

நாடோடி மனநிலையும் அந்தந்தத் தருணங்களை ரசித்து வாழும் சிந்தனையும் கொண்ட இரண்டு இளைஞர்களின் அனுபவமாகத் தொடங்குகிறது பிரபு சாலமனின் கயல். இந்த அனுபவங்களினூடே ஊடுருவும் காதலும் அதன் தாக்கங்களும்தான் கயல்.
ஆரோனும் அவரது நண்பர் சாக்ரடிஸும் அனாதைகள். “உன் வாழ்க்கையின் வெளிச்சத்தைக் கண்டுபிடி” என்று ஆரோனின் தந்தை எழுதிவைத்துவிட்டுப் போன கடிதத்தில் இருக்கிறது. அந்த வெளிச்சத்தைத் தேடி வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். ஆறு மாதம் வேலை, மீதி ஆறு மாதம் ஊரைச் சுற்றுவது என்று திரிகிறார்கள்.
ஊரைவிட்டு ஓடும் ஒரு காதல் ஜோடிக்குத் தற்செயலாக உதவி செய்யப்போக, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தச் சிக்கல் செமத்தியான அடியையும் காதலையும் பரிசளித்துவிட்டுப் போகிறது.
ஆழமான காதலை அதன் இயல்பான ஆவேசத்துடன் சித்தரிப்பதில் வல்லவர் இயக்குநர் பிரபு சாலமன். பாத்திரங்களின் உணர்வுகளைக் கூடியவரையிலும் இயல்பாகச் சித்தரித்திருக்கிறார். கயலைக் கண்டதும் ஆரோனின் முகத்தில் கூடும் வெளிச்சமும் ஆரோனை எண்ணிக் கயல் காதலால் கசிந்துருகுவதும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
பயண அனுபவங்களையும் காதலின் அவஸ்தைகளையும் சின்னச் சின்ன சம்பவங்கள் மூலம் காட்சிப்படுத்துகிறார் சாலமன். பெண்ணைக் காணாமல் பரிதவிக்கும் ஜமீன்தார் வீட்டுக்குள் நண்பர்கள் சிக்கிக்கொள்ளும் காட்சிகள், அங்கே நடக்கும் சம்பவங்கள் ஆகியவை முன் பாதியில் படத்தை முன்னகர்த்திச் செல்ல உதவுகின்றன. காதலும் அலைதலும் தொடங்கிய பிறகு படம் ஒரே வட்டத்தில் சுழல ஆரம்பிக்கிறது. இத்தனை கண்ணாமூச்சி தேவையா?
சுனாமியால் ஏற்படும் பாதிப்பு பதைபதைக்க வைத்தாலும் சுனாமி இந்தக் கதையில் இயல்பாகப் பொருந்தவில்லை என்ற உறுத்தலும் இருக்கிறது.
ஓடிப் போன மகள் குறித்த தவிப்புக்கும் சாதிப் பெருமை சார்ந்த ஆவேசத்துக்கும் இடையில் தகப்பன் குமுறும் காட்சி அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜமீன் சித்தப்பா, கல்லூரி கோச் எனச் சிறிய பாத்திரங்களைச் செதுக்கிய விதம் அழகு.
கதைக் களத்தின் பின்னணியையும் கதைப்போக்கின் தர்க்கத்தையும் பாத்திரங்களின் தன்மைகளையும் வலுவாகக் கட்டமைக்கும் திறன் கொண்ட சாலமன் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார். அழகிய நிலக்காட்சிகளாக உருப்பெறும் கன்னியாகுமரியும் ஆரல்வாய்மொழியும் உயிரோட்டமான சித்திரங்களாக உருப்பெறவில்லை. பிரதான பாத்திரங்கள் கவனமாகச் செதுக்கப்படவில்லை. கதைப் போக்கில் வேகமும் இயல்பான நகர்வும் குறைவு.
சாதிக் கட்டுமானத்தையும் அதன் தீவிரத்தையும் நுட்பமாகச் சொல்லும் இயக்குநர் அதே சாதியைச் சேர்ந்த கயலின் காதல் விஷயத்தை அந்தக் குடும்பம் அத்தனை அசட்டையாக எடுத்துக்கொள்வதாகக் காட்டுவது பெரிய ஓட்டை. பல காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்கின்றன. படமும் அப்படியே. முகங்களுக்கு வைக்கப்படும் குளோசப் ஷாட்கள் நிஜமாகவே பயமுறுத்துகின்றன.
இயற்கையின் அற்புதங்களை சாலமன் காட்சிப்படுத்தும் விதம் பாராட்ட வேண்டிய அம்சம். படம் கண்களுக்கு விருந்து. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு அற்புதம். குறிப்பாக ‘பறவையா பறக்குறோம்’ பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகு.
இமாம் இசையில் ‘பறவையா பறக்குறோம்’, ‘எங்கிருந்து வந்தாயோ’ ஆகிய பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ‘மைனா’, ‘கும்கி’ போல மனதில் தொடர்ந்து ரீங்கரிக்கும் பாடல் எதுவும் இல்லை. பின்னணி இசை படத்துக்கு வலுவூட்டுகிறது.
ஆழிப் பேரலை பொங்கும் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது. டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை வடிவத்தைப் பயன்படுத்தியிருப்பது காட்சியின் தாக்கத்தைக் கூட்டுகிறது. ஆனால், சுனாமிக்குப் பின் நம்முடைய கடலோரப் பகுதிகள் எப்படிப் பிய்ந்து கிடந்தன, எத்தனை நாட்களுக்குக் கடலோர மக்கள் சீந்துவார் இல்லாமல் கிடந்தனர், கடற்கரையோரம் முழுவதும் எப்படி மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன என்கிற விஷயங்களெல்லாம் படக் குழுவுக்குத் துளியும் தெரியவில்லை. ஏதோ, ஒரு வெள்ள நிவாரண நடவடிக்கைக் காட்சிகள் போல சித்திரிக்கப்பட்டிருக்கின்றன சுனாமிக்குப் பிந்தைய காட்சிகள்.
ஆரோனாக வரும் சந்திரன் உணர்ச்சிகரமான காட்சிகளில் நன்றாக நடிக்கிறார். பயணக் காட்சிகளில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது பொருத்தமாக இல்லை. நண்பனாக வரும் வின்சென்ட் கவனம் ஈர்க்கிறார். ஆனந்தி (கயல்) பிரகாசமான கண்களுடன் நுட்பமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்திலும் காதலனின் அடையாளம் கையை கைவிட்டுப் போகும்போதும் சபாஷ் போடவைக்கிறார்.
படம் முழுவதும் யாராவது வாழ்க்கைத் தத்துவங்களைப் பேசிக்கொண்டே இருப்பது அலுப்பு. குறிப்பாகக் காவல் நிலையத்தில் நடக்கும் தத்துவ விசாரம் கொட்டாவிகளைக் கிளப்புகிறது. அழகியல் ரீதியாகக் கவரும் படம் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தில் தடுமாறுகிறது.