Published : 14 Dec 2014 09:26 AM
Last Updated : 14 Dec 2014 09:26 AM

லிங்கா - திரை விமர்சனம்

தன்னுடைய சொத்துக்களையெல்லாம் இழந்த ரஜினி இருட்டான சமையலறையில் அமர்ந்து அடுப்பு ஊதிக்கொண்டிருக்கிறார். புகை அவர் கண்களில் படுகிறது. ரசிகர்களின் கண்கள் கலங்குகின்றன.

ரஜினி என்பது ஒரு மந்திரம் என்றால் அதை எப்படிப் பிரயோகிப்பது என்ற வித்தை தெரிந்தவர்களில் கே.எஸ். ரவிகுமாரும் ஒருவர்.

சென்னையில் சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபடுகிறார் ராஜவம்சத்தின் வாரிசான லிங்கா (ரஜினி). அவரை ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் சிக்க வைத்து சோலையூர் கிராமத்துக்கு அழைத்துவருகிறார் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுஷ்கா. அந்த ஊரில் உள்ள அணைக்கு அருகில் அமைந்த கோயிலை இவர் கையால் திறக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியவர் மன்றாட, காரணம் புரியாமல் லிங்கா குழம்புகிறார்.

தன் அரண்மனை, சொத்துக்கள் அனைத்தையும் விற்று, வறட்சி, வெள்ளம் இரண்டாலும் பாதிக்கப்படும் சோலையூர் மக்களுக்காக பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டியவர் லிங்காவின் தாத்தா ராஜா லிங்கேஸ்வரன். இதற்காகப் பெரும் கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏற்றுக்கொண்ட தியாகி.

தன் தாத்தாவின் அருமை பெருமையை உணர்ந்த லிங்கா, தற்போது ஒரு அரசியல்வாதியின் பேராசையால் அந்த அணைக்கு ஆபத்து வருவதை அறிந்து அதை முறியடிக்கத் தயாராகிறார். அனுஷ்காவின் ரகசிய கேமராவும் ரஜினி யின் சாகசங்களும் சேர்ந்து ஊரைக் காப்பாற்றுகின்றன.

லிங்கேஸ்வரன் ராஜாவாக ரஜினிதான் கதையைத் தன் தோள்களில் சுமக்கிறார். மூன்று மணிநேரப் படத்தில் இவர் வரும் ஃப்ளாஷ்பேக் மட்டும் இரண்டு மணிநேரம் விரிகிறது.

எல்லாச் சொத்துக்களையும் இழப்பது, எல்லோருக்கும் வாரி வாரி வழங்குவது ஆகியவை ரஜினியின் முந்தைய படங்களில் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். ராஜா ரஜினிக்குக் குடைச்சல் தரும் வெள்ளைக்கார கலெக்டர், அவரது மனைவியின் மிரட்டலால் மனம் மாறுவது மிகப் பழைய ஃபார்முலா. வெள்ளையர்களை விமர்சிக்கும் வேகத்தில் தேசபக்தியைக் காட்டிலும் இன வெறுப்பு தூக்கலாக இருக்கிறது. ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பது தவறுதான் என்றாலும், கிளைமாக்ஸின் கோமாளித்தனம் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறது. படத்தின் நீளம் சோர்வடைய வைக்கிறது.

அறிமுகக் காட்சியிலேயே கிரிக்கெட் மட்டையை வைத்துக்கொண்டு சண்டையில் சிக்சர் அடிக்கிறார் லிங்கேஸ்வரன் ரஜினி. வெள்ளைக்கார அதிகாரிகளுடன் வாக்குவாதம், மக்களைத் திரட்டி அணை கட்டும் போராட்டம், அனைத்தையும் துறக்கும் தியாகம் என்று ரஜினிக்குச் செமத்தியான தீனி. அமர்த்தலாகவும் நக்கலாகவும் ஆவேசமாகவும் பேசுகிறார். சுதந்திரப் போராட்ட உணர்வை வெளிப் படுத்தும் வசனங்களும் உண்டு. சண்டை, பேச்சு, நடை, பார்வை என ஒவ்வொன்றிலும் ரஜினி ஸ்டைல் பத்திரமாகவும் புதுப் பொலிவுடனும் இருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பிளஸ்.

‘தாத்தா ரஜினி’ ராஜ கம்பீரம் சேர்த்திருக்கிறார் என்றால், பேரன் ரஜினி கலகலப்பின் மொத்தக் குத்தகைத்தாரராக இருக்கிறார். இளம் ஹீரோக்களுக்குச் சவால்விடும் அளவுக்கு ரகளை செய்கிறார். சந்தானம் கோஷ்டியுடன் சேர்ந்து அவர் செய்யும் அலப்பறை சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சலிக்கவும் வைக்கின்றன. ‘நண்பேன்...’ என்று சந்தானம் தொடங்கி வைக்க, ரஜினி ‘டா’ என்று முடித்துவைக்கிறார். ஆனால் ரஜினியின் இமேஜுக்கு வலு சேர்க்கும் பஞ்ச்களுக்குப் பஞ்சமில்லை.

ரஜினிக்கு அடுத்தபடியாக ஒளிப்பதி வாளர் ரத்னவேலு படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். குறிப்பாக அணை கட்டும் காட்சிகள், வெள்ளத்தை அணை தாக்குப்பிடிக்கும் காட்சி ஆகியவை அற்புதம். கிராஃபிக்ஸ் காட்சிகள் ஏமாற்று கின்றன. தமிழ் சினிமாவில் பெரிய

பட்ஜெட் படங்களில் கூடத் தரமான கிராஃபிக்ஸைத் தர முடியாதா என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

ரஹ்மானின் இசையில் பின்னணி இசை கவர்கிற அளவுக்குப் பாடல்கள் கவரவில்லை. ‘சின்னச் சின்ன நட்சத்திரம்’, ‘இந்தியா’ ஆகிய பாடல்கள் கேட்க நன்றாக உள்ளன.

சோனாக்‌ஷிக்கு நடிக்க அதிக வாய்ப்பு. அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

படம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாமனிதனை டைட்டிலில் கவுரவப்படுத்தியிருந்தால் பெருமையாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்குமே.

ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் ரஜினி ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், அவர் இமேஜைக் கூட்டும் காட்சிகள் என ‘ரஜினி மாசாலா’ அம்சங்கள் எல்லாம் இருந்தும் படம் முழுச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி

யைத் தரவில்லை. ரஜினி மந்திரத்தைச் சரியாகப் பிரயோகித்திருக்கும் ரவிகுமார் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x