இது கிளிப்பிள்ளை கேமரா!

இது கிளிப்பிள்ளை கேமரா!
Updated on
1 min read

நவீன யுகத்தின் முப்பரிமாண அனிமேஷன் படங்கள் இன்று பெரிய வெற்றிகளை ருசி பார்த்து வருவதற்குக் கதையும் கதாபாத்திரங்களும் மட்டுமே காரணமல்ல. கதையைப் பிரமாண்ட காட்சிக் கோணங்களில் காட்ட வழிசெய்த முக்கியக் காரணமாகப் பங்காற்றுகிறது மெய்நிகர் கேமரா.

சினிமா கேமராவைவிட அதிவேக ஜூம், 360 டிகிரியில் எத்தகைய அசாதாரணக் கோணத்திலும் சுழன்று கதாபாத்திரங்களை சாகஸத் தன்மையுடன் சித்தரிக்க வழிவகை செய்கிறது.

இந்த வெர்ச்சுவல் கேமரா இயங்கக் கணக்கீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சினிமா கேமரா இயங்கவும் காட்சிகளைப் பதிவுசெய்யவும் வெளிச்சம் முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆனால் வெர்ச்சுவல் கேமராவுக்கு இயற்கை வெளிச்சம் கிடையாது, முக்கியமாக சென்சார் கிடையாது எல்லாம் கணினியில் நாம் கணக்கிட்டு உள்ளீடு செய்யும் அளவீடுகள்தான்.

காட்சிக் கோணத்தில் இடம்பெறும் அரங்கப் பொருட்கள், அவற்றின் தோற்றம், நிறம், ஒளியமைப்பு, நிழலமைப்பு, கோணம், அனைத்தையும் வெர்ச்சுவல் கேமராவை இயக்கும் தொழில்நுட்பக் கலைஞர் பல மென்பொருள் மூலம் சரியான அளவில் கணக்கிட்டு அவற்றைக் கணினியில் உள்ளிடுகிறார். அதைப் புரிந்துகொள்ளும் அனிமேஷன் கேமரா, கிளிப்பிள்ளை மாதிரி கேட்ட அளவுகளில் காட்சியமைப்பைப் படம்பிடிக்க உதவுகிறது.

ஒவ்வொரு முழுக் காட்சியும் ஒவ்வொரு ஒளிப் புள்ளி (pixel) அளவில் முடிவெடுக்கப்படுகிறது. இப்படி ஒரு காட்சிக்காகத் தேவைப்படும் பல ஆயிரம் முக்கோணங்களை மெய்நிகர் கேமரா உருவாக்குகிறது. இதைத்தான் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் உலகில் ரெண்டரிங் என்று அழைக்கிறார்கள். இந்த நுட்பத்தில் வெர்ச்சுவல் கேமரா செயல்படக் கணினியின் செயல்பாட்டு வேகம் மிக அதிகமாகத் தேவை.

ஆனால்டாய் ஸ்டோரி படத்துக்காக பிக்ஸார் நிறுவனம் உருவாக்கிய ’ரெண்டர்மேன்’ (RenderMan) என்ற ரெண்டரிங் நிரல் என்று வெர்ச்சுவல் கேமராவின் துல்லியமான செயல்பாட்டுக்கு முதுகெலும்பாக அமைந்துவிட்டது. இன்று உலகம் முழுவதும் இந்த ’ ரெண்டர்மேன் நிரலைப் பயன்படுத்து வீடீயோகேம் சந்தை கோடிக்கணக்கான மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிக் கொழிக்கிறது.

வீடியோ விளையாட்டுகளில் விளையாடுபவரின் விரும்பும் எல்லாக் கோணங்களிலும் கேமரா நகர்ந்து சென்று ஒவ்வொரு கட்டமாக இலக்குகளை அடைய வழிவகை செய்யும் நுட்பம் வெர்ச்சுவல் கேமராவில் இருக்கும் ரெண்டரிங் நுட்பமே.

அனிமேஷன் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தையும் அதற்கென்றே உருவான வெர்ச்சுவல் நடிகர்கள் பெருகிவரும் ஆச்சரியத்தையும் அடுத்து பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in