வளர்ச்சி மூலம் என் குரல் உலகெங்கும் ஒலிக்கிறது. இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் நசுக்கப்பட்ட ஆண்கள். பெண்கள், குழந்தைகளே.. நீங்கள் யாரும் கலங்க வேண்டாம். வெறுப்பின் காலம் முடியும். சர்வாதிகாரிகள் மடிவார்கள். விடுதலை பிறக்கும்.
வீரர்களே... நீங்கள் இயந்திர மனம் கொண்டோர்கள் ஆணையை ஏற்கும் இயந்திரங்கள் அல்ல. மனித நேயமும் அன்பும் கொண்ட மனிதர்கள். அடிமைத்தனத்துக்குப் போராடாதீர்கள். அன்புக்குப் போராடுங்கள்!
இறைவனின் சாம்ராஜ்ஜியம் மனித மனதில்தான் உள்ளது. உங்கள் மனதின் சக்தியை உணர்ந்து மக்கள் சக்தியை கூட்டுவோம்.
அனைவரும் இணைந்து போராடுவோம். புது உலகம் படைப்போம். அதில் எல்லா இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கட்டும். வயோதிகர் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கட்டும்.
இது சர்வாதிகாரிகளால் ஆகாது. உங்களைப் போன்ற வீரர்களால்தான் முடியும். ஜனநாயகத்தின் பேரால் இணைவோம்!!”
ஜனநாயகத்தின் மதிப்பு அறியாத மக்கள் இந்தப் படம் பார்த்தால் நம்பிக்கை கொள்வார்கள்.
உலகை வெல்லும் வெறியுடன் பூமிப்பந்து பொம்மையைத் தட்டித் தட்டி விளையாடும் காட்சி ஒன்று போதும். சர்வாதிகாரம் பற்றிப் புரிய வைக்க. பூமிப்பந்தை கைகளால், கால்களால், தலையால், புட்டத்தால் தட்டி விளையாடுவார் சர்வாதிகாரி சாப்ளின்.
அதிகாரக் குவிப்பின் குரூர முகத்தை இதைவிடத் தீவிரமாய்- அதுவும் விளையாட்டாய்- யாராலும் சொல்ல முடியாது!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com