கதாநாயகிகளைக் கண்முன் நிறுத்தும் இளைஞர்

கதாநாயகிகளைக் கண்முன் நிறுத்தும் இளைஞர்
Updated on
1 min read

ஹாலிவுட் படங்கள் உலக நாடுகளின் உள்ளூர் மொழிகளைப் பேச ஆரம்பித்தபிறகு ஏழுகடல் ஏழுமலை தாண்டியும் ஹாலிவுட் கதாநாயகிகளுக்கு மவுசு கிடைத்து விடுகிறது. தற்போது மில்லியன் டாலர்களில் ஊதியம்பெறும் இந்த ஆங்கிலக் கதாநாயகிகளின் தயவில் உலக அளவில் பிரபலமாகிவிட்டார் பவுலோ பேலஸ்டரோஸ் என்ற 32 வயது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சியொன்றில் பணியாற்றும் இவர், பிரபல ஹாலிவுட் கதாநாயகிகளைப் போல மேக்கப் போட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். குறிப்பாக ஹாலிவுட் கதாநாயகிகளின் புகழ்பெற்ற ஹேர் ஸ்டைல் மற்றும் ஒப்பனையை அப்படியே கச்சிதமாகக் கொண்டுவந்து அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகப்பெரிய ஹிட்.

இதுவரை ஏஞ்சலினா ஜோலி, கிம் கர்தார்ஷியான், பியான்ஸ், மேகன் பாக்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெனிஃபர் லாரன்ஸ், டைரா பேங்க்ஸ் ஆகியோரின் ஒப்பனையில் இவர் நடித்திய ஒவ்வொரு எபிசோடும் டி.ஆர்.பியில் எகிறிவிட்டது.

விளையாட்டாய் பெண் வேடமிட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதாகவும், பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஹாலிவுட் கதாநாயகிகளின் தோற்றத்தைக் கொண்டுவரும் ஒப்பனை செய்துகொண்டு தொகுத்து வழங்க ஆரம்பித்தபோது வரவேற்பு அள்ள, அதையே அதிக செலவில் நேர்த்தியுடன் செய்ய ஆரம்பித்ததும் பிலிப்பைன்ஸின் முக்கிய பிரபலம் ஆகிவிட்டேன் என்று கூறும் ஃபாலோ, இதே போல நூற்றுக்கணக்கான நடிகைகளின் ஹேர் ஸ்டைலில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருக்கிறாராம்.

அவரது நீள்வட்ட முகம், அச்சு அசலாக டூப் மேக்-அப் போடுவதற்கு வரமாக அமைந்துவிட்டது. இவரது கதாநாயகிகளின் பட்டியலில் பாலிவுட்டின் கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா, ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோருக்கும் இடமிருக்கிறது என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in