Last Updated : 19 Dec, 2014 02:44 PM

 

Published : 19 Dec 2014 02:44 PM
Last Updated : 19 Dec 2014 02:44 PM

முப்பரிமாணத்தின் முதல் ஜாலம்!

முப்பரிமாண அனிமேஷன் படங்களின் உலகை புரட்டிப்போட்ட இரண்டு ஹாலிவுட் நிறுவனங்கள் டிஸ்னியும் பிக்ஸாரும். சரியாகப் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘டாய் ஸ்டோரி (Toy Story)’, முப்பது மில்லியனில் தயாரிக்கப்பட்டு 300 மில்லியன் டாலர்களைக் குவித்து மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது.

இதுவே கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கதாபாத்திரங்களை அசைவூட்டம் செய்த முதல் முப்பரிமாண அனிமேஷன் படம். அதற்குப் பிறகு வெளியான அடுத்தடுத்த பாகங்கள் முந்தைய வசூல் சாதனையை முறியடித்து ரசிகர்களின் அபிமான 3டி படங்களின் வரிசையாக அவை மாறிவிட்டன. இனி வரப்போகும் பாகங்களுக்கும் ரசிகர்களின் இந்த ஆதரவு குறையாது என்று நம்புகிறது பிக்ஸார் நிறுவனம். இந்த நம்பிக்கையின் பின்னணியில் இருக்கும் நம்பகமான தொழில்நுட்பம்தான் 3டி அனிமேஷன்.

ரத்தமும் சதையுமான நடிகர்களிடம் இயக்குநர்கள் எதிர்பார்த்து ஏமாந்துபோகும் உணர்ச்சிகளைக்கூட 3டி அனிமேஷன் கதாபாத்திரங்களில் கம்ப்யூட்டர் வழியாக உள்ளீடு செய்துவிட முடியும் என்பதை இந்தத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியது. டாய் ஸ்டோரி முதல் பாகம் தயாரானபோது மொத்தம் 400 விதமான பொம்மைக் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு மாடல்கள் இறுதிசெய்யப்பட்டன. இவற்றுக்கு 3டி முறையில் உயிர்கொடுக்க நூற்றுக்கணக்கான அனிமேட்டர்கள் இரவு பகலாக வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.

முதன்மைக் கதாபாத்திரங்களை மட்டும் களிமண் மாடல்களாக உருவாக்கிப் பின் அவற்றை ஸ்கேனிங் இமேஜ்களாக கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்துகொண்டார்கள். அடுத்து ஒவ்வொரு பாத்திரத்தின் அசைவுகளும் அனிமேட் செய்யப்பட்டன. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணநலன்களுக்கு ஏற்ப அவை எப்படி நடக்கும், ஓடும், குதிக்கும், பேசும், சிரிக்கும் என்று விலாவாரியாகத் திரைக்கதை வழியாகப் புரிந்துகொண்ட ஓவியர்கள் அதற்கான நிரல்களை எழுதி முடிக்க, இவற்றை அசைவூட்டங்களாகக் கதாபாத்திரங்களுக்குச் செலுத்தினார்கள் அனிமேட்டர்கள்.

வுடி (Woody) என்ற பிரதான கதாபாத்திரத்துக்கு மட்டும் 723 அசைவுகள் தேவைப்பட்டன. இவற்றில் 212 அசைவுகள் முக உணர்ச்சிகளைக் காட்டக்கூடியவை. 58 வசனத்துக்கு ஏற்ற உதட்டசைவுகள். இப்படித்தான் மற்ற கதாபாத்திரங்களுக்கும் அனிமேட் செய்யப்பட்டது.

அசைவூட்டம் தரப்பட்டதும் அடுத்த வேலை பாத்திரங்களுக்கு மனிதக் குரல் கொடுப்பது. ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடிக்காத இந்த அனிமேஷன் படங்களுக்குப் புகழ்பெற்ற அதே நடிகர்கள் குரல்கொடுத்தால்? அது ரசிகர்களைத் திரையரங்குக்கு இழுக்கும் வணிக ஜாலமாக ஹாலிவுட்டில் பிரபலமடைந்துவிட்டது. டாய் ஸ்டோரிக்கு டாம் ஹாங்க்ஸ், டிம் ஆலன், டான் ரிக்கில்ஸ், ஜிம் வார்னி, வால்லஸ் ஷான், ஜான் ராட்சென்பர்கர், அண்ணீ பாட்ஸ், ஆகிய முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு குரல்கொடுத்தார்கள்.

அனிமேஷன் கதாபாத்திரங்களின் உதட்டசைவுக்குக் குரல் கொடுப்பது அத்தனை எளிதல்ல. குரல் கொடுக்கும் பணி முடிந்ததும், பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளின் பின்புலம் ஸ்டோரி போர்டுகள் மூலம் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு ஒளியமைப்பு (lighting), நிழலமைப்பு (shading), மற்றும் சிறப்பு விஷுவல் எஃபெக்ட்ஸ் அனைத்தும் சேர்க்கப்பட்டுக் காட்சிகள் சுவை கூட்டப்பட்டன. இதன்பின் ராண்டி நியூமேனின் பின்னணி இசை சேர்க்கப்பட்டது. ஜான் லஸ்சீட்டர் இயக்கிய இந்தப் படத்தில் மொத்தம் 114,240 பிரேம்கள் அனிமேட் செய்யப்பட்டன. அந்த அனிமேஷன் நுட்பத்தின் சூட்சுமம் அடுத்த வாரம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x