

தனிமனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை விபத்தாக போபால் விஷவாயுக் கொடூரம் கருதப்படுகிறது. 1984-ல் இருபதாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த சம்பவம் அது. முப்பது ஆண்டுகள் ஆகியும் இந்த அலட்சிய விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனமும் அதை வாங்கியுள்ள டோவ் கெமிக்கல்ஸும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தார்மீகரீதியாக மன்னிப்பும் கேட்கவில்லை. இழப்பீடும் வழங்கவில்லை. யூனியன் கார்பைடு ஆலையின் விஷக் கழிவுகளால் இன்னமும் அங்கே அங்கஹீனமான குழந்தைகள் பிறந்துகொண்டிருக்கின்றனர்.
மூன்றாம் உலக நாட்டு மக்களின் உயிரைத் துச்சமாக மதிக்கும் அமெரிக்க கார்பரேட்களின் பேராசை, தண்டனையிலிருந்து தப்பித்த பெருநிறுவன அதிகாரி, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கும் உள்ளூர் அரசு, ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து இந்திய இயக்குநர் ரவிக்குமார் ‘போபால்: எ ப்ரேயர் பார் ரெய்ன்’ என்ற திரைப்படமாக எடுத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்தக் கொடூர சம்பவம் நடந்த அதே வாரத்தில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
போபால் துயரங்கள் சார்ந்து மனதை நிலைகுலையச் செய்யும் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் இலக்கியப் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஏற்கனவே மகேஷ் மதானி இயக்கத்தில் ‘போபால் எக்ஸ்பிரஸ்’ என்ற இந்தித் திரைப்படம் 1999-ல் வெளிவந்தது. ஆனால், இம்முறை இத்துயரம் உலகப் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா மற்றும் அமெரிக்க நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ள ‘போபால்: எ ப்ரேயர் பார் ரெய்ன்’ திரைப்படம் ஆங்கிலத்தில் உருவாகியிருக்கிறது. போபால் கொடூரத்தையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் உலக சமூகத்திற்கு உரக்கச் சொல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.
ஹைதராபாத், ஆந்திரா போன்ற பகுதிகளில் அதிகமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை ஒரு ரிக்க்ஷா டிரைவரின் பார்வையில் விரிகிறது. கடனை அடைப்பதற்காகக் கூடுதல் நேர வேலை கொண்ட அபாயங்கள் நிறைந்த கார்பைடு தொழிற்சாலையில் அவன் சேருவதால் அடையும் துயரங்கள் மூலம் ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் சந்தித்த அல்லல்களைப் பதிவுசெய்கிறார் இயக்குநர்.
போபால் துயரச் சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டு விட்டதால் அதைக் கதையாகக் கையாளும்போது நடுநிலைமையுடன் சம்பவங்களை அணுக முடிந்ததாகச் சொல்கிறார் இயக்குநர்.
ஒரே நாளில் குதிரைகள் மற்றும் கால்நடைகளை இழந்த ஒரு நகரத்தின் கதையைப் படம்பிடிக்கும்போது நிலைகுலைய வைக்கும் அனுபவமாக இயக்குநருக்கு இருந்துள்ளது. இவரது சொந்த ஊர் போபால் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கலாசார ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இத்திரைப்படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான மார்டின் ஷீன் நடித்துள்ளார். இவர் ஏற்றுள்ள வேடம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை அதிகாரியான வாரன் ஆண்டர்சனின் கதாபாத்திரம். வியட்நாம் மீது அமெரிக்கப் படையினர் நடத்திய இரக்கமற்ற போரை எதிர்த்து அமெரிக்க மக்களின் மனசாட்சியாக வெளிவந்த ‘அபோகலிப்ஸ் நௌ’ திரைப்படத்திலும் தைரியமாக நடித்தவர் மார்டின் ஷீன்.
“மூன்றாம் உலக நாட்டு மக்களின் வாழ்க்கையை இரண்டாம்பட்சமாகப் பார்க்கும் வழக்கம் அமெரிக்காவிடம் உள்ளது. ஒரு வளரும் நாட்டில் தொழிலைத் தொடங்கினால் அதை அந்த நாட்டு மக்களுக்குச் செய்யும் கருணை என்று கருதுகிறோம். அந்தக் கலாசார மேல்தட்டு மனநிலை பல கொடூரங்களுக்குக் காரணமாகியுள்ளது. அதில் ஒன்றுதான் போபால் சம்பவம்” என்கிறார் மார்டின் ஷீன்.
போபாலில் நடந்த மனித அழிவுகளுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், அதற்கான தண்டனையையும் அனுபவிக்காமல் அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்று தனிமை வாழ்க்கையை வாழ்ந்துவந்த வாரன் ஆண்டர்சன் கடந்த செப்டம்பர் மாதம் இறந்துபோனார்.
அவருடைய வேடத்தை ஏற்றிருக்கும் மார்டின் ஷீன், ஆண்டர்சன் குறித்துப் பேசும்போது, “அவர் இந்தியா திரும்பி, துயரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து துக்கத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தால் குறைந்தபட்சம் தன் ஆன்மாவையாவது காப்பாற்றிக் கொண்டிருந்திருப்பார். ஆனால், அவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார்” என்கிறார்.
வாரன் ஆண்டர்சனின் கதாபாத்திரத்தை வெறும் வில்லத்தனமாக மட்டும் சித்திரிக்காமல் அவரது நல்ல அம்சங்களையும் மார்டின் ஷீன் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களான ராஜ்பால் யாதவ் மற்றும் தன்னிஷ்டா சட்டர்ஜி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
“சினிமா படைப்பாளியாக உண்மையான கதைகளைச் சொல்வதற்கான தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உண்டு. போபால் சம்பவம் பிரம்மாண்டமானதொரு பின்னணியில் சொல்ல வேண்டிய திரைப்படமாகும். இதுபோன்ற சம்பவங்கள் தனித்த விஷயம் அல்ல. இன்னொரு போபால் விபத்து நடக்காமல் இருக்க வேண்டுமானால் நடந்த சம்பவங்களிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.
அரசாங்க அதிகாரிகள், ஊழல் அரசின் மெத்தனத்தால் நேரும் அவலங்கள் என போபால் பயங்கரத்தைச் சுற்றிச் சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருந்தும் இதுவரை அக்கொடூரத்தை திரைப்படமாக எடுப்பதற்கு யாரும் துணியவில்லை. இயக்குநர் ரவிக்குமார் துணிந்திருக்கிறார். ‘போபால்: எ ப்ரேயர் பார் ரெயின்’ திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. மழை பெய்கிறதோ, இல்லையோ அப்படத்தைப் பார்த்துப் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு துளி கண்ணீரையாவது சிந்துவோம்.