

நீல வண்ணத்தை எல்லா கலாச்சாரங்களிலும் கொண்டாடி வந்திருக்கிறார்கள். வானும், கடலும் பல கடவுளர்களும் நீலத்தின் பிரதி பலிப்பாக இருக்கிறார்கள். நீலம், மகிழ்ச்சியைக் கொட்டிக் கொடுக்கும் மந்திரமாக இருக்கிறது. ஆனால் அதே நீல வண்ணம், உயிர் பறிக்கும் கொடிய விஷத்துக்கும் குறியீடாக இருப்பது ஆச்சர்யம். ‘ நீலம்பாரித்த உடல்’ என்ற வழக்குச் சொல்லே, இன்றும் இதற்கு வாழும் சாட்சி. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று நான்கு பிரெஞ்சு படங்கள் திரையிடப்படுகின்றன.
அவற்றில் இன்று மாலை 4.30 மணிக்கு உட்லாண்ட்ஸ் திரைவளாகத்தில் திரையிடப்படும் ‘ப்ளூ ஈஸ் த வார்மஸ்ட் கலர்’ (Blue is the warmest colour) என்ற பிரெஞ்சு படம், அந்த தேசத்தின் பாலுறவுகள் சார்ந்த கலாச்சார வாழ்நிலை, எத்தனை நீலம்பாரித்துக் கிடக்கிறது என்பதை, அடெல், எம்மா என்ற இரண்டு இளம் பெண்களின் கதாபாத்திரங்கள் வாயிலாக பேசுகிறது.
‘ஓரின வாழ்க்கை’யில் தங்கள் காதலைக் கண்டுடெடுத்துக் கொள்ளும் இந்தப் பெண்களின் காதலை, ஆண் – பெண் காதலுக்கு இணையான அழகியலுடன் முன்வைத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் அப்தெல்லட்டீப் கேச்சிசே.
நடந்து முடிந்த கேன்ஸ் பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது இந்தப் படம். வழக்கமாக கேன்ஸ் பட விழாவில் முதல் பரிசை வெல்லும் படத்தின் இயக்குனருக்கு மொத்தப் பரிசுத்தொகையும் கொடுக்கப்படும். ஆனால் இம்முறை விருது வென்ற இந்தப்படத்தின் இயக்குநர் கேச்சிசேவுக்கும், படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் ‘அடல்’ மற்றும் ‘எம்மா’வாக நடித்து அசத்திய அடல் எக்ஸர்ஷொபவுலோஸ்,(இவரது முதல்பாதி இயற்பெயரும் அடல்தான்) லியா ஸித்தௌஸ் ஆகிய மூவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
27 வயதே நிரம்பிய’ ஜூலி மோரா வரைந்து, எழுதிய ’ப்ளூ ஏஞ்சல்’ என்ற கிராபிக் நாவலைத் தழுவியே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் கேச்சிசே. 19 வயதில் தொடங்கி 24 வயது வரை, ஐந்து ஆண்டுகள் செலவழித்து ஜூலிமோரா வரைந்து, எழுதிய இந்த நாவல், படமாகி, விருதையும் அள்ளிவிட்டது, ‘’சுதந்திரப் பாலுறவு வாழ்க்கை’ அனுமதிக்கப்பட்ட நாடுகளில் பெஸ்ட் செல்லர் ஆகியிருக்கிறது இந்தப் புத்தகம். ஓரினச் சேர்க்கையை ஒரு காதலாக அங்கீகரித்து பேசியதோடு மட்டும் நிற்காமல், அதில் இருக்கும் சிக்கல்களையும், உணர்வுகளையும் ஜூலி உணர்ந்து தனது கதாபாத்திரங்களை சிறப்பாக தனது நாவலில் ஓவியமாகத் தீட்டி முன்வைத்ததை, இயக்குநர் கேச்சிசேவும் இருட்டடிப்பு செய்யாமல் காட்சிப்படுத்திய விதம் கொண்டாடப்ப்பட்டிருகிறது. ஒரு கிராபிக் நாவல் திரைப்படமாகி கேன்ஸ் விழா வில் சர்வதேச விருதுபெறுவதும் இதுவே முதல்முறை. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் இந்த நேரத்தில், இந்தப்படம் சென்னைக்கு வந்திருப்பது எதிர்பாராத பொருத்தம்.
இந்தப்படம் தவிர, இன்று திரையிடப்படும் டென் மார்க் படமான ‘ தி ஹன்ட்’, அபிராமியில் திரையிடப்பட இருக்கும், ‘அரெஸ்ட் மீ’ உள்ளிட்ட பல படங்கள் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இவற்றுக்கு அப்பால் இரண்டு முக்கிய தமிழ்ப்படங்கள் நல்ல விருந்தாக அமையப்போவது உறுதி. ஒன்று நவீன் இயக்கிய ‘மூடர் கூடம்’. இரண்டு, சிங்கப்பூரிலிருந்து முதல்முறையாக வந்து பங்குபெறும் தமிழ்ப்படமான ‘ஒளி’.