யு சான்றிதழுக்காகப் படம் பண்ணுவது கொடுமை!- சி.எஸ். அமுதன் பேட்டி

யு சான்றிதழுக்காகப் படம் பண்ணுவது கொடுமை!- சி.எஸ். அமுதன் பேட்டி
Updated on
2 min read

தமிழ்ப்படக் கதாநாயகர்களைச் சகட்டுமேனிக்குப் பகடி செய்த ‘தமிழ்ப் படம்’ திரைப்படத்தின் இயக்குநர் சி.எஸ். அமுதன். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இரண்டாவது படம்’ வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. “வழக்கமான ஃபார்முலாவிலிருந்து வெளியே இருக்கும் படம் இது. என் முதல் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு எனது இரண்டாவது படத்துக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும்” என்று பேச ஆரம்பித்தார் அமுதன்…

‘இரண்டாவது படத்துக்கு முதலில் ‘யு/ஏ' இப்போது ‘யு' சான்றிதழ் எனக் குழப்பங்கள் நிலவ என்ன காரணம்?

இது தமிழ் சினிமாவோட பிரச்சினை என்றே சொல்லலாம். ‘யு/ஏ' வாங்கினால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டம் ஜாஸ்தி. புதுசா ஏதாவது ஒரு விஷயம் பண்ணினாலே, வரி விலக்கு என்ற விஷயம் போய்விடுகிறது. இதற்குத் தயாரிப்பாளர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் கோடி கோடியாய் முதலீடு செய்யும்போது, எதிர்பார்ப்பது நியாயம்தான்.

சென்சார் சான்றிதழையும், வரி விலக்கையும் இணைக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன். தமிழ் கலாச்சாரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய படத்தில்கூட ஒரு சில விஷயங்களை வைக்க வேண்டியுள்ளது. ‘யு' சான்றிதழுக்காகப் படங்கள் பண்ண ஆரம்பித்தால், ஒரே மாதிரியான படங்கள்தான் வரும். மூன்று இளைஞர்களைப் பற்றிய படம். அவங்க மது அருந்துவாங்க, இன்றும் பல தவறான நடத்தைகள் உண்டு.

அப்படி இருக்கும்போது, எப்படி நான் ‘யு' சான்றிதழ் படம் எடுக்க முடியும் சொல்லுங்க. சென்சார் அதிகாரிகள் தெளிவாக இதற்கு ‘யு/ஏ'தான்னு சொன்னாங்க. நானே சொல்லுவேன் இது ‘யு/ஏ' கதைதான். ஆனால், வரிச்சலுகை கிடைக்காது. தயாரிப்பாளர் பக்கத்தில் இருந்து எனக்கு ‘யு' வேண்டும் என்று கேட்டார். உடனே சென்சார் அதிகாரிகளோடு கலந்து பேசி, படத்தோட சாராம்சம் போகாமல் ஒன்றரை நிமிடக் காட்சியை மட்டுமே நீக்கினேன். இப்போது நானும் ஹேப்பி, தயாரிப்பாளரும் ஹேப்பி.

‘இரண்டாவது படத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?

திருவல்லிக்கேணி மேன்ஷன் ஒன்றில் மூணு பசங்க ஒண்ணா தங்கியிருக்காங்க. அவர்களுக்கு வெளிப்படையான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. ரகசியமான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய திகிலும், காமெடியும்தான் படம். இந்தப் படத்தைப் பார்க்கிறவங்களுக்கு அதிர்ச்சி இருக்கப்போவது நிச்சயம். அந்த அதிர்ச்சிக்கு நிச்சயமாக வரவேற்பு இருக்கும்.

‘அனேகன்' படத்தில் திடீர்னு பாடலாசிரியர் அவதாரம் எடுத்திருக்கீங்களே?

திடீர்னு ஆகவில்லை. நான் விளம்பரப் படங்கள் பண்ணும்போது, எனக்கு நிறைய விளம்பரங்களுக்கு வேலை செய்து கொடுத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரோட முதல் படமான ‘மின்னலே'வில் ‘மேடி மேடி' என்ற பாடலை எழுதிக் கொடுத்தேன்.

என்னோட அப்பாவும், ஹாரிஸோட அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ‘மின்னலே'வுக்குப் பிறகு எங்களுக்குள் நெருங்கிய பழக்கமில்லை. ‘அனேகன்' படத்தில் இப்பாடலுக்கு யாராவது புதுசா எழுதினா நல்லாயிருக்கும் என்று யோசித்தபோது ஹாரிஸ்தான் என்னோட பெயரை கே.வி.ஆனந்திடம் பரிந்துரை செய்திருக்கிறார். கே.வி. ஆனந்த் பேசினார். நல்லாயிருந்தது எழுதிக்கொடுத்தேன்.

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால், அதே பின்னணியில் நிறைய படங்கள் வரும். ஆனால் ‘தமிழ்ப் படம்' மாதிரி இதுவரை எந்தவொரு படமும் வராததுக்கு என்ன காரணம்?

இவன் அகங்காரமாகப் பேசுகிறான் என்று நினைக்க வேண்டாம். உண்மையைச் சொல்கிறேன். ‘தமிழ்ப் படம்' மாதிரி ஒரு படம் பண்ணுவது கஷ்டம். ஸ்பூப் காட்சிகளை எளிதாக எழுதிவிடலாம். ‘தமிழ்ப் படம்' படத்தில் ஆண்கள் பிறந்தாலே கொன்றுவிடுவார்கள் என்று இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்த ஒருவன் என்னவாகிறான் என்பதுதான் கதை.

அந்தக் கதையில் வரும் ஒவ்வொரு காட்சியும், ஒரு படத்தோட ஸ்பூப் காட்சி இருக்கும். திரைக்கதை என்பதில் மற்ற படங்களோட தாக்கம் இருக்கும். இப்படிப் பிறந்தான், வளர்ந்தான், காதலித்தான் என்று கதை நகர்ந்துகொண்டே இருக்கணும். அந்தக் கதை எழுதும்போது ரொம்பவே கஷ்டப்பட்டோம்.

‘தமிழ்ப் படம்' மாதிரி பண்ணலாம் என்று எழுத உட்கார்ந்திருப்பார்கள், அதற்குப் பிறகு எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்திருக்கும். அதனால் அப்படியே விட்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன். ‘இரண்டாவது படம்' ஸ்பூப் கிடையாது. அப்படியொரு முத்திரை என் மீது விழுவதை நான் விரும்பவில்லை. இரண்டாவது படம் எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புதிய அனுபவம்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in