

ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் குரலை இலக்கியம் வழியே ஒலிக்கச் செய்த கயானா தேசத்தின் நாவலாசிரியர் ஈ.ஆர். பிரைய்த் வைட். இவர் 1959-ல் எழுதிய நாவல் 1967-ல் திரைப்படமாக வெளிவந்து வெற்றி கண்டது. ‘டு சார் வித் லவ்’ ஒரு சுயசரிதையும் கூட.
இரண்டாம் உலகப் போர் முடிந்து ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தில் பொறியாளரான பிரெய்த் வைட்டுக்குப் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க உடனடியாக ஒரு வேலை தேவைப்படுகிறது. அதனால் குப்பத்துக் குழந்தைகள் அதிகம் படிக்கும் ஒரு பள்ளிக்கு ஆசிரியராக விண்ணப்பிக்கிறார். ஒரு தற்காலிக வேலைக்கு ஆசிரியர் பயிற்சி பெறாத ஒரு பொறியாளர் சேரும்போது ஏற்படும் அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறார்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பதில்லை. பெற்றோர்களுக்குக் கல்வி பற்றிப் பெரிய விழிப்புணர்வில்லை. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களிடம் உள்ள தீய பழக்கங்களும் அந்தப் பிள்ளைகளிடம் இருந்தன. பள்ளி முதல்வருக்கு நல்ல எண்ணம் இருந்தும் பெரும் நம்பிக்கை இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் பிரைய்த் வைட் வேலைக்குச் சேர்கிறார்.
பள்ளி முடித்து வெளியில் வரும்போது வயது வந்தவர்களாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இப்போதிலிருந்தே அவர்களை வயது வந்தவர்களாக நடத்தினால் என்ன என்று எண்ணுகிறார். பள்ளிக்கு இவர்களைத் தயார் செய்வதைவிடப் பள்ளிக்கு வெளியில் இருக்கும் நிஜ வாழ்க்கைக்கு இவர்களைத் தயார் செய்வது முக்கியம் என உணர்கிறார். இவரது கருத்துகளை மற்ற ஆசிரியர்கள் ஏற்கவில்லை. மாணவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பள்ளி முதல்வரும் புரட்சியான எந்த முயற்சிக்கும் தயாராக இல்லை.
மியூசியத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கையில் தயங்கியவாறு தரும் முதல்வர் வெளியே சென்று வரும் மாணவர்களின் மாற்றத்தைக் கண்டவுடன் பிரைய்த் வைட்டின் கருத்தாக்கத்தில் நம்பிக்கை வைக்கிறார்.
ஆசிரியர்கள் மத்தியில் இவர் எழுப்பும் கேள்விகள் மெல்ல மெல்ல மாறுதல்களைக் கொண்டு வருகின்றன. பள்ளியின் பிரச்சினைகளை ஜனநாயக முறையில் ஒளிவு மறைவின்றி எல்லாரும் உட்கார்ந்து பேசலாம் எனும் இலக்கை நோக்கிச் செல்கிறது பள்ளிக்கூடம்.
இசையும் நடனமும் மாணவர்களின் அழுத்தி வைக்கப்பட்ட மனதின் அத்தனை கசடுகளையும் வெளியேற்றி அமைதி கொள்ளச் செய்கிறது. இரண்டு பாடவேளைகள் இடையில் மாணவர்கள் நடனமாடலாம் என்கிறார். முரட்டு மாணவர்களின் ஆரம்பகால நிராகரிப்பு, சக ஆசிரியர்களின் ஒத்துழையாமை, கருப்பினம் குறித்த ஒட்டுமொத்த சமூகத்தின் இனவெறி என எல்லாத் தரப்பிலும் எதிர்ப்புகள் வந்தாலும் வைட்டின் உழைப்புக்கு பலன் கிடைக்கத் தொடங்குகிறது.
ஒரு மாணவி தன் ஆசிரியர் மீது கொள்ளும் காதலும் கவர்ச்சியும் இதமாகக் கையாளப்படுகிறது. அதை ஒழுக்கப் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு பருவ மாற்றத்தின் குறியீடாகக் கண்டு மாணவியை வழிப்படுத்தும் ஆசிரியர் மரியாதைக்கு உள்ளாகிறார்.
இறுதியில் தன் ஆசிரியருக்குப் பாடலை எழுதி ஆடிப்பாடி அர்ப்பணிக்கின்றனர் மாணவர்கள். மீண்டும் பொறியாளர் வேலை கை கூடுகையில் மாணவர்கள் ‘போகக் கூடாது’ என்று தடுக்கின்றனர். நெகிழ்ச்சியுடன் முடிகிறது படம்.
சிட்னி பாய்ட்டெர் நாயகனாய் வாழ்ந்திருக்கிறார். நிற பேதத்தின் குரூரத்தைப் பள்ளிக்கு வேலை தேடி நாயகன் வரும் ஆரம்ப காட்சியிலேயே பார்வையாளர்கள் உணர்ந்து விடுகிறார்கள். இறுக்கமான சூழ்நிலையிலும் நம்பிக்கையும் நகைச்சுவை உணர்வும் கொண்டு வாழும் ஆதர்ச ஆசிரியர் வேடத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சிட்னி பாய்ட்டெர் . இயக்கம் ஜேம்ஸ் க்ளேவல். 1968-ன் சிறந்த இயக்குநராக இவரை ‘டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ இந்தப் படத்துக்காகத் தேர்வு செய்தது.
இந்தப் படம் பார்த்து ஆசிரியர் தொழிலில் ஆர்வம் வந்துள்ளதாக என்னிடம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
“நீ என்னவாகப் போகிறாய்?” பத்தாம் வகுப்பில் பலரைக் கேட்டால் “டீச்சர்!” என்று சொல்வோர் மிகக்குறைவு. ஆனால் நம் பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு பருவத்தில் டீச்சர் விளையாட்டு விளையாடி பொம்மைக்குப் பாடம் நடத்தியவர்கள் தாம். எங்கே போயிற்று அந்த அபிமானமும் மரியாதையும். அவற்றைக் களவாடியவர்கள் அவர்களுக்கு பின்னாட்களில் வந்த ஆசிரியர்கள் தாம்.
மாணவர்களை மதிக்காத ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை. அன்பும் மரியாதையும் அற்ற அறிவு மாணவர்களைக் கவராது. அச்சத்தைக் காட்டி படிய வைத்த காலம் மலையேறிவிட்டது. அதிகாரம் மட்டும் எக்காலத்திலும் மாணவர்களைக் கவராது.
இந்தப் படம் எல்லா காலத்துக்குமான படம்.
இதன் வெற்றி எதிர்பார்த்த வெற்றி. இந்தக் கருவைக் கையாண்டவர்கள் யாரும் இதுவரைத் தோற்றதில்லை. இந்தப் படத்தின் வெற்றி இதன் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சித் தொடரை எடுக்க வைத்தது.
தமிழிலும் இது போன்ற படங்களுக்குப் பஞ்சமில்லை. ‘நம்மவர்’ முதல் ‘சாட்டை’ வரை தரமான படங்கள் இங்கும் உண்டு. பசங்க படமும் நல்ல ஆசிரியரை உருவகப்படுத்தியது. ஆனால் இன்றைய தமிழ்ச் சூழலில் இதுபோல் இன்னும் நூறு படங்கள் எடுக்கும் அளவு கதைக்களங்கள் உள்ளன. பள்ளிகூடக் கதைகள் எடுக்கும் அளவு சமூக நிகழ்வுகள் இங்கு மிக மிக அதிகம். அந்த அளவு படங்கள் வரவில்லை என்பதுதான் என் கருத்து.
தேர்வில் தோற்றதால் மாணவர் தற்கொலை, மாணவர் அடித்து ஆசிரியர் கொலை, பள்ளிச்சிறுமிக்கு ஆசிரியரால் பாலியல் வன்முறை, ஆசிரியை துன்புறுத்தலால் மாணவி தற்கொலை எனப் பல தீவிர மன நிலைகள் இங்கு உள்ளன, பிராய்லர் கோழிகள் போல நடத்தப்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களைப் பற்றி நண்பன், வேலையில்லாப் பட்டதாரி படங்கள் போல மழலையர் பள்ளி முதல் உயர் நிலைப் பள்ளி வரை வளரிளம் பருவத்தில் ஏராளமான உளவியல் கதைகள் இங்கு உண்டு.
உதவி இயக்குநர்கள் பார்ப்பதை விடப் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரி யராக ஆசைப்படும் அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘டு சார், வித் லவ்!’
தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com