

கதை இருக்கு
இயக்குநர் பார்த்திபன் தற்போது பிஸியாகக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் வெற்றி அவரை அதன் அடுத்த பாகம் பற்றி யோசிக்க வைத்திருக்கிறது என்கிறார்கள் அவரது சிஷ்யகோடிகள். அதை உறுதிசெய்வதுபோல, ‘கதை இருக்கு’ என்று படத்துக்குத் தலைப்பு சூட்டியிருக்கிறார். இங்கே நீங்கள் பார்ப்பது, திரைக்கதை பயின்ற தனது பள்ளிக்கூடமான பாக்யராஜின் பிறந்தநாளின்போது மாலை அணிவித்து மகிழ்கிறார் அன்றைய உதவி இயக்குநர் பார்த்திபன். இன்னொரு பக்கம் சூர்யாவின் 'மாஸ்’, தனுஷ் நடிக்கும் 'சூதாடி' என்று நடிகர் பார்த்திபனும் பிஸி.
அதே ராய்
ஐந்து நாட்களுக்கு முன் தன் கணவர் அபிஷேக் பச்சனுடன் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகச் சென்னையின் எஃப்சி அணியை அறிமுகப்படுத்த மைதானத்தில் இறங்கி ஒரு வட்டமடித்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது இந்த நட்சத்திரத் தம்பதி. 2010-ம் ஆண்டு கடைசியாக நடித்த ‘குஜாரிஷ்’ படத்தில் எப்படி இருந்தாரோ அதே தோற்றதுக்கு மாறியிருந்த ஐஸைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர் ரசிகர்கள். தற்போது சஞ்சய் குப்தா இயக்கும் ‘ஜாஸ்பா’, கரண் ஜோஹர் இயக்கும் ‘ஆதில் ஹாய் முஷ்கில்’ ஆகிய இரண்டு படங்களில் நடிக்கிறார் இந்த அகில அழகி.