ஆசீர்வதிக்கப்பட்ட சுவரொட்டிகள்!- நிக்கி கல்ராணி பேட்டி

ஆசீர்வதிக்கப்பட்ட சுவரொட்டிகள்!- நிக்கி கல்ராணி பேட்டி
Updated on
2 min read

திரையில் நுழைந்த ஒன்றரை ஆண்டுகளில் 11 படங்களில் நடித்து முடித்திருக்கிறார் நிக்கி கல்ராணி. ஆதியுடன் ‘யாகாவாராயினும் நா காக்க’, ஜி.வி.பிரகாஷுடன் ‘டார்லிங்’ படங்கள் மூலம் தமிழிலும் அறிமுகமாகக் காத்திருக்கும் அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

எப்படி நடிக்க வந்தீங்க?

வட இந்தியாவில் பிறந்தேன். பெங்களூருவில் வளர்ந்தேன். அங்கே நான் படிச்சது அறிவியல். ஊசியைப் பார்த்தா ரொம்ப பயம். சின்னப் பாப்பா மாதிரி அழ ஆரம்பிச்சிடுவேன். ரத்தம் பார்த்தா சுருண்டு விழுந்துடுவேன். அதான் அந்தப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திட்டு, நவீன ஆடை வடிவமைப்பு படிக்கப் போயிட்டேன்.

எல்லோரும் அக்கா சஞ்சனா மாதிரி நடிகை ஆகிடுன்னு சொன்னாங்க. நான் கண்டிப்பா மாட்டேன்னு அந்தப் பக்கம் போகவே இல்லை. அக்காகூட சினிமா விழாக்களுக்கோ ஏன் படப்பிடிப்புக்கோகூடப் போக மாட்டேன். படிப்பு முடிஞ்சதும் விளம்பரப் படங்கள்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. பிரபல கைக்கடிகார நிறுவனத்துக்கான விளம்பரம். அதுக்காகத் தலைகீழா தொங்கணும். விளம்பர கான்செப்ட் நல்லா இருக்கேன்னு தொங்கினேன். அந்த விளம்பரம் வெற்றியடைஞ்சது. அப்படியே ஆரம்பிச்சு ஏறக்குறைய 50 விளம்பரங்கள் பண்ணிட்டேன்.

மலையாளப் படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. உடனே நடிக்க சரி சொல்லிட்டேன். அப்புறம் ‘பையா’படத்தோட கன்னட மறு ஆக்கம் ஆரம்பிச்சு இப்போ மலையாளம், கன்னடம், தெலுங்குன்னு போய் இப்போ தமிழுக்கு வந்திருக்கேன்.

நிஜத்துல உங்க கேரக்டர்தான் என்ன?

வம்பளக்குற அளவுக்கு நல்லாப் பேசுவேன். எனக்குப் பேசுறது பிடிக்கும். மனிதர்களைச் சந்திக்கிறது இன்னும் பிடிக்கும். புதுசா ஏதாவது செய்யணும்னு முயற்சி பண்ணுவேன். கோபப்பட மாட்டேன். பொறுமையா இருப்பேன். பிடிக்குது, இல்லைன்னு மனசுல பட்டதை வெளிப்படையா சொல்லிடுவேன். எப்பவும் சந்தோஷமா இருப்பேன்.

தமிழ் சினிமா அனுபவம் எப்படி?

நான் தமிழ்ல முதல்ல நடிக்க ஒப்பந்தமான படம் ‘யாகாவாராயினும் நா காக்க’. நிஜ வாழ்க்கையில் என்னோட குணம் என்னவோ அதைப் படத்துல பண்றேன். என் தோழிகளுக்குப் படத்தோட கதையைச் சொன்னதும் நிக்கி உன் ரியல் கேரக்டர் அப்படியே இருக்கேன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதுக்கப்புறம்தான் ‘டார்லிங்’ படத்துல நடிக்க ஒப்பந்தமானேன். நான் நடிச்சு முதல்ல வரப்போற தமிழ்ப் படமும் அதுதான்.

தமிழுக்கு இப்போதான் நடிக்க வந்திருக கீங்க. அதுக்குள்ள ‘டார்லிங்’ படத்துல பேயா நடிக்கிறது வருத்தமில்லையா?

பேயா நடிக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். 30 நாள் ஒழுங்கா தூங்காம பேய் மாதிரியே நடிச்சிருக்கேன். ஆனா, படம் முழுக்கப் பேயா வரமாட்டேன். அதனால தைரியமா நீங்க படம் பார்க்கலாம்.

கனவு கதாபாத்திரம்ன்னு எதாவது மனசுல இருக்கா?

இப்போ மலையாளத்துல சுரேஷ் கோபியோட ‘ருத்ர சிம்மாசனம்’ படத்துல நடிக்கப்போறேன். படம் முழுக்க என்னைச் சுத்திதான் கதை நகரும். அப்புறம் இரட்டை வேடம் பண்ணனும். பெண்களை மையப்படுத்தின படங்கள்ல நடிக்கணும். இப்படி நடிச்சாலே நமக்குக் கண்டிப்பா ஒரு கதாபாத்திரம் நாம நினைக்காமலே கனவுக் கதாபாத்திரமா அமைஞ்சுடும் இல்லையா?

தமிழ்ல எந்தப் படம் பார்க்க ஆர்வமா இருக்கீங்க?

‘ஐ’, ‘என்னை அறிந்தால்’. எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் தவறவிடாமல் பார்த்துடணும்னு உறுதியா இருக்கேன்.

மறக்க முடியாத அனுபவம்?

சென்னை எனக்கு இண்டாவது வீடு மாதிரி. என் அம்மாவுக்குச் சொந்த ஊர் சென்னைதான். ‘யாகாவாராயினும் நா காக்க’ முதல் பார்வை சுவரொட்டியைச் சென்னை முழுக்கப் பார்த்திருப்பீங்களே? அதை நானும், படத்தோட நாயகன் ஆதியும்தான் தெரு தெருவாப்போய் ஒட்டினோம்.

நான் நடிச்ச படத்துக்கு என் கையால பசை தடவி ஒட்டினது மறக்க முடியாத அனுபவம். அப்போ ஆதி ‘இந்த போஸ்டர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை’ன்னு ரொம்ப சோகமா சொல்லிக்கிட்டே அந்த முழு இரவையும் ரொம்ப கலகலப்பா மாத்திட்டார்.

புது வருட சபதம்?

நாலு வருஷமா ஒரே சபதத்தைத் திரும்பத் திரும்ப எடுத்துப் படாத பாடு பட்டுட்டேன். அளவு சாப்பாடு, யோகா, உடற்பயிற்சி, தியானம்னு எல்லாம் பண்ண நினைப்பேன். ஒரு வாரம் நடக்கும். அடுத்து ஏதோ ஒரு தடை வரும். அப்புறம் அதைத் தொடர முடியாது. அதனால, இனி சபதமே எடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இதான் என் சபதம். இது எப்படி இருக்கு?

கண்களைச் சிமிட்டி சிரிக்கிறார் இந்தக் கன்னடத்து அழகி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in