

நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்கத் தெரியாமல் போவதால், பிரிந்துவிட்ட உறவுகளும் முறிந்துவிட்ட காதலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து நாம் மீளாத் துயரில் ஆழ்ந்துவிட நேர்கிறது. சகிக்க முடியாத இந்தச் சோக உணர்வைக் கச்சிதமாக எடுத்துக்காட்டும் தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.
வழக்கப்படி முதலில் இந்திப் பாட்டு.
தில் ஏ மந்திர் (உள்ளம் ஒரு கோவில்) என்ற இந்திப் படம் நெஞ்சில் ஒரு ஆலயம் என்ற வெற்றிப் படத்தின் முழுமையான மறு ஆக்கப் படம். தமிழில் இப்படத்தை இயக்கிய தர் இந்தியிலும் இயக்க அவருக்கு அகில இந்திய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த படம் இது. ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகிய மூவருக்கும் திருப்பத்தைத் தந்த படம். பின்னர் தெலுங்கிலும் கன்னடத்திலும் வெளிவந்த அழுத்தமான திரைக்கதை கொண்ட இப்படத்தின் இந்திப் பாடலை எழுதியவர் ஷைலேந்திரா என்ற பெயரில் புகழ் பெற்ற ஷங்கர்லால் கேசரிலால். பாடியவர் முகமது ரஃபி. இசை ஷங்கர் ஜெய்கிஷன். மறக்க முடியாத உணர்வுகளின் பாடலாக விளங்கும் ஹிந்துஸ்தானி கீரவாணி ராகத்தில் அமைந்த அந்தப் பாடல்:
யா நா ஜாயே பீத்தேன் தினோன் கோ
ஜாக்கே நா ஆயே ஜோ தின்
தில் கியோன் புலாயே
உநே தில் கியோன் புலாயே
தின் ஜோ பக்கேருஹோத்தே,
பிஞ்ச்ரே மே மை ர லேத்தா ...
இதன் பொருள்:
நினைவுகள் நீங்குவதில்லை வாழ்ந்த நாட்களின் (நாட்களைப் பற்றிய)
திரும்பி வராத அந்த நாட்களை மனது ஏன் அழைக்கிறது (மீண்டும் நினைக்கிறது)
(பழகிய அந்த) நாள் ஒரு பறவையாக இருந்திருந்தால்
கூண்டுக்குள் வைத்திருப்பேன்
போற்றி வளர்த்திருப்பேன் முத்துகளைத் தானியமாகக் கொடுத்திருப்பேன்
நெஞ்சில் வைத்துக்கொண்டிருப்பேன்
அவள் புகைப்படத்தை (வேண்டுமானால்) மறைத்து வைக்கலாம்
எங்கு விருப்பமோ அங்கு, ஆனால்
மனதில் மூர்த்தியாய் அமர்ந்துவிட்ட
அவள் நினைவு அழியாது- அழிக்கவும் முடியாது
(வெளியில்) சொல்லுவதற்கு மட்டும் அவள் அடுத்தவள்.
நெஞ்சம் மறப்பதில்லை என்னும் படத்தில் இதே சூழலுக்குப் பாட்டு எழுதிய கண்ணதாசன் வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்து எழுதிய பாடல் என்று கூறப்படும் பாடலைப் பார்ப்போம். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
பாடல்:
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழப்பதில்லை
நான் காத்திருந்தேன்
உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களும் மூடவில்லை
ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணை ஏன் கிடைக்கவில்லை
ஒரு பொழுதேனும் உன்னுடன் நான்
உயிராய் இணைந்திருப்பேன் அதை
இறப்பினிலும் மறு பிறப்பினிலும்
நான் என்றும் நினைத்திருப்பேன்
நெஞ்சம் மறப்பதில்லை
சோக கீதங்களில் தனி முத்திரை பதிக்கும் பி.பி. ஸ்ரீனிவாஸ் தன் வசீகரக் குரலில், தேனினும் இனிய குரல் கொண்ட சுசீலாவுடன் இணைந்து பாடிய சோகப் பாடல் இது. இதே பாடலை மகிழ்ச்சியான மனநிலையில் நாயகி பாடும் காட்சியும் படத்தில் உண்டு. அதைப் பாடியவர் சுசீலா.