Last Updated : 05 Dec, 2014 12:43 PM

Published : 05 Dec 2014 12:43 PM
Last Updated : 05 Dec 2014 12:43 PM

மொழி பிரிக்காத உணர்வு 24: நட்பைக்கூடக் கற்பைப் போல எண்ணுவேன்

நட்பைப் போற்றும் திரைப் பாடல்களுக்கு எப்போதுமே இதயத்துக்கு நெருக்கமான இடத்தைக் கொடுத்துவிடுவார்கள் நம் ரசிகர்கள். இந்தித் திரைப்பட வரலாற்றின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று ஷோலே (தீப்பிழம்பு). 1975-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், ஹேமமாலினி ஆகியோருடன் அம்ஜத் கான் நடித்திருந்தார். ஆர்.டி. பர்மன் இசையில் ஆனந்த பக்ஷியின் வரிகளில் அகிலப் புகழ்பெற்ற பாடல்கள் இந்தப் படத்தில் அமைந்தன. அவற்றில் கேட்ட மாத்திரத்தில் நட்பை உணரவைக்கும்

அந்தப் பாடல்...

யே தோஸ்த்தி ஹம் நா தோடேங்கே
தோடேங்கே தம் மகர்
தேரா சாத் நா சோடேங்கே
மேரி ஜீத் தேரி ஜீத்
தேரி ஹார் மேரி ஹார்
சுன் யே மேரி யார்

திரையில் ஐந்து நிமிடங்களே இடம்பெறும் இப்பாடலை 21 நாட்கள் செலவிட்டுக் காட்சிப்படுத்தினார் படத்தின் இயக்குநர். இரு நண்பர்கள் மாறி மாறிப் பாடுவதாக அமைந்த இப்பாடலின் பொருள்:

இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம்
என் வலிமையே உடைந்தாலும்
உன் நட்பை உடையவிட மாட்டேன்
என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி
உன் தோல்வி என்னுடைய தோல்வி
கேள் இதை என் நண்பனே
உன் துக்கம் என் துக்கம்
என் உயிர் உன் உயிர் (போன்றது)
அப்படிப்பட்டது நம்முடைய நட்பு
உயிருடன்கூட விளையாடுவேன்
உனக்காக எதிர்கொள்வேன்
உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும்
மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம்
ஆனால் நாம் இருவர் அல்ல
நமக்குள் பிரிவோ சினமோ இல்லை
இறைவனின் ஆசியால் நிகழவும் செய்யாது
உண்டு உறங்குவது ஒன்றாக
உயிரைத் துறப்பதும் வாழ்வதும் ஒன்றாக
வாழ்க்கை முழுவதும் (அப்படித்தான்)
இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம்
என் வலிமையே உடைந்தாலும்
உன் நட்பை உடையவிட மாட்டேன்.

நட்பின் இலக்கணமாகத் திகழும் இப்பாடல் வரிகளின் உணர்வுக்கு ஒரு இம்மிகூடக் குறையாமல் அமைந்துள்ளது நாம் காணவிருக்கும் தமிழ்ப் பாடல்.

தமிழ்த் திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலையாள திரையின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நட்பைப் போற்றிப் பாடும் இப்பாடல் இடம்பெற்ற படம் தளபதி. பாடல் வரிகள் வாலி. இசை இளையராஜா. இப்படத்தின் ‘ராக்கம்மா கையைத் தட்டு’ என்ற பாடலும் உலகத் தமிழர்களால் அதிகம் விரும்பி கேட்கப்பட்ட மூன்றாவது திரைப் பாடல் என பி.பி.சி. நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இரு நண்பர்கள் மட்டுமின்றி அவர்களுடன் பலரும் சேர்ந்து பாடும் விதம் அமைந்திருக்கும் இப்பாடல் நட்பின் சாசனப் பாடலாகச் சரித்திரம் படைத்ததற்குக் கவி வரிகள், அதற்கேற்ற இசை, நடிப்பு ஆகிய அனைத்தும் காரணமாகும்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்..

பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்..
ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூளம் பத்தவச்சிக் காயலாம் ஹோய்..
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்..

காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நானில்லை....ஹ…ஹா...

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..
உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே

என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக்கூடக் கற்பைப் போல எண்ணுவேன்

சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்....ஹேய்..
காட்டுக்குயிலு மனசுக்குள்ள…

படம் உதவி: ஞானம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x