

ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசால் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழா காரணமாக கோவா நகரம் சர்வதேச சினிமாக்களுக்கான இந்திய முற்றமாக மாறிவிட்டது. நவம்பர் 20 அன்று தொடங்கி 30-ம் தேதி நடந்த 44-வது உலகப்பட விழாவில் தமிழ் சினிமாவுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக முதல் நாளே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, சினிமா நூற்றாண்டு விருதை இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், மத்திய மந்திரி அருண் ஜேட்லியும் வழங்கியபோது குறைந்த தமிழ்ப் பார்வையாளர்களே பங்குபெற்றிருந்த விழா அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. அதுதான் ரஜினியின் தாக்கம்.
திரைப்பட விழாவின் தொடக்கமாக 20-ம் தேதி மாலை ‘த பிரசிடெண்ட்’ என்ற ரஷ்யப் படம் திரையிடப்பட்டது. அந்தப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு. சர்வாதிகாரியாக நாட்டை ஆண்ட ஒரு கொடுங்கோலன், அந்தப் பதவியை இழந்து, குடும்பத்துடன் தப்பித்து, தன்னுடைய மக்களைச் சாதாரண மனிதனாகப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும்போது நடக்கும் நிகழ்வுகளைச் சிறப்பாக இப்படம் சித்திரித்தது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் இந்தப் படம் திரையிடப்பட்டது.
இந்தியன் பனோரமா
இந்திய மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட 26 படங்களைக் காண ஒரே தள்ளுமுள்ளு. இந்திய அளவில் மாநில மொழி சினிமாக்களின் உள்ளடக்கம், படமாக்கல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களின் தரம் இதில் பளிச்சென்று தெரியும் என்பதால் ரசிகர்கள் குவிந்தனர்.
நமக்குப் பரிச்சயமான நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தயாரித்த ‘எல்லோ’ என்ற மராத்தி படம் பலரையும் கவர்ந்தது. குறைபாடுகளுடன் பிறந்த ஒரு பெண் குழந்தையை அதன் தந்தை, சாவிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யாதபோது, தன் குழந்தையைக் காப்பாற்றி, கணவனைவிட்டுப் பிரிந்து, குழந்தையைத் தனியாக வளர்த்து, ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனையாக அவளை வளர்த்து, கணவனை வெட்கப்படச் செய்யும் ஒரு பெண்ணின் கதை. மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்ட திரைக்கதை.
‘1983’ என்ற மலையாளப் படமும் அதே வகையில் அமைந்திருந்தது. 1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது, அதன் பாதிப்பில் வளர்ந்த ஒருவன் எப்படி, கிரிக்கெட் மோகத்தால் தன் வாழ்க்கையைத் தொலைக்கிறான், அதன் பின், தன் மகன் மூலம், எவ்வாறு வாழ்க்கையை மீட்கிறான் என்பதைத் திறம்படக் காண்பித்திருந்தார்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் வந்த ‘நிஜான்’என்ற மலையாளப் படம், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஒரு வீரனின் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியது. 1940-களில் நடக்கும் இக்கதை, சிறப் பான காட்சிப் பதிவுகளிலும், அந்தக் காலகட்டத்தைச் சரியாகப் பிரதிபலித்த வகையிலும் வெற்றி பெற்றது.
தமிழரான ஆனந்த் நாராயண் மகாதேவன் (பாபநாசம் படத்திலும் நடித்திருக்கிறார்) இயக்கியிருந்த இந்திப் படம் ‘கௌர் ஹரி தாஸ்தான்’. சுதந்திர போராட்ட வீரன் என்ற சான்றிதழைப் பெற பல வருடங்கள் முயலும் உண்மையான சுதந்திர போராட்ட வீரன் ஒருவனது கதை. அவன் ஒரு பொய்யன் என்று அவர் குடும்பம்கூட நினைக்கும்போது, அதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு, கடைசியில், அவர் அந்தச் சான்றிதழை மாநில முதலமைச்சரிடமிருந்து பெரும்போது கண்ணீர் வந்தது. அற்புதமான, உணர்ச்சிகரமான பதிவு. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
தமிழில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படமான ‘குற்றம் கடிதல்’ இந்தியன் பனோரமா பிரிவில் காண்பிக்கப்பட்டபோது பெரிய வரவேற்பு இருந்தது. புதியவர்களின் முயற்சிக்கும் அரங்கு நிறைந்த காட்சியாக வரவேற்பு இருந்தது. நல்ல திரைப்படங்களை ஆதரிக்கும் பார்வையாளர்கள், இந்தப் படத்தையும் வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறேன். 3-டி படப் பிரிவில் ‘கோச்சடையான்’ திரையிடப்பட்டுப் பெரும் வரவேற்பு பெற்றது.
மறைந்த மேதைகளுக்கு மரியாதை
மறைந்த மேதைகளைக் கவுரவிக்கும் வகையில் அவர்களின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’, முதல் நாளே திரையிடப்பட்டபோது மாபெரும் வரவேற்பு இருந்தது. அரங்கு நிறைந்த காட்சியாக, படம் முடிந்தவுடன், பெரும் கை தட்டல்களுடன் முடிந்தது. அந்த மேதையின் ஒளிப்பதிவும், காட்சிகளும் கவர்ந்தன. கமல் மற்றும் தேவியின் அற்புதமான நடிப்பும் மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
வின்டேஜ் (பெயர் பெற்ற இயக்குநர்களின் சிறந்த படைப்புகள்) என்ற பிரிவில், ஷ்யாம் பெனகல், குல்சார், அடூர் கோபாலகிருஷ்ணன், மிருனாள் சென், கே. பாலச்சந்தர் போன்றவர்களின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டன. குல்சாரின் ‘அங்கூர்’என்ற இந்திப் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மிருனாள் சென்னின் ‘கல்கத்தா 71’ என்ற படம், 1970-களில் கல்கத்தா நகர வாழ்க்கையை யதார்த்தமாகவும், அழகியலுடனும் பதிவு செய்திருந்தது. பாலச்சந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ பார்வையாளர்களிடம் மீண்டும் அதிர்வை ஏற்படுத்தியது.
உலகப் படங்களின் வரிசையில் பிரபல இரானிய படங்களின் இயக்குநர் மோஹ்சென் மக்மல்பஃபின் சிறந்த படங்கள் ஒரு பிரிவில் திரையிடப்பட்டன. அவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்நாள் விருது பெற்றார். அவரின் ‘சலாம் சினிமா’, ‘எ டைம் ஃபார் லவ்’ போன்ற படங்களுக்கும் சிறந்த வரவேற்பு இருந்தது. அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.
திரைப்பட வகுப்புகள்
இந்த விழாவில் இந்திய அளவில் கவனிக்கப்பட்ட பல குறும்படங்களும் திரையிடப்பட்டது அவற்றுக்கான முக்கியத்துவத்தைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தியது. திரைப்படங்களுடன், பல சிறந்த சினிமா குருக்களின் வகுப்புகளும் நடந்தது இவ்விழாவின் சிறப்பு. சேகர் கபூரின் எது படைப்பாற்றல் என்ற வகுப்பும், சதீஷ் கௌஷிக்கின் ‘சினிமா பயணம்’ என்ற வகுப்பும், இயக்குநர் சுபாஷ் கய்யின் வகுப்பும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
கோவா நகரமே விழாக் கோலம் பூண்ட இந்த உலகத் திரைப்பட விழா சிறந்த முறையில் இந்திய மற்றும் கோவா மாநில அரசாங்கங்களால் நடத்தப்பட்டது. பல உலக நாடுகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த விழா, திரைப்பட விழாக்களுக்கு ச் சிறப்பான முன்னுதாரணமாக இருந்தது. இத்தகைய சிறந்த விழாவில், தமிழ் சினிமா பற்றிய என்னுடைய புத்தகமான ‘பிரைடு ஆஃப் தமிழ் சினிமா: 1931 முதல் 2013 வரை’ என்ற ஆங்கிலப் புத்தகம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது எனக்குப் பெருமிதம் தந்தது.
தொடர்புக்கு: dhananjayang@gmail.com