

யார் இவர்?
தான் இயக்கிய முதல் தமிழ்ப் படத்துக்குத் தேசிய விருது பெற்றவர் இயக்குநர் ஜானகி விஸ்வநாதன். அது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசிய முதல் தமிழ்ப் படமான குட்டி (2001).
பத்திரிகையாளராக இருந்ததால், நிதர்சன உலகின் யதார்த்தப் பிரச்சினைகளைப் படமாக எடுப்பதை வழக்கமாகக் கொண்டவர். எழுத்து, ஆவணப் படம், சினிமா என்று எந்த ஊடகமானாலும் தான் நினைத்ததைச் சிறப்பாகச் சொல்லத் தெரிந்தவர்.
பின்னணி
சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல், தொடர்பியல் பட்ட மேற்படிப்பும் முடித்தார். பத்திரிகையாளராகப் பணிபுரிந்த பிறகு, சில ஆவணப் படங்களை எடுத்தார். தேசிய விருது வாங்கியிருந்த சந்தோஷ் சிவனைப் பேட்டி எடுத்தபோது, “நீங்கள் ஏன் சினிமா எடுக்கக் கூடாது” என்று அவர் திரும்பக் கேட்ட நேரத்தில், ஜானகியின் மனதில் புதிய விதை விழுந்தது.
முதல் அரும்பு
‘குட்டி’, வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் சிறுமிகள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பான படம். இக்கதையை முதலில் குறுநாவலா எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. எழுத்தில் இந்தக் கதை தொட்ட எல்லைகளைவிடப், படம் மேலும் சில உச்சங்களைத் தொட்டிருந்தது.
பெண்கள், சிறுமிகள் காலங்காலமாகச் சந்தித்துக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றியும், பாலியல் தொழிலுக்காக அவர்கள் கடத்தப்படுவது பற்றியும், உழைப்பு என்ற மதிப்பைப் பெறாத வீட்டு வேலையும் அதில் உள்ள சிக்கல்களையும் பற்றி தனது முதல் படத்திலேயே பேச ஓர் இயக்குநருக்குத் துணிச்சல் தேவை. அது ஜானகியிடம் இருந்தது.
‘குட்டி’, 2002 தேசியத் திரைப்பட விருதுகளில் ‘வெள்ளித் தாமரை - நடுவர் சிறப்பு விருதைப்’ பெற்றது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை இப்படத்தில் நடித்த பி.ஸ்வேதா பெற்றார். 2002 கெய்ரோ சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழாவில் (எகிப்து) சர்வதேச நடுவர் சிறப்பு விருதைப் பெற்றது.
முக்கியப் படைப்புகள்
அவருடைய இரண்டாவது படம் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, தேவதாசிகளைப் பற்றியது. ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அவருடைய இரண்டு தமிழ்ப் படங்களுமே உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுப் பாராட்டைப் பெற்றுள்ளன.
சென்னையிலிருந்து டெல்லி சென்ற அவர், சமூகப் பகடிப் படமான ‘யெ ஹே பக்ராபூர்’ என்ற தனது முதல் இந்திப் படத்தை எடுத்தார். இந்தப் படத்தில் வரும் ஆட்டின் பெயர், ஷா ருக் (இந்தி சூப்பர் ஸ்டார்). இந்த ஆண்டு மே மாதம் அது வெளியானது.
மறக்க முடியாதது
“சமூகத்திலும் அரசியலிலும் சினிமா செலுத்தியுள்ள தாக்கம் சாதாரணமானது அல்ல. ஒரு முறை ‘குட்டி’ படத்தைப் பார்த்த பிறகு, தன்னிடம் வேலை பார்த்த பெண்ணை ஊருக்கே திரும்ப அனுப்பிப் படிக்கவைத்ததாக, ஒருவர் கூப்பிட்டுச் சொன்னார். நான் படமெடுப்பதற்கான திருப்த்தியைத் தர இந்தத் தாக்கம் போதும்” என்கிறார் ஜானகி.
தெரியுமா?
சென்னை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர். இவருடைய படங்களை இணைந்து தயாரித்தவர் ரமேஷ் அருணாசலம். ஜானகியின் சினிமா நிறுவனம் ஷ்ருதிகா ஃபிலிம்ஸ்.