

யார் இவர்?
மலையாளத்தில் எழுந்துள்ள புதிய அலை இளம் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரே பெண் அஞ்சலி மேனன்.
ஒரு இயக்குநர் என்பதைவிடவும் திரைக்கதை எழுத்தாளர் என்பதை அவருடைய முதன்மை அடையாளமாகச் சொல்லலாம். வெற்றிப் படமான ‘உஸ்தாத் ஓட்ட’லில் வசனத்துக்காகத் தேசிய விருது பெற்றவர். இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் ‘பெங்களூர் டேஸ்’ இயக்குநர்.
பின்னணி
கேரள மண்ணுக்கு நெருக்கமான, மலையாளிகளின் குணாம்சம் கொண்ட வெகுமக்கள் படங்களைத் தரும் இவர் பிறந்த ஊர் கோழிக்கோடு. துபாயில் வளர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்குக் கேரளம் திரும்பினார். புனே பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பட்ட மேற்படிப்பும், லண்டன் சர்வதேச ஃபிலிம் ஸ்கூலில் இயக்குநர் படிப்பும் முடித்திருக்கிறார்.
முதல் அரும்பு
கேரளாவில் ஆவணப் படங்கள், துபாயில் டிவி நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் திரைப்படங்கள் போன்றவற்றை இயக்கினார். இவருடைய இயக்கத்தில் வந்த முதல் முழுநீளப் படம் ‘மஞ்சாடிக் குரு’ (அதிர்ஷ்டச் சிவப்பு விதைகள்).
துபாயில் இருந்து கேரளம் திரும்பிய அஞ்சலியின் அனுபவங்களில் இருந்து, ‘மஞ்சாடிக்குரு’வுக்கான கதைக் கரு கிடைத்திருக்கலாம். விக்கி (10) என்ற சிறுவன் தன் தாத்தாவின் 16 நாள் இறுதிச் சடங்குக்குச் சொந்தக் கிராமத்துக்கு வருகிறான். இதில் உறவினர்கள் இடையே பழைய சண்டைகளும் மோதல்களும் வெடிக்கின்றன. சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தனது பாரம்பரிய வீட்டுக்குத் திரும்பும் விக்கி, தன் வாழ்க்கையில் அந்த 16 நாட்கள் எப்படிப்பட்ட அழிக்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தின என்று சொல்கிறான்.
2008 கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த மலையாள சினிமா, சிறந்த முதல் பட இயக்குநர் ஆகிய விருதுகள் இப்படத்துக்குக் கிடைத்தன.
முக்கியப் படைப்புகள்
அடுத்ததாக ‘கேரளா கஃபே’ என்னும் தொகுப்பு படத்தில் வந்த ‘ஹேப்பி ஜர்னி’ என்ற குறும்படத்தை அஞ்சலி எடுத்தார். பஸ்ஸில் பெண்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினையை, கதையின் நாயகி எப்படிச் சமயோசிதமாகச் சமாளிக்கிறாள் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம்.
வெறுமனே சமைப்பதால் ஒரு உணவு சுவையைப் பெறுவதில்லை, அதற்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது என்று சொல்வதே ‘உஸ்தாத் ஹோட்டல்’. இதை அன்வர் ரஷீத் இயக்கி இருந்தாலும், கதை, திரைக்கதை, வசனம் அஞ்சலிதான். இந்த ஆண்டு வெளியான ‘பெங்களூர் டேஸ்’ கேரள எல்லையைத் தாண்டி, மற்ற மாநிலங்களிலும் அஞ்சலியின் புகழைப் பரப்பியுள்ளது.
சின்ன வயசிலிருந்தே பெங்களூர் போக வேண்டும் என்று நினைக்கும் திவ்யா, அர்ஜுன், கிருஷ்ணன் மூன்று பேரும் ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள். திவ்யாவின் மேற்படிப்பு கனவு, திடீர் திருமணத்தால் தடைபடுகிறது. அதற்கும் மேலாகத் திருமணத்துக்கு உடனே பிறகு, கணவரின் வேறொரு முகத்தைக் கண்டுபிடிக்கிறாள் திவ்யா. விவசாயக் காதல் கொண்ட கிருஷ்ணன், சாஃப்ட்வேர் இன்ஜினீயராகி, தன் விருப்பத்துக்கு ஏற்ற காதலியையும் பெறுகிறான்.
அந்தக் காதலின் சாயம் வெளுக்கிறது. தினசரி வாழ்க்கையின் கவலைகளைத் துறந்த பைக்கர் அர்ஜுன், மாற்றுத் திறனாளி சாராவைக் காதலிக்கிறான். ஆனால், அது அவளுடைய அம்மாவின் அங்கீகாரத்தை உடனே பெறுவதில்லை. இந்தச் சிக்கல்கள் என்னவாகின்றன என்பதே கதை.
தனிச்சிறப்பு
அஞ்சலியின் தனிச்சிறப்பு அவருடைய பெண் கதாபாத்திரங்களும், அவர்களுடைய ஆளுமையை அங்கீகரிக்கும் ஆண் கதாபாத்திரங்களும்தான். அவருடைய எல்லாப் படங்களிலும் இதைப் பார்க்கலாம். அவருடைய நாயகிகள் தங்களுக்கு எதிரான விஷயங்களைப் புத்திசாலித் தனமாகக் கையாள்பவர்களாக, பெண்களுக்கே உரிய இயல்பு களை இழக்காதவர்களாக, உத்வேகம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எந்தப் படத்திலும் அவருடைய பெண்கள் குறைந்தவர்களாகக் காட்டப்படவில்லை.
தெரியுமா?
இவருடைய பல படங்களில் நித்யா மேனனும், துல்கர் சல்மானும் நடித்திருக்கிறார்கள். மலப்புரத்தைச் சேர்ந்த ருபியா என்ற சாஸ்திரிய நடனக் கலைஞரைப் பற்றி 1997-ல் ‘தி டைம் டு பிளாசம்’, தெருவோரக் குழந்தைகள் பற்றி ‘கல்யாணி’ ஆகிய குறிப்பிடத்தக்க ஆவணப் படங்களை அஞ்சலி எடுத்திருக்கிறார். கணவர் வினோத் மேனனுடன் இணைந்து லிட்டில் ஃபிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை மும்பையில் 2006-ல் தொடங்கினார். தற்போது மும்பையிலேயே வசிக்கிறார்.