

ஆயிரமாவது வாரமாகத் தொடர்ந்து ஒரே தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படம். நடிகர் ஷாரூக் கானை நட்சத்திரமாக மாற்றிய படம். உலகம் முழுதும் அதிகம் அறியப்பட்ட இந்தியப் படங்களில் முதன்மையானது. யாஷ் சோப்ரா தன் மகனை இயக்குநராக அறிமுகம் செய்ய எடுத்த படம். டி.டி.எல்.ஜே என்று அழைக்கப்பட்ட கல்ட் வகை (Cult Film) காதல் படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே.
முதலில் டாம் க்ரூஸ் நடிக்க இந்தியா- அமெரிக்கா கலாச்சாரப் பின்னணியில் காதல் கதை எடுக்கத்தான் ஆதித்யா சோப்ராவுக்கு ஆசை. தந்தை கறாராக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இந்திய நடிகர் நடிக்கும் இந்தியப் படம் என்பதில் தெளிவாக இருந்தார் யாஷ் சோப்ரா. பிறகுதான் இங்கிலாந்தில் தொடங்கி இந்தியாவில் நடக்கும் இந்தியர்களின் காதல் கதை என்று மாற்றினார் மகன்.
முதலில் சயிஃப் அலி கான் கதை கேட்டு விட்டு மறுத்துவிட்டார். இரண்டாம் தேர்வுதான் ஷாரூக் கான். ஷாரூக்கூடக் கதையால் பிரமாதமாகக் கவரப்படவில்லை. அவர் நடித்து வந்த வித்தியாசமான படங்கள் அவருக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துத் தந்திருந்தன. மாயா மேம்சாஃப், தர், பாஸிகர் எல்லாம் பெயர் சொல்லும் படங்கள். இது சாதாரண மெலோடிராமா காதல் கதை. ரொம்ப யோசித்த ஷாரூக்கைச் சம்மதிக்க வைக்கிறார். படம் வெளியான பிறகு தன்னை நட்சத்திரமாக மாற்றியதற்கு ஆதித்யா சோப்ராவுக்கு நன்றி சொல்கிறார் ஷாரூக்.
கதையை விலாவாரியாக எழுதினால் அடிக்கவே வந்து விடுவார்கள். அத்தனை முறை டி.வி.யிலேயே பார்த்திருப்பார்கள் மக்கள். இருந்தும் கடமை கருதி ரத்தினச் சுருக்கம் இதோ:
இங்கிலாந்து வாழ் பஞ்சாபிகள் கதை. சிம்ரனைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான் ராஜ். வேறு ஒருவனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சிம்ரனும் மனதைப் பறிகொடுக்கிறாள். ஓடிப்போகக் கூடாது என்று தீர்மானமாக அவர்கள் வீட்டில் தங்கி அவள் தகப்பனார் மனம் மாறக் காத்திருந்து அவளைக் கைபிடிக்கிறான். ஓடும் ரயிலில் மகளை ஓடிப்போய் ஏற அனுமதிக்கிறார் கடைசியாக.
கதையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறிய முடிந்தால் சுவாரசியம் கெட்டுவிடும் என்பதை என்றுமே நான் நம்பியதில்லை. “இதுதான் நடக்கும். தெரியும். எப்படி நடக்கும் என்று பார்க்கலாம்!” என்பதில்தான் திரைக்கதையின் சூட்சுமம் உள்ளது. அதை அட்சரம் தவறாமல் பின்பற்றிய டி.டி.எல்.ஜே வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை.
இந்தப் படத்தை விமர்சிக்க நான் தேர்வு செய்த காரணம் இந்தப் படத்தில் பொதிந்துள்ள சமூக அரசியல் காரணிகள். தொண்ணூறுகளின் ஆரம்பம் இந்தியாவின் அரசியலில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. ஜனதா தள அரசு கவிழ்ப்பு, ராஜீவ் காந்தி படுகொலை, ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, மைனாரிட்டி நரசிம்ம ராவ் அரசின் தாராளமயமாக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி எனப் பெரும் பட்டியல் இடலாம்.
அப்போது மதம் ஒரு பெரும் சந்தை சக்தியாகவும் வடிவெடுத்தது. இந்து, இந்தி, இந்தியா போன்றவற்றை இந்துத்துவா சக்திகள் முன்னெடுத்துச் செல்ல, சந்தை அங்குள்ள வாய்ப்புகளைத் தேடிச் சென்று லாபம் பார்த்தது. டி.வியில் மகாபாரதம் பெரும் வெற்றி பெற்று நாடு முழுவதும் எல்லா மொழிகளிலும் இந்துக்களை இணைத்தது.
தாராளமயமாக்கல் அந்நியச் சந்தைகளையும் இந்தியச் சந்தைகளையும் இணைத்தன. நம் சரக்கு வெளியூரில் விற்கவும், வெளியூர் சரக்கு நம் ஊரில் விற்கவும் வசதிகள் வந்தன. என்.ஆர்.ஐ (அதாவது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்) பற்றிய கதைத் தேர்வு ஏற்பட்டது இதனால்தான். ஆனால் அது மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தால் இந்தியச் சந்தையில் எடுபடாது. அதனால் பாரத கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு வெளிநாட்டுக் குடும்பத்தின் கதை என்று வடிவமைத்தார்கள்.
உடைகள்தான் மேற்கத்திய உடைகள். உடல் அசைவுகளும் நடன அசைவுகளும் மேலை நாட்டைப் பிரதிபலித்தன. ஆனால் உள்ளே உள்ளது அசலான இந்திய வாழ்வியல் கூறுகள். இதைத்தான் இந்தபடம் முன்வைக்கிறது.
அப்பா என்றால் பயம் கலந்த மரியாதை. குடும்பம் தான் முக்கியம். ஆண்கள்தான் எல்லா முடிவுகளையும் செய்வார்கள். காதலைப் பெற்றோர்களுக்காகத் தியாகம் செய்யலாம். கல்யாணம் புனிதமானது. அந்த ஏற்பாட்டை அவ்வளவு சீக்கிரம் மீறக் கூடாது. காதல் தனி மனிதப் பிரச்சினை அல்ல. அது குடும்பங்கள் மற்றும் நம் கலாச்சாரங்களின் பிரச்சினை. இதுதான் இந்தியக் கலாச்சாரம்.
இது வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் வெளி நாட்டுக்குச் செல்லத் துடிக்கும் இந்தியர்களுக்கும் ஆறுதலான படம். வெளிநாடு சென்ற பிள்ளைகள் இந்தியத் தன்மையை இழந்துவிட மாட்டார்கள் என்று பெற்றவர்களும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவிய படம். இந்தக் கதையின் அடிப்படையும் போக்கும்தான் ஆதார வெற்றிக்குக் காரணம். அதன்பின் வந்த பல என்.ஆர்.ஐ படங்கள் தோல்வி அடைந்ததற்கு இந்த ஆதார விதி மீறப்பட்டதுதான் காரணம்.
படம் 20 வருடங்கள் ஓடப் பிற காரணங்கள்? ஷாரூக் கான் இந்திப் பட உலகின் சக்கரவர்த்தியானது, யாஷ் சோப்ராவின் வியாபார சாமர்த்தியம், இன்றைய நடு வயதினருக்கு இந்தப் படம், ஒரு தக்க வைக்க வேண்டிய கனவு.பகல் கனவு போல என்றும் சிலிர்ப்புக்கு உள்ளாக்கும் காதல் படங்கள் எல்லா வயதினருக்கும் பிடிக்கும். கஜோல் முகத்தில் உள்ள வெகுளித்தனமான புன்னகையும் காதலும் அவரையும் படத்தையும் காதலிக்கப் போதுமான காரணங்கள்.
எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லும் படங்களுக்குச் சர்வதேசத்திலும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதுவும் படத்திற்கு வலுச் சேர்த்தது. இந்தப் படக் கதையின் அடிநாதத்தை நகலெடுத்து எனக்குத் தெரிந்து இருபது இந்தியப் படங்கள் (தமிழ் உள்பட) வந்துவிட்டன. வேறு என்ன சொல்ல படம் பற்றி? போதும், இந்தக் காதல் படத்தை அதிகம் ஆராய வேண்டாம். அனுபவிப்போம்!