

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, நிரந்தர வேலை கிடைப்பதற்காகக் காத்திருந்த நேரம். புத்தகங்கள் பைண்ட் செய்வது, வாடகை நூலகம் நடத்துவது என்று பல சில்லறை வேலைகள் செய்துகொண்டிருந்தோம்.
அகில இந்திய வானொலியில் இளைய பாரதப் பிரிவில் பங்களிக்க இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சிகள் அமைப்பது, பேட்டிகள் எடுப்பது, அறிவிப்பாளராக இருப்பது, எங்களுடைய சிறுகதைகளை ஒலிபரப்புவது என்று மனதுக்குப் பிடித்த வேலை.
ஒருநாள் வானொலி நிலைய இயக்குநர் அழைத்தார். “தேசிய அளவில் இளைஞர்களுக்கான வானொலி நாடகப் போட்டி ஒன்று நடக் கிறது. இளைய பாரதத்துக்காக நீங்கள் ஏன் ஒரு நல்ல நாடகம் தயாரித்துத் தரக்கூடாது..?” என்று கேட்டார்.
‘விழிகள் விழித்திருந்தால்..’ என்ற தலைப்பில் நாடகம் எழுதினோம். இயக்கினோம். நாடகத்தின் நாயகன் பார்வையற்றவன். ஆனால், அதை ஓர் குறைபாடாக நினைக்காமல் கல்வி, காதல், குடும்பம் என்று எல்லாத் தரப்பிலும் அவன் எப்படி வெற்றி பெறு கிறான் என்பதே கருப்பொருள்.
எங்கள் நாடகம் டெல்லியில் இறுதிச் சுற்று வரை தேர்வானது. ஆனால், அந்த வருடம் இந்தி நாடகம் (அரசியல்?) ஒன்றுக்குப் பரிசு போனது. சிறந்த நாடகம் என்ற சான்றிதழ் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது. நாடகம் வானொலியில் பலமுறை மறு ஒலிபரப்பானது.
அந்த நாடகத்தில் பார்வையற்ற நாயகனின் பல்வேறு இயல்புகளை அலச வேண்டியிருந்தது. பார்வையற்ற ஒருவரிடம் நேரடியாகப் பேசி சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள விரும்பினோம். ஒரு நண்பர் மூலம், அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஜாம் பஜார் பகுதியில் ஒரு சிறிய வீடு. கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த இளைஞர் எங்களை வரவேற்றார்.
அறிமுகங்கள் முடிந்தன. கண் ணாடியை விலக்கினார். இரு விழிகளும் உள்வாங்கியிருந்தன. இமைகள் தைக்கப்பட்டது போல் திறக்காமல் ஒட்டியிருந்தன. பிறவியிலிருந்தே பார்வையற்றவர்!
“உங்களைக் காயப்படுத்தணும்னு எதுவும் கேக்கல. விவரம் தெரிஞ்சுக் கணும்னுதான் கேக்கறோம்…” என்ற அறிமுகத்துடன் தொடங்கினோம்.
புன்னகையுடன் பதில்கள் தந்தார்.
“பொறந்ததுலேர்ந்தே பார்வையில்ல. வெளிச்சம்னா என்னன்னு தெரியாது. ஆனா, வெயில்னா தெரியும். இருட்டுன்னா என்னன்னு தெரியாது. ஆனா, நிழல்னா தெரியும். அம்மா எப்படி
இருப்பாங்கன்னு தெரியாது. ஆனா, அவங்க வாசனை தெரியும். வண்ணம்னா என்னன்னு தெரியாது. வடிவங்களைத் தொட்டுத் தெரிஞ்சுக்க முடியும். பின்னால வர்றவன் எவ்வளவு தூரத்துல வர்றான்? கடைவீதியில இருக்கமா? கோயில் பக்கத்துல இருக்கமா? குப்பைத் தொட்டி
யைத் தாண்டறோமானு… எல்லாமே சொல்ல முடியும். பார்வையை மட்டும்
தான் குடுக்கலியே தவிர, மிச்ச எல்லா உணர்வையும் கடவுள் முழுமையாக் குடுத்திருக்காரு…”
சின்னச் சின்ன ஒலிக் குறிப்புகள், வாசனை அனுபவங்கள் எல்லாமே பார்வையற்றவர் நினைவில் மிக ஆழமாகப் பதிந்துவிடும் என்று புரிந்துகொண்டோம்.
“வீணை, புல்லாங்குழல், வயலின் எல்லாமே பார்வையில்லாதவங்க அநாயாசமா, அபாரமா வாசிக்கறாங்களே, எப்படி?” என்று எங்களது நெடுநாள் பிரமிப்பைக் கேள்வியாக வெளிப்படுத்தினோம்.
“ஒலிதானே எங்க பார்வை! இசைங்கறது ஒலிதான..? பார்க்கத் தெரிஞ்சவன் ஓவியம் வரையறதுல திறமைசாலியா இருக்கற மாதிரி, கேக்கத் தெரிஞ்சவங்க, இசையில திறமைசாலியா இருக்க மாட்டாங்களா..?”
தயக்கத்துடன் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.
“ரொம்ப நாளா ஒரு சந்தேகம். தூங்கும்போது, எங்களுக்குக் கனவுகள் வரும். கனவுல, பாம்பு படமெடுத்து ஆடும். மாடு துரத்தும். இருட்டு மூலைல பிசாசு பயமுறுத்தும். அலையைப் பார்த்
துக்கிட்டே மணல்வெளியில நடப்போம். இன்னும் எத்தனையோ அனுபவம் ஒரு சினிமா போல வரும். ஆனா, பார்வையில்லாதவங்களுக்கு கனவே வராதுனு சொல்றாங்களே, அப்படியா..?”
“அதெப்படி? வாழ்க்கைல நடக்கறதைக் கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் பயம் எல்லாம் சேர்த்து, மாயமா அனுபவிக்கறதுதானே கனவு..? உங்க உலகத்துல பார்வை மூலமா கிடைக்கிற அனுபவம் கனவுல வருது. எங்களுக்கு வாசனையும், ஒலியும், ஸ்பரிசமும் கனவுல அதே மாய அனுபவத்தைக் கொடுக்கும். உங்க கனவு சினிமாவா இருக்கலாம். எங்க கனவு ஒலிச் சித்திரமா இருக்கும்..” என்று சிரித்தார்.
அவரைச் சந்தித்த பின்தான், ‘விழிகள் விழித்திருந்தால்..’ நாயகனின் பாத்திரத்தை அபாரமாகச் செதுக்குவதற்கு தைரியம் வந்தது.
நாங்கள் திரைக்கதை எழுதி, சுந்தர் சி இயக்கிய திரைப்படம் ‘ரெண்டு’. மாதவனுக்கு இரண்டு வேடங்கள். தன் குடும்பத்தையும், தான் மிக நேசித்தவளின் குடும்பத்தையும் அநியாயமாக அழித்து ஒழித்த நபர்களை தேடித் தேடிப் பழிவாங்கும் கண்ணன் என்ற பார்வை இழந்தவனின் பாத்திரம் அதில் ஒன்று.
வில்லன்களில் ஒருவன், தியேட்டர் முதலாளி. தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது, திரைக்குப் பின்னால் இருக்கும் மறைவான இடத்தில் அமர்ந்து, மது அருந்திக்கொண்டிருப்பான். அங்கே நடிகர்களின் ஆளுயர கட்-அவுட்கள் பல வைக்கப்பட்டிருக்கும். ஷாரூக் கானின் கட்-அவுட் கொஞ்சம் கொஞ்சமாக நகரும். குடிபோதையில் தெரியும் காட்சியோ என்று சந்தேகத்தோடு வில்லன் அந்த கட்-அவுட்டை நெருங்கி நகர்த்துவான்.
அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பார்வையற்ற நாயகனின் கையில் ஆயுதம் கண்டு வில்லன் திடுக்கிட்டுப் பின்வாங்குவான். ஆனால், அந்த ஆயுதம் மிகச் சரியாக அவனைத் தாக்கி வீழ்த்தும். பின்னணியில் திரையரங்கின் பெரு ஒலியில் அவனுடைய அலறல் கேட்காமலேயே அடங்கிப் போகும்.
வில்லன் நெருங்கி வரும்போது, அவன் உடைகளின் சலசலப்பு, செருப்புகளின் சரக், சரக் ஒலி, கட்-அவுட்டைப் பிடித்து நகர்த்தும்போது, அவன் நின்றிருக்கக்கூடிய இடம் எல்லாவற்றையும் பார்வையில்லாமலேயே நாயகன் உணர முடிந்ததால், வெகு துல்லியமாக வந்த வேலையை முடித்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து தப்பித்துப் போவான் என்று அந்தக் காட்சியை அமைக்க முடிந்தது. ரசிகர்களின் கரவொலி இன்னும் காதில் ஒலிக்கிறது!
- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com