

பிரபுதேவா இயக்கிய படங்களில் பெரும்பாலானவை மறுஆக்கப் படங்கள். தமிழில் அவர் இயக்கிய போக்கிரி, வில்லு, வெடி ஆகியவை அந்த வகைதான். இந்தியில் இயக்கிய வான்டட், ரௌடி ரத்தோர், ராமையா வஸ்தாவய்யா, ஆக் ஷன் ஜாக்ஸன் ஆகிய படங்களும் இதே ரகம். ஆனால் தற்போது ஒரு நேரடிக்கதையை இந்தியில் இயக்கப்போகிறாராம்.
‘க்ரைம் கதை மன்னன்’ என்று பெயர் பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் வாரஇதழ் ஒன்றில் எழுதிவந்த ‘வெல்வெட் குற்றங்கள்’ என்ற தொடர்கதை தெரிந்திருக்கலாம். 300க்கும் அதிகமான பயணிகளோடு மலேசிய விமானம் காணாமல் போன சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையைப் பிரபுதேவாவும் தவறாமல் படித்து வந்திருக்கிறார்.
இதைப் படமாக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டதால் எழுத்தாளர் ராஜேஷ்குமாரை அழைத்து இதுகுறித்து அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தொடர்கதையின் மையக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் தனது அடுத்த இந்திப் படத்துக்குத் திரைக்கதை அமைக்க முடிவு செய்திருக்கிறார் என்று பிரபுதேவா வட்டாரத்திலிருந்து தகவல்.
இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நாயகன் என்பதும் முடிவாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இரண்டு கதாநாயகிகள் இடம்பெற இருப்பதாகக் கூறப்படும் இந்தக் கதையில் அலியா பட்டைத் தனியார் துப்பறியும் நிறுவனப் பெண்ணாக நடிக்க வைக்க அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.