கிரேசியைக் கேளுங்கள் 12 - ரஜினி கொடுத்த விஎஸ்பி கம்பெனி

கிரேசியைக் கேளுங்கள் 12 - ரஜினி கொடுத்த விஎஸ்பி கம்பெனி
Updated on
3 min read

பவளசங்கரி, நியூஜெர்ஸி.

ரஜினியுடன் உங்கள் சுவையான அனுபவத்தைச் சொல்லுங்களேன்?

ரஜினி சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி இந்தக் கேள்விக்கான பதிலைத் தொடங்குகிறேன். ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படங்களுக்குப் பிறகு எனக்குப் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்த படம், பிரபு சார் நடித்த ‘சின்ன மாப்ளே’.

என் தம்பி பாலாஜியின் மகன் ராகவேந்திரனும் எனது இளைய மகன் அர்ச்சுனும் அன்று ‘சின்ன மாப்ளே’ ஷூட்டிங் பார்க்க என்னுடன் வந்திருந்தார்கள். ‘சின்ன மாப்ளே’ ஷூட்டிங் பார்க்க வந்த அந்த சின்னப் பசங்கள்… இப்போ கல்யாணமாகி ‘மாப்ளே’ ஆயிட்டாங்க.

தன்னுடைய படமொன்றில் ‘நான் எப்போ வருவேன்... எப்படி வருவேன்னு தெரியாது’ என்று பன்ச் டயலாக் சொல்லும் ரஜினி, தடாலென்று அந்தப் படப்பிடிப்பைப் பார்க்க வந்தேவிட்டார். அவருக்கு கதை-வசனம் எழுதும் ‘அந்த நாளும் வந்திடாதோ’என்று எனக்குள் இருக்கும் ஆண்டவன் சொல்ல, ரஜினிக்குள் இருக்கும் அருணாச்சலம் முடித்து வைத்தார். சினிமா பாஷையில் CUT.

‘அருணாச்சலம்’படத்துக்கு வசனம் எழுத ரஜினியிடமிருந்து அழைப்பு வந்தது. ரஜினி வீட்டில் நடந்த கதை விவாதத்துக்கு நான் எனது வெற்றிலை, சீவல், புகையிலைப் (VSP) பையோடு சென்றேன். ஆனாலும் மூன்று நாட்கள் VSP போடாமலே இருந்தேன். போட்டால் ‘துப்பார்க்குத் துப்பாய’ப் பிரச்சினை. எங்கே துப்புவது? ரஜினி சாரின் பிரம்மாண்டமான, அழகான பாத்ரூமை நாஸ்தி செய்ய மனம் வரவில்லை.

சரி, வெளியில் போய் துப்பலாமென்றால்… வீட்டு வாசலில் ‘டைகர்’ என்ற பெரிய நாய் இருந்தது. நாய்களுக்கும் எனக்கும் நெருங்கிய விரோதம் உள்ளதென்பது நாய்கள் மத்தியில் பிரசித்தம். VSP போடாமல் வெறும் வாயில் ‘அருணாச்சலம்’ வசனத்தை மெல்வது எனக்கு அசதியாக இருந்தது.

நான்காவது நாள் ‘அது என்ன தோள்ல பை…’ என்று ரஜினி சார் கேட்டார். VSP போடாத வயித்தெரிச்சலைக் கொட்டித் தீர்த்தேன். உடனே ரஜினி என்னை VSP போடச் சொல்லி, துப்புவதற்கு பாத்ரூம் வரை துணைக்கும் வந்தார். இதற்கும் ஒருபடி மேலே போய் ‘அருணாச்சலம்’ கதை விவாதம் முடியும் வரை என்னோடு சேர்ந்து அவரும் VSP போட்டு, எனக்கு கம்பெனி கொடுத்தார். ரஜினி சாரின் இந்த நாகரீகம்தான் எனக்கு மிகப் புனித ஆன்மிகமாகப்படுகிறது.

சமீபத்தில் நாடகம் போட டோக்கியோ சென்றபோது, என்னைச் சுற்றிலும் யுவ, யுவதியர் கூட்டம். அவர்கள் எல்லோரும் ரஜினியின் ஜப்பான் ரசிக, ரசிகைகள். ‘YEN ரஜினி… YEN ரஜினி’ என்று ஜப்பானே பரவசப்படுகிறது.

‘சூப்பர்’ வெண்பா!

‘பாத்தாக்க தோணும் பதினாறு தானடி

ஆத்தா அதுக்குள் அறுபதா - மூத்தோரே

‘லிங்கா’வாய் வந்தமர்வீர் சிங்கா சனத்தினில்

இங்காரும் இல்லையுமக்(கு) ஈடு’

க.குமரேசன், திருவாரூர்.

உங்கள் ‘வானிலை அறிக்கையைக் கொஞ்சம் எங்களுக்காக வாசியுங்களேன்?

எப்போதும் நகைச்சுவை ‘கிரேசி’ மேக மூட்டமாக இருக்கும். அனேக இடங்களில் சிரிப்பு அல்லது வெடிச் சிரிப்புடன் கூடிய வசன மழைப் பெய்யும். அதிகபட்ச சிரிப்பு நிலை 100 டிகிரி ‘கிரேசி’யஸ் ஆக இருக்கும்!

மதுமிதா, மாம்பலம்.

சென்ஸ் ஆஃப் ஹியூமர் நிறைந்த அரசியல்வாதி ஒருவரைக் குறிப்பிடுங்களேன்?

ஒருமுறை சட்டமன்றத்தில், ஏதோ ஒரு ‘சுடுகாட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும்’ என்று எதிர்க்கட்சியினர் சொன்னபோது, அதற்கு பதில் சொன்ன மூதறிஞர் ராஜாஜி, ‘‘சுடுகாட்டுக்கு காம்பவுண்ட் சுவர் தேவையே இல்லை. காரணம், உள்ளே இருக்கும் எவனும் வெளியே வரப் போவதில்லை. வெளியே இருக்கும் எவனும் உள்ளே போக விரும்ப மாட்டான். ‘சுடு’காட்டுக்கென்ன வேலி?’’ என்று சொல்லி சட்டமன்றத்தையே குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தாராம்.

கார்த்திக், கடலூர்.

Lifeல Rewind பட்டன் இருந்தா எப்படி இருக்கும்?

LIFE-ஐ Rewind செஞ்சா EFIL டவர் மாதிரி… உயர்ந்த வாழ்க்கை அமையலாம்!

கோமதி நமச்சிவாயம், நெல்லை.

கடவுள் உங்களுக்கு ‘தொட்டதெல்லாம் சாக்லேட்’ ஆகும் வரம் கொடுத்தால்..?

அந்த GOD-க்கு நன்றி சொல்லிவிட்டு… ‘GOD BURYS’ சாக்லேட் கம்பெனி ஆரம்பிச்சுடுவேன்!

சங்கரராமன், புதுச்சேரி.

‘எமக்குத் தொழில் எழுத்து’ என்றார் பாரதியார். உமக்குத் தொழில்..?

எமக்குத் தொழில் ‘கழுத்து’. வருடா வருடம் டிசம்பர்-11, பாரதியார் பிறந்த நாளன்று வானவில் பண்பாட்டு மையம் சார்பில் கவிஞர் ‘வக்கீல் ரவி’ ஏற்பாடு செய்த ஜதி பல்லக்கில் பாரதியார் திருவுருவப் படத்தை வைத்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வாசலில் இருந்து பாரதியார் இல்லம் வரை எங்கள் ‘கழுத்தில்’தூக்கிச் செல்வோம். அதனால்தான் எமக்குத் தொழில் ‘கழுத்து’ என்றேன். எனக்கு அன்றுதான் ‘அறுபத்தி மூவர்’ உற்சவம்.

வாரியார் சுவாமிகள் 64-வது நாயன்மார் என்றால், பாரதி 13-வது ஆழ்வார். பாரதி வறுமையில் வாடவில்லை. மாறாக வறுமைதான் பாரதியாரிடம் தோற்று வாடியது!

பவானி, நியூடெல்லி.

ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத் தையும் இணைத்து ஒரு கவிதை ப்ளீஸ்..?

‘வளைக்கச் சொன்ன வில்லை முறித்தான்

பிடிக்கச் சொன்ன மானைக் கொன்றான்

விசாரிக்காமல் வாலி வதம்

அண்ணலுக்கு ஏனிந்த அவசரம்

கிருஷ்ணாவதார ஒத்திகையோ?’

ஸ்ரீராம், சேலம்.

கடவுள் கம்ப்யூட்டர் வைத்திருப்பாரா?

மற்ற கடவுள்களைப் பத்தித் தெரியாது. Mouseசிக வாகனர் பிள்ளையார், Mail வாகனர் முருகர், பதிNetடு படி ஐயப்பன்… இந்த மூவரிடமும் நிச்சயம் இருக்கும். WWW.கடவுள்.CALMல் பார்த்தேன்.

- இன்னும் கேட்கலாம்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in