

தமிழ் சினிமா வரலாற்றில் இன்றளவிலும் பேசப்படக்கூடிய படமாகவே இருக்கிறது 1978-ல் வெளியான ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’. தமிழ் சினிமா கடந்த நூற்றாண்டில் கடந்துவந்த பாதையைப் பதிவுசெய்தவர்கள் அனைவரும் பாரதிராஜாவின் 16 வயதினிலே (1977), மகேந்திரனின் முள்ளும் மலரும் (1978), உதிரிப் பூக்கள் (1979) ஆகியவற்றைத் தமிழ் திரைப்படத்தின் தடத்தை மாற்றிய படங்கள் என்று குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.
பாரதிராஜா, ஸ்டூடியோக்களில் இருந்து பி.எஸ். நிவாஸின் உதவியோடு வெளிப்புறங்களுக்குத் தமிழ் சினிமாவைப் பெயர்த்தார் என்றால், பாலு மகேந்திரா, அசோக் குமார் ஆகியோரின் துணையுடன் மகேந்திரன் அதன் உள்வெளிகளுக்குள் ஊடுருவ முயன்றார். ஆயினும் ஆறுமுகம் ருத்ரய்யாவின் பெயரை அந்தப் பட்டியலில் வைத்து அலசும்போது பெருவாரியான சினிமா பத்திரிகையாளர்கள்/ஆய்வாளர்கள் பெருமூச்செறிவதை நாம் உணர முடியும்.
‘அவள் அப்படித்தான்’ என்ற படம் அளித்த நம்பிக்கைக் கீற்று அவர்களின் மனதை வருடிச் செல்வதை நுகர முடியும். எரிக் வோன் ஸ்றோஹைம் 1924-ல் இயக்கிய க்ரீட் என்ற தனது படத்துக்காக இன்றளவிலும் ஹாலிவுட்டின் சாத்தியப்படாத கனவுகளின் நினைவுக்குறியாக உறைந்திருப்பதைப் போல, ருத்ரய்யாவும் அவள் அப்படித்தானுடன் தமிழ் சினிமாவின் சாத்தியப்படாத சின்னமாகியிருப்பதை அனுமானிக்க முடிகிறது. ருத்ரய்யா ‘அவள் அப்படித்தான்’ தவிர ‘ஒரு கிராமத்து அத்தியாய’த்தையும் (1980) இயக்கியுள்ளார்.
‘அவள் அப்படித்தான்’ படத்திலுள்ள மூன்று பாடல்களின் படமாக்கமே அதன் மாற்று அழகியலை நமக்குச் சொல்கிறது. மிகச் சுருக்கமாக, இரண்டு மாதங்களில் தோராயமாக இருபதே கால்ஷீட்டில், ஆர்ரி 2 B என்னும் மூன்று லென்ஸ் டர்ரெட்டைக் கொண்ட கேமராவை வைத்துக்கொண்டு தனது சென்னை திரைப்பள்ளி சகாக்களான நல்லுசாமி மற்றும் ஞானசேகரன் உதவியுடன் ருத்ரய்யா இப்படத்தை உருவாக்கினார். கிட்டத்தட்ட 27 (1000 அடி) ஆர்வோ கறுப்பு வெள்ளை ரோல்களிலிருந்து 14 ரீல்களில் தொகுக்கப்பட்டு வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப் பள்ளியிலிருந்து வெளிவந்து நல்ல சினிமாவின் உந்துதலில் மைய நீரோட்ட சினிமாவில் செய்த இடையீடு. இன்று தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு இனிய கனவாக இது இருக்கிறது.
அந்தக் கனவைச் சாத்தியப்படுத்திய ருத்ரய்யாவின் மேதமை என்னவென்றால் தனது கனவின் மீது அவர் கொண்ட நம்பிக்கைதான். அவர் செதுக்கிய வெளியில் சோமசுந்தரேஸ்வரர், அமரர் அனந்து மற்றும் வண்ணநிலவன் நினைவில் நிற்கும் உரையாடல்களை எழுத, கண்ணதாசன் மற்றும் கங்கை அமரனின் பாடல்களும் மிளிர்ந்தன. இன்றைய சூழலில் மிக சுருக்கமான முதலீட்டைக் கொண்டு ஓரளவு காலூன்றிய மூன்று நட்சத்திரங்களை வைத்து அப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.
‘அவள் அப்படித்தான்’-ல் பல காட்சிகள் லாங் டேக் என்று சொல்லப்படுகிற கால அளவில் நீளமான ஷாட்டுகளில் படமாக்கப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல, நல்லுசாமியும் ஞானசேகரனும் கேமராவைக் கையில் வைத்துக் கொண்டே நிகழ்வுகள் அரங்கேறும் அறைகளின் குறுகிய வெளிகளின் யதார்த்தத்தை அருமையாகப் பதிவுசெய்திருப்பார்கள். உதாரணத்திற்கு, ப்ரியா உணர்ச்சிவசப்பட்டு ஹிஸ்டீரியா வந்ததுபோல மயங்கிவிழும் காட்சி -ஹாலிலிருந்து பெட்ரூமிற்கு கேமரா கையிலேந்தியபடி அத்தகைய ஒரு ட்ராமெடிக்கான தருணத்தில் செல்வது- அன்றைய தமிழ் சினிமாவுக்குப் புதிது. ப்ரியாவின் தனித்துவத்திற்கும் ஆற்றலுக்கும் ‘அவள் அப்படித்தான்’ ஓர் எடுத்துக்காட்டு.
எழுத்தாளர் அம்பை, அவள் அப்படித்தானில் ப்ரியாவை வெட்ட வெளியில் இறக்கிவிட்டு கார் விரைவதைச் சுட்டிக்காட்டி, அத்தகைய புதுமைப் பெண்ணின் இடம் நடுத்தெருவில்தான் என்று சொல்லுமளவில் படம் புதுமையாக எதுவும் செய்துவிடவில்லை என்று வாதிட்டிருக்கிறார். அது நியாயமான விமர்சனமே. ஆயினும், ஸ்ரீப்ரியா தன்னிச்சையாகத்தான் காரிலிருந்து வெளியேறுகிறார். ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தனது கவிமொழியில் பெருமிதம் மிகுந்த வில்லின் நாணிலிருந்து வெளியேறும் அம்பு வில்லின் காதில் கிசுகிசுப்பாக, “உனது விடுதலையே எனதும்!” என்று கூறும் படிமம் நினைவுக்கு வருகிறது.
தன்னைக் ‘கொம்பன்’ என்று அறிவித்த, ஆனால் மென்மையான கனவுகள் நிறைந்த, கலைஞன் ருத்ரய்யாவிற்குத் தமிழ் சினிமாவுடனிருந்த முரண் நிறைந்த உறவின்மேல் தாகூரின் படிமம் ஒளிபாய்ச்சுகிறது-லாங் டேக்கில்.
கட்டுரையாளர் சொர்ணவேல், அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் சினிமா பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்... தொடர்புக்கு mswarnavel@gmail.com